எஸ்.கே.வின் ‘அடடே’ முயற்சி! விஜயிடம் இந்தக் கோரிக்கைகளை வைப்பாரா?
ரசிகர்களால் எஸ்.கே. என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் – தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அதிரடியான – அவசியமான ஒரு விசயத்தைச் செய்து, பாராட்டுக்களைப் பெற்று இருக்கிறார். அவரது வழிகாட்டுதலின்படி, நற்பணி மன்றத்தின் ‘கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு’ துவங்கப்பட்டது. நடிகரின் ரசிகர் மன்றத்தில், இப்படி கலை, இலக்கியத்துக்காக ஒரு அணி துவங்கப்பட்டது இதுதான் முதல் முறை.
இதன் அடுத்தகட்ட செயல்பாடாக, சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தின்தென் சென்னை கிழக்கு மாவட்ட ‘கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவினர், சென்னை பெசன்ட் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ் தாத்தா’ உ.வே.சா. நூலகத்திற்கு சிறப்பு ஆய்வு சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
இப்பயணத்தின் போது, சங்க இலக்கியங்களையும் அரிய ஓலைச்சுவடிகளையும் தேடித்தேடித் தொகுத்து தமிழுக்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் அரிய நூல்கள், பழங்காலச் சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முறைகளை நூலக நிர்வாகிகள் நற்பணி இயக்கத்தினருக்கு முழுமையாக விவரித்து விளக்கமளித்தனர்.
யார் இந்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதன்?
தமிழின் மீட்பர்: தமிழ் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் (U. V. Swaminatha Iyer) அவர்கள், கால வெள்ளத்தில் அழிந்துபோகும் நிலையிலிருந்த பழந்தமிழ் இலக்கியங்களை ஊர் ஊராகச் சென்று தேடிப் பிடித்து அச்சுப்பதிப்பித்த பெருமைக்குரியவர்.
அரும்பணி: சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, புறநானூறு உள்ளிட்ட பல சங்க காலச் செவ்வியல் இலக்கியங்களை முதன்முதலில் ஓலைச்சுவடிகளிலிருந்து மீட்டு அச்சு வடிவத்தில் அச்சிட்டுத் தமிழுக்குப் புத்துயிர் ஊட்டினார்.
இலக்கியப் பங்களிப்பு: உ.வே.சா. அவர்கள் 90-க்கும் மேற்பட்ட நூல்களை அச்சுப்பதிப்பித்ததுடன், பழந்தமிழ் இலக்கிய வரலாட்டையும் தனது சுயசரிதையான ‘என் சரித்திரம்’ மூலமாகவும் தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பங்களித்துள்ளார்.
உ.வே.சா நூலகத்தில், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தினர்…
உ.வே.சா. நூலக வரலாறு:
நிறுவப்பட்ட ஆண்டு மற்றும் வரலாறு: தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கடந்த 1943-ஆம் ஆண்டு இந்நூலகம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அடையாறில் செயல்பட்டு வந்த இந்த நூலகம், பின்னர் 1967-ஆம் ஆண்டு மே 22 அன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள அருண்டேல் கடற்கரை சாலைக்கு மாற்றப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
நூலகத்தில் என்ன இருக்கிறது?
-
-
இங்கு உ.வே.சா. சேகரித்த 1,832 அரிய நூல்கள் மற்றும் 939 தமிழ்ச் சுவடிகள் (ஓலைச்சுவடிகள்) பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
-
மேலும், உ.வே.சா. தம் கைப்பட பிற தமிழ் அறிஞர்களுக்கு எழுதிய மற்றும் பெற்ற 3,000-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மற்றும் அவருடைய நாட்குறிப்புகள் வரலாற்று ஆவணங்களாகப் பேணப்படுகின்றன.
-
அச்சுப் பதிப்பிக்கப்படாத பல அரிய ஓலைச்சுவடிகளும், மிகப்பழமையான அச்சிடப்பட்ட நூல்களும் இங்குப் பாதுகாக்கப்பட்டு டிஜிட்டல் முறைக்கும் மாற்றப்பட்டு வருகின்றன.
-
முகவரி:
உ.வே. சாமிநாதையர் நூலகம், எண் 2, அருண்டேல் கடற்கரை சாலை, கலாசேத்திரா காலனி, பெசன்ட் நகர், சென்னை, தமிழ்நாடு – 600090.
கூகுள் மேப்:
https://www.google.com/maps/place//data=!4m2!3m1!19sChIJyZEd3PdnUjoRbWSxiSKqx5U
நூலகம் எப்போது திறந்திருக்கும்?
-
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
-
நாள்: திங்கள் முதல் சனி வரை.
-
விடுமுறை தினம்: ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நூலகம் மூடப்பட்டிருக்கும்.
தமிழறிஞர்கள் கோரிக்கை:
தமிழறிஞர்கள், “உ.வே.சா. நூலகத்தின் நூல்கள் கடந்த ஆட்சிகாலத்தில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டும், மறு பதிப்பு செய்யப்பட்டும் வந்தன. தற்போது அந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. புதிய அரசு, அப்பணிகளை ஊக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும்.
மேலும் மாணவர்கள் உள்ளிட்டோர் வசதிக்காக ஞாயிற்றுக் கிழமையும் நூலகத்தைத் திறக்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் இயங்க ஆவண வேண்டும். அதற்கேற்ப ஊழியர்களை நியமிக்க வேண்டும்/
‘மலம பித்தாதே மலம பித்தா பித்தாதே’ என பாடல்(!) எழுதியவர் சிவகார்த்திகேயன். அதற்கு வாயசைத்தவர் விஜய். ஆனாலும் இருவருமே தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் என நம்புகிறோம். எங்களது கோரிக்கையை சிவகார்த்திகேயன் வலியுறுத்த வேண்டும், விஜய் நிறைவேற்ற வேண்டும்” என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.
நடக்கும் என நம்புவோம்!
– டி.வி.சோமு

