“டைம் பாஸுக்குத்தான் கதை கேட்டேன்.. ஆனா..”:‘ஹலோ காதல்’ விழாவில் உண்மையை உடைத்த ஆர்யா!
தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் பாத்திரங்களிலேயே பயணித்து வந்த நடிகர் ஆர்யா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு மென்மையான காதல் கதையில் கைகோர்த்திருக்கிறார். ‘பிரணய விலாசம்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் கவனம் ஈர்த்த இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில், நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோருடன் இணைந்து ஆர்யா நடித்துள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய அறிமுக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஆர்யா, இந்தப் படத்தில் தான் இணைந்த சுவாரசியப் பின்னணியையும், மறைந்த இயக்குநர் ஜீவா குறித்த தனது நினைவுகளையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்யா, “நீண்ட காலமாகவே சண்டைக்காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்தேன். வீட்டில் என் மனைவியும்கூட, ‘எப்போதும் சண்டை போடும் கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுக்கிறீர்கள்; கொஞ்சம் கலகலப்பான, மென்மையான படங்களில் நடியுங்கள்’ என்று அடிக்கடி வலியுறுத்துவார். எனக்கும் அத்தகையதொரு மாற்றம் தேவைப்பட்டது,” என்றார்.
தொடர்ந்து மறைந்த இயக்குநர் ஜீவாவை நினைவுகூர்ந்த அவர், “மென்மையான காதல் படங்கள் என்று நினைக்கும்போதெல்லாம், மறைந்த இயக்குநர் ஜீவா சாரின் நினைவுதான் முதலில் வருகிறது. அவர் மட்டும் இன்று நம்முடன் இருந்திருந்தால், ‘உள்ளம் கேட்குமே’ பாணியில் குறைந்தது பத்து படங்களிலாவது அவருடன் இணைந்து பணியாற்றியிருப்பேன். நடிகர் ஷாமும்கூட இதை அடிக்கடி குறிப்பிடுவார். ஜீவா சார் இருந்திருந்தால் தமிழ் சினிமாவிற்குப் பத்து புதிய கதாநாயகர்களை உருவாக்கிக் கொடுத்திருப்பார்; இன்னும் பல அழகிய படைப்புகள் நமக்குக் கிடைத்திருக்கும்,” என உருக்கமாகத் தெரிவித்தார்.
‘ஹலோ காதல்’ வாய்ப்பு அமைந்தது குறித்துப் பகிர்ந்த ஆர்யா, “படப்பிடிப்பு ஒன்றிற்காகக் கேரளா சென்றிருந்தபோது, இயக்குநர் நிகில் ஒரு கதை வைத்திருப்பதாக நண்பர்கள் கூறினர். விமான நிலையம் செல்வதற்கு இரண்டு மணி நேரம் அவகாசம் இருந்ததால், நேரத்தைக் கழிக்கலாமே என்ற எண்ணத்தில்தான் கதையைக் கேட்க அமர்ந்தேன். ஆனால், அந்தக் கதையின் கரு என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அதன் பிறகே நிகில் இயக்கிய ‘பிரணய விலாசம்’ படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தின் அழகியல் என்னை ஈர்த்ததால், உடனடியாக இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தேன்,” என்றார்.
மலையாளத்தில் சுனு மற்றும் ஜோதிஷ் ஆகியோர் எழுதிய இக்கதைக்கு, தமிழின் உயிரோட்டமான வசனங்களை இயக்குநர் ஹலிதா ஷமீம் எழுதியுள்ளார். ‘ராஜா ராணி’ திரைப்படத்திற்குப் பிறகு, நீண்ட இடைவெளி கடந்து மீண்டும் ஒரு மென்மையான உணர்வுபூர்வமான படத்தில் நடித்திருப்பது தனக்குப் புதிய உற்சாகத்தைத் தருவதாக ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

