அயோத்தியில் தொடங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிரம்மாண்ட தேசபக்தி யுத்தம்!  

அயோத்தியில் தொடங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிரம்மாண்ட தேசபக்தி யுத்தம்!  

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படக் கூட்டணி இப்போது உருவாகியுள்ளது! ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் சர்ஜாவும், பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான அனுப் மோகனும் இணைந்து தேசப்பற்று மிக்க ஒரு மாபெரும் படைப்பைக் களமிறக்குகின்றனர். பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், சினிமா ரசிகர்களுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் விருந்தாக அமையவுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழாவே இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகப் பதியப்போகிறது. இப்படத்தின் பிரம்மாண்ட பூஜை விழா, நவம்பர் இருபத்தேழாம் தேதி அயோத்தியில் உள்ள புனித ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது! ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஒரு திரைப்படத்தின் பூஜை விழா நடைபெறுவது இந்தியத் திரையுலகில் இதுவே முதன்முறை என்பதால், ஒட்டுமொத்த சினிமா உலகமும் அயோத்தியை நோக்கித் திரும்பியுள்ளது.

தனது அதிரடி ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த அர்ஜுன் சர்ஜா, இப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதுடன் இயக்குநர் தொப்பியையும் மீண்டும் அணிந்துள்ளார். அர்ஜுன் இயக்கத்தில் தேசபக்தித் திரைப்படம் என்றாலே திரையரங்குகளில் அனல் பறக்கும் என்பது ரசிகர்கள் அறிந்ததே! இவருடன் பாலிவுட் மற்றும் பல்வேறு பிராந்தியத் திரைப்படத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களும், தலைசிறந்த கலைஞர்களும் கைகோர்க்க உள்ளனர்.

இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மேஜர் விஜய் பார்கவன் எழுதியுள்ளார். ராணுவப் பின்னணி கொண்ட ஒருவர் கதை எழுதியிருப்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த தத்ரூபத்துடனும், வீரம் மற்றும் தியாகத்தின் உண்மையான உணர்வுகளுடனும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அனுப் மோகன் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்க, ஜோஸ் எம். தாமஸ் ராய் செயல் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக, இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பும் அயோத்தியில் நடைபெறும் பூஜை விழாவிலேயே பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இந்தியத் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள், நட்சத்திரங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வோடு, இந்தியாவின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ஒரு மாபெரும் திரைப் பயணம் அயோத்தியில் இனிதே தொடங்குகிறது!