ஆரகன்:விமர்சனம்

ஆரகன்:விமர்சனம்

ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரிக்க, அருண் கே ஆர் இயக்கத்தில்,  மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, யாசர்  உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம், ஆரகன்.

வெகுகாலம் முன்பு, ‘எப்போதும் இளமையாக இருக்க வேண்டும்’ என்று பே ராசை கொண்ட ஒருவன், அதற்காக முனிவரிடம் வரம் பெறுகிறான்.  அந்த முனிவரின் ஆலோசனைப்படி, பனிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அந்த மருந்தைப் புதுப்பித்து அருந்துகிறான்.   அதற்கான வழிமுறைகள்  கொடூரமானவை. இன்னொரு பக்கம்…

அனாதை இல்லத்தில் வளர்ந்த ஓர் இளம் பெண்ணும் இளைஞனும் காதலிக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு, காட்டில் தனியாக வாழும் ஒரு பெண்மணியை கவனித்துக் கொள்ளும் வேலை கிடைக்கிறது. சம்பளம் அதிகம், அதை வைத்து காதலனுடன் சேர்ந்து புதிய தொழில் துவங்கலாம் என்கிற எண்ணத்தில் அதற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.

அங்கே நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள்தான் கதை.

நாயகி கவிபிரியா மனோகரன் சிறப்பாக நடித்து உள்ளார்.  இயல்பான தோற்றம், பேச்சுத் தொணி, முகபாவம், அப்பாவிச் சிரிப்பு… என மனதை அள்ளுகிறார்.  நடிப்பிலும் முத்திரை பதித்து இருக்கிறார்.

நாயகன் மைக்கேல் தங்கதுரையும் அருமையாக  நடித்து உள்ளார்.

ஸ்ரீ ரஞ்சனிக்கு வித்தியாசமான கதாபாத்திரம். வழக்கமான அதே பாசமான அம்மா கதாபாத்திரம்தான். ஆனால் அதன் பின்னால் அதிர்ச்சிகரமான அமானுஷ்யம் இருக்கிறது. அவர் அன்பாக சிரிப்பது போல தோன்றினாலும் ஓர் அச்சம் ஏற்படுகிறது.வழக்கம்போல அதீத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கலைராணி.

காடு, தனி வீடு என்று அனைத்தையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறது கேமரா.  அதே போல இசையும் படத்துக்கு பலம்.

வழக்கமான காதல் கதையோ என்று ஆரம்பத்தில் நினைக்கத் தோன்றுகிறது… பிறகு மெல்ல மெல்ல தனித்துவ பாணியில் – சித்தர், அமானுஷ்யம் – வேறு திசையில் கொண்டு சென்று திகிலூட்டுகிறார் இயக்குநர்.

அதே நேரம் சித்த மருத்துவம் என்பது உயிர் காக்கும் மருந்து. அதை அடிப்படையாக வைத்து விபரீத எண்ணங்களை விதைக்க வேண்டுமா என்பதையும் யோசிக்க வேண்டும்.

மற்றபடி திகிலான திரைப்படம்.