‘ஜான் டோ’: திரில்லர்! அர்ஜூன்தாஸை நிஜமாகவே மிரட்டிய பெண்கள்!
அர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில், மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’. வரும் நவம்பர் 13 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களின் சுவாரஸ்யமான அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
நடிகை அனுபமா: “இந்தப் படம் மிகவும் ஆழமான ஒரு உளவியல் கதைக்களம் கொண்டது. திரையரங்கிற்குள் செல்லும்போது ஒரு நபராகச் செல்லும் நீங்கள், படம் முடிந்து வெளியே வரும்போது நிச்சயமாக வேறொரு நபராக மாறியிருப்பீர்கள். அந்த அளவுக்கு உங்கள் மனதை உலுக்கும் தாக்கத்தை இப்படம் ஏற்படுத்தும்.”
நடிகர் படவா கோபி: “அர்ஜுன் தாஸின் கம்பீரமான குரல்தான் இப்படத்தின் மிகப்பெரிய அடையாளம். வாய்ஸ் ஓவர் பேசச் செல்லும் இடங்களில் எல்லாம் ‘அர்ஜுன் தாஸ் போல பேசுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு அவருடைய குரல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உளவியல் போராட்டம் இருக்கிறது; அதை இதில் வித்தியாசமாகக் கையாண்டுள்ளனர். என் அம்மா மறைவுக்குப் பிறகு என்னை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தவர் இயக்குநர் மதுமிதா. இதில் அர்ச்சனாவுக்கு கணவராகவும் நடித்திருக்கிறேன். அடையாளம் தெரியாத ஆண் நோயாளியைக் குறிக்கும் ‘ஜான் டோ’ என்ற பெயருக்கு ஏற்ப படம் மிகவும் புதுமையாக இருக்கும்.”
நடிகை அர்ச்சனா: “என் கதாபாத்திரம் மிகவும் கனமானது. படம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அதன் அதிர்வை நீங்கள் உணர்வீர்கள். ஒரு சிறிய கதாபாத்திரத்தைக் கூட மிக அழுத்தமாக மாற்ற முடியும் என்பதை மதுமிதாவிடம் கற்றுக் கொண்டேன். தமிழ் சினிமாவுக்கு அர்கா நிறுவனத்தை அன்போடு வரவேற்கிறேன்.”
ஒளிப்பதிவாளர் பிரீதா ஜெயராமன்: “நீருக்கடியில் காட்சிகளைப் படமாக்கியது முற்றிலும் புதிய அனுபவம். இதற்காக முன்தயாரிப்புப் பணிகளின்போதே காட்சிகளை உருவகப்படுத்திப் பார்த்தோம். ஸ்கூபா டைவர்கள் உதவியுடன் சவாலான அந்தப் படப்பிடிப்பைச் சிறப்பான திட்டமிடலால் வெற்றிகரமாக முடித்தோம்.”
படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணன்: “படத்தொகுப்பு என்பது கதையை மீண்டும் எழுதுவது போன்றது. மதுமிதாவும் நானும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றுகிறோம். படப்பிடிப்பு நடக்கும்போதே நான் தொகுத்த காட்சிகளை அவருக்கு அனுப்பி விடுவேன். அந்த அளவுக்கு எங்கள் இருவருக்கும் இடையே புரிதல் இருக்கிறது.”
ஆடை வடிவமைப்பாளர்கள் ப்ரியா கரண் மற்றும் ப்ரியா ஹரே: “கதையின் மர்மத்தையும், கதாபாத்திரங்களின் மனநிலையையும் வெளிப்படுத்தும் வகையில் ஆடைகளின் நிறங்களை வடிவமைத்துள்ளோம். ஆடைகள் தனியாகத் தெரியாமல் கதாபாத்திரங்களோடு இயல்பாகப் பொருந்துவதே சிறந்த வடிவமைப்பு.”
ஒலி வடிவமைப்பாளர் அதுல் கிருஷ்ணா: “சிங்க் சவுண்ட் முறையில் படப்பிடிப்பிலேயே குரல்களையும் சூழல் ஒலிகளையும் நேரடியாகப் பதிவு செய்துள்ளோம். இதனால் நடிகர்கள் தங்களின் உணர்வுகளில் முழுமையாகக் கவனம் செலுத்த முடிந்தது. இது பார்வையாளர்களைக் கதையோடு நெருக்கமாக இணைக்கும்.”
தயாரிப்பு வடிவமைப்பாளர் அஷ்வினி காலே: “குட்டிக்கானம், பீர்மேடு போன்ற மலைப்பகுதிகளில் 38 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு மலையில் வீடு, மற்றொரு மலையில் காவல் நிலையம் என இடங்களைத் தேர்வு செய்து படமாக்குவதும், கனமழையை எதிர்கொள்வதும் சவாலாக இருந்தது. லைன் புரொடக்ஷன் ராஜீவ் சார் நமக்கு உறுதுணையாக இருந்தார்.”
தயாரிப்பாளர் பிரசாத்: “தமிழில் எங்கள் நிறுவனத்தின் முதல் படம் இது. மதுமிதா மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். சந்துரு கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது. உள்ளூர் கலாச்சாரப் பின்னணி தேவைப்பட்டதால் தெலுங்குக்குப் பதிலாகத் தமிழில் தயாரித்தோம். ஏஜிஎஸ் விநியோகப் பொறுப்பை ஏற்றுள்ளது கூடுதல் பலம்.”
குழந்தை நட்சத்திரம் நீரவ்: “படப்பிடிப்புத் தளத்தில் சுதந்திரமாகவும் ஜாலியாகவும் நடித்தேன். அர்ஜுன் தாஸ், ஜாரா, சஞ்சனா ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.”
நடிகை ஜாரா: “தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பைத் தாண்டி, ஒரு படத்திற்கான உண்மையான அங்கீகாரம் பார்வையாளர்களிடம் இருந்துதான் கிடைக்க வேண்டும். திரையரங்கில் நீங்கள் செலவிடும் நேரத்திற்கு ஏற்ப சிறந்த அனுபவத்தை இப்படம் நிச்சயம் வழங்கும்.”
நடிகை ஸ்ருஷ்டி: “நான் முதன்முதலில் வீட்டை விட்டுப் பயணம் செய்ததும், விமானத்தில் சென்றதும், கடலைப் பார்த்ததும் சென்னையில்தான்! இப்போது என் முதல் திரைப்படமும் தமிழில் அமைந்திருப்பது பூர்வஜென்மத் தொடர்பு போலிருக்கிறது. இதில் என் தர்ஷனா கதாபாத்திரம் மிகவும் சிறப்பானது.”
நடிகை சஞ்சனா நடராஜன்: “அர்ஜுன் தாஸுடன் நான் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. இருவருமே காவல் அதிகாரிகளாக நடித்துள்ளோம். 35 நாட்கள் மிகத் திட்டமிடலோடு படப்பிடிப்பு நடந்தது. குடும்பத்தோடு திரையரங்கில் வந்து பார்க்க வேண்டிய அருமையான சைக்கலாஜிக்கல் திரில்லர் இது.”

நடிகர் அர்ஜுன் தாஸ்: “அர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில் நடிப்பது பெருமை அளிக்கிறது. தமிழ் தெரியாவிட்டாலும் ஸ்ருஷ்டி வசனங்களைப் பயிற்சி செய்து ஒரே டேக்கில் நடித்தார். ‘கைதி’ படத்திற்கு என் முதல் விருதை வழங்கிய அர்ச்சனா மேடம் இதில் என் அம்மாவாக நடித்திருக்கிறார். என் சகோதரி மாளவிகாவும் இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். நிச்சயம் உங்கள் அனைவரையும் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திரில்லராக இது இருக்கும்.”
இயக்குநர் மதுமிதா: “தமிழ்-கேரளா எல்லையில் உள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பகுதியில் கதை நகர்கிறது. மனித உணர்வுகள்தான் என் கதையின் மையம். சிவப்புக் கரடி பொம்மையை இங்கு வழங்கியதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது; ‘நம்மிடம் சில குறைகள் இருந்தாலும் நாம் நம் இடத்தில் சிறந்தவர்களே’ என்பதை உணர்த்தவே அது வழங்கப்பட்டது. திரையரங்கில் இப்படத்தைப் பார்த்து அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.”
அர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில், நிக்கோலஸ் செவாலியர் – மதுமிதா திரைக்கதையில், முஜீப் மஜீத் இசையில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் வரும் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. திரையரங்கில் இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கத் தயாராகுங்கள்!
ஸ்பெஷல்: பொதுவாக, திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. ஹீரோயினாக இருந்தாலும் பாடலுக்கும், கவர்ச்சிக்குமே பயன்படுத்தப்படுவர். மிகச் சில படங்களே இதற்கு விதிவிலக்கு. அதில் ஒன்றாக மலர்ந்திருக்கிறது ‘ஜான் டோ’.
அர்ஜூன்தாஸ் ஹீரோ என்றாலும், அனுபமா, அர்ச்சனா, ஜாரா, ஸ்ருஷ்டி, சஞ்சனா நடராஜன் என முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் தோன்றி இருக்கிறார்கள். தவிர, மேக் அப் உமன், காஸ்ட்யூம் டிசைனர், பாடகி என மிகச் சில துறைகளில்தான் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
ஆனால், இந்தப் படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆகியோரும் பெண்களே. இது பாராட்டுக்குரிய விசயம்.
அதனால்தானோ என்னவோ அர்ஜூன்தாஸ் பேசும்போது, “இயக்குநர் மதுமிதாவுடன் ஏற்கெனவே ஒரு இந்தி படத்தில் பணிபுரிந்து இருக்கிறேன். அவரது மேக்கிங் ஸ்டைல் தெரியும். அதனால் இந்தப் படத்தில் திட்டு வாங்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
ஆக, பயந்து பயந்துதான் நடித்திருக்கிறார் அர்ஜூன்தாஸ்!

