நூறு கோடி வானவில்: விமர்சனம்
மாதவ் மீடியா சார்பில் பாலாஜி காபா மற்றும் அருண் அருணாச்சலம் புரொடக்சன் சார்பில் அருண் அருணாச்சலம் தயாரிக்க, சசி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘நூறு கோடி வானவில்’ ஆகும். இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கதை
கோவாவை மையமாகக் கொண்டு நகரும் ஒரு முக்கோண காதல் கதை இது. மும்பையில் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருக்கும் ஹீரோ வினோ (ஹரிஷ் கல்யாண்), குடும்பப் பின்னணியில் தந்தையின் வதைகளால் பாதிக்கப்பட்டு கோவாவில் உள்ள ஒரு லோக்கல் சேனலை கவனிக்க அனுப்பப்படுகிறார். அதே ஊரில் சிறுவயது காதலன் ரினில் மோகனை தீவிரமாக காதலித்து வரும் ஃபென்னி (சித்தி இத்னானி), டெலிவிஷன் ஆங்கர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடுகிறாள்.
ஒரு விவாதத்தின் போது ஏற்படும் கோபத்தால் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறான் காதலன். அவனது மருத்துவச் செலவிற்காக வினோவின் சேனலில் ‘ஸ்கூட்டர் கேர்ள்’ என்ற நிகழ்ச்சியை ஃபென்னி தொடங்க, இருவரும் நெருங்குகிறார்கள். இறுதியில் கோமாவில் இருந்து காதலன் கண் விழிக்கும் போது, இவர்களின் காதலும் குழப்பமும் என்னவாகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிப்பு
-
ஹரிஷ் கல்யாண்: வினோ கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாகப் பொருந்தி, தனது இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். காதலுக்கும் அழுத்தமான உணர்வுகளுக்கும் இடையே தவிக்கும் இடங்களிலும், காதலனுடன் மோதும் காட்சிகளிலும் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
-
சித்தி இத்னானி: ஃபென்னி கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் தந்துள்ளார். அட்டகாசமான அழகும், குழப்பமான காதலில் தவிக்கும் மனநிலையை வெளிப்படுத்தும் உடல் மொழியும் படத்தின் பெரிய பலம்.
-
மற்ற நடிகர்கள்: தம்பி ராமையா, கோவை சரளா மற்றும் விஜே பார்வதி ஆகியோரின் ஒன்லைனர் காமெடிகளும், ஆங்காங்கே வரும் சிரிப்புத் துளிகளும் ரசிக்கும்படி உள்ளன.
ஒளிப்பதிவு
பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. கோவாவின் அழகையும், காட்சியமைப்புகளின் வண்ணப்பயன்பாட்டையும் நேர்த்தியாகக் கையாண்டு, காட்சிகளின் உணர்வுகளுக்குத் தகுந்த பலத்தைக் கொடுத்துள்ளார்.
இசை
சித்து குமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் மிகவும் அருமையாக வந்துள்ளன. பின்னணி இசைக்கான ஒலிகள் மற்றும் பாடகர்களின் குரல் பயன்பாடு ஆகியவை ஒரு தனித்தன்மையோடு படத்தின் சூழலுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
படத்தொகுப்பு
சுபாரக்கின் படத்தொகுப்பு ஷார்ப்பாகவும் கச்சிசமாகவும் உள்ளது. படத்தின் இயக்குநர் வினோ கோபத்தில் கட் சொல்வது போல காட்சிகளைத் துல்லியமாகத் தொகுத்து ஓட்டத்தை வேகப்படுத்தியுள்ளார்.
இயக்கம்
இயக்குநர் சசி தனது வழக்கமான முத்திரையுடன் திரைக்கதையை எழுதியுள்ளார். ஃபென்னி வீடியோ பதிவிடும் ஆரம்பக் காட்சிகள், குட்டி குட்டி டிவி நிகழ்ச்சி ஐடியாக்கள், ஃபென்னி – வினோ இடையேயான கண்ணியமான நெருக்கம் மற்றும் வினோவின் அம்மா-அப்பா கதையை இறுதியில் இணைத்த விதம் ஆகியவை இயக்குநரின் மேதமைக்குச் சான்றாகும். காதலனுக்கும் வினோவுக்கும் இடையேயான மோதலில் ஃபென்னியின் உடல்மொழி நகர்வுகள் அற்புதம்.
பைனல் பஞ்ச்
நூறைப் பத்தால் வகுத்தால் ஈவு பத்து; மீதி பூஜ்யம் என்பது போல, கதை பழக்கப்பட்ட பழைய முக்கோணக் காதலாக இருந்தாலும், சசியின் நேர்த்தியான இயக்கமும், ஹரிஷ் – சித்தியின் நடிப்பும் சேர்ந்து இந்த வார ஓடிடி விடுமுறை நாளைக் கொண்டாட்டமாக்க ஒருமுறை தாராளமாகப் பார்க்கக்கூடிய ஒரு ‘வானவில்’ விருந்து!
ரேட்டிங்: 3.9/5

