ஜெடூசி : திரைப்பட விமர்சனம்
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்குப் பாடம் புகட்டும் விதமாக, அந்தக் கொடூரங்களுக்குக் காரணமானவர்களின் மூச்சை அடக்கும் கதையுடன் வந்திருக்கும் படம் ஜெடூசி.
போலீஸுக்கே சவால் விடும் வகையில் சில தொடர் கொலைகள் அரங்கேறுகின்றன. கொல்லப்பட்ட எல்லாமே மலைப்பகுதிப் பெண்கள். அதுவும் ஜெடூசி என்கிற கொண்டை ஊசியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
காவல்துறைக்குப் போட்டியாகத் துப்பறியும் ஊடகத்தைச் சேர்ந்த இன்னொரு நாயகி சினி யுதன் தரும் தடயங்களை வைத்து, கொலை நடந்த இடங்களில் சேகரித்த ரத்த மாதிரி மூலம் ஹீரோ ஸ்ரீதரைச் சுற்றி வளைத்துப் பிடிக்கிறது போலீஸ்.
கோர்ட்டில் மட்டுமே எல்லா உண்மையையும் சொல்வேன் என நிற்கும் ஸ்ரீதரின் பின்னணி, ஜவ்வாது மலையடிவாரத்தில் தொடங்கும் பிளாஷ்பேக் வழியாக விரிகிறது.
மாமன் மகளான ஸ்வேதா கல்லூரியில் படிக்கச் சென்ற இடத்தில், அமைச்சர் ஏ.வெங்கடேஷால் அவர் சந்தித்த கொடுமைகள் அம்பலமாகின்றன. பெரும் அதிகாரம் கொண்ட அந்த அமைச்சரைச் சட்டத்தின் முன் நிறுத்த முடிந்ததா, அதற்கு முன்பு ஸ்ரீதர் நிகழ்த்திய கொலைகள் அவருக்கு என்ன மாதிரியான சிக்கல்களைக் கொண்டு வந்தன என்பதே கதையின் மீதி.
பழங்குடி இளைஞனாகவும், அநியாயத்தைப் பார்த்துக் கொந்தளிக்கும் கோபக்காரனாகவும் ஸ்ரீதர் இயல்பாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸில் கோர்ட்டுக்குள் நீளமான வசனத்தைப் பேசும்போது கொஞ்சமும் தடுமாறாமல் செய்திருப்பது கவனிக்க வைக்கிறது.
பார்க்கக் கவர்ச்சியாக இருக்கும் ஸ்வேதாவுக்குக் கச்சிதமான கதாபாத்திரம். மலைவாழ் உடைக்கும், நவீன உடைக்கும் பொருந்திப் போகும் அவர், மிகையான நடிப்பு இல்லாமல் யதார்த்தமாக இருப்பது ரசிக்க வைக்கிறது.
வில்லன் கதாபாத்திரத்தில் ஏ.வெங்கடேஷ் வழக்கம் போலக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனால், முன்பு மாணவியாக இருந்தபோது தவறாக நடந்த ஒருவரை, இப்போது நீதிபதியாக இருக்கும் நிலையில் கோர்ட் வாசலில் வைத்துப் பேசுவது சற்று மிகையாகத் தெரிகிறது.
இவர்களோடு சினி யுதன், பிளாக் பாண்டி, பவா செல்லதுரை, ஜெயந்திமாலா, அருவி மதன், அசோக் பாண்டியன் ஆகியோரும் தங்களுக்குக் கிடைத்த பாத்திரங்களில் வலம் வருகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நாகஅர்ஜுன் V.S, காடு மேடுகளில் சுற்றித் திரிந்து படமாக்கியிருப்பதில் அவரது உழைப்பு பளிச்சிடுகிறது.
விக்னேஸ்வரன் இசையில் பாடல்கள் சுமாராக இருக்கின்றன. பின்னணி இசை கதைக்குத் தகுந்தபடி அமைந்தாலும், இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி மெருகேற்ற வேண்டிய இடங்கள் இருக்கின்றன.
தயாரிப்பாளராகவும், கதை, திரைக்கதை, வசனம் எழுதியவருமான நட்ராஜ் ஏகாம்பரம், பெண்கள் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையைக் கையில் எடுத்து இயக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
என்றாலும், இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஒரு அமைச்சருக்கு எல்லாமே தன் கட்டுப்பாட்டில் இருப்பது போலக் காட்டுவது யதார்த்தத்தோடு ஒட்டவில்லை. நீதிபதியின் கௌரவத்தையும் திரைக்கதையில் இன்னும் கவனமாகக் கையாண்டிருக்கலாம். ஸ்வேதாவுக்கு நேர்ந்த துன்பத்துக்கு உடன் படிக்கும் மாணவிகளும் துணை போனார்கள் என்பது ஏற்க முடியாததாக இருக்கிறது.
இருந்தாலும், சமூக அக்கறையோடு கமர்ஷியல் அம்சங்களையும் கலந்து படத்தைக் கொடுத்திருக்கும் அவருக்கு வாழ்த்துகள்.
ஜெடூசி – எளிய பட்ஜெட்டில் ஒரு அழுத்தமான முயற்சி!

