ரஜினியை தாக்கிய, ரஜினி பட டைரக்டர்!: ‘பனிவிழும் இரவு’ பட நிகழ்வில் அதிர்ச்சி!
தமிழ் திரையுலகில் புதிய படைப்புகளின் வரத்து எப்போதுமே ஒரு திருவிழாக்கோலம்தான். அந்த வகையில் பவி கிரியேஷன்ஸ் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பனிவிழும் இரவு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கோலாகலமாகத் தொடங்கியது. த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், திரையுலகின் தற்போதைய நிலவரங்களையும் உற்சாகமாக விவாதித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய தயாரிப்பாளர் சதா முருகன், பனிவிழும் இரவு என்பது மாறுபட்ட, கவித்துவமான தலைப்பு என்றும், தமிழ் சினிமாவின் அழகைத் தாங்கும் தலைப்புகள் குறைந்துவரும் காலகட்டத்தில் இதனைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். இதுவரை சொல்லப்படாத கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளதாகவும், ஒரு திரைப்படத்தை வெளியிடுவது மிகப்பெரிய சவாலாக இருந்தாலும், சிறிய படங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு எப்போதுமே தேவை என்றும் கேட்டுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல், மதுரையில் புகைப்படக் கலைஞராகத் தொடங்கி, இன்று சொந்தமாகப் படம் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்த தனது பயணத்தையும், கொடைக்கானல் குளிரில் படக்குழுவினர் பட்ட சிரமங்களையும் சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டார். திரை ஆர்வலர் கேபிள் சங்கர் பேசுகையில், இந்த ஆண்டு சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்று வருவது ஆரோக்கியமான விஷயம் என்றும், கதாநாயகன் அருண் கார்த்தியின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்றும் சிலாகித்துப் பேசினார்.
நடிகர் உறியடி சுருளி மற்றும் நடிகர் கருப்பு நம்பியார் ஆகியோர் தங்களது பாணியில் பேசும்போது, சிறிய படங்களுக்கு மக்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தி, படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தயாரிப்பாளர் சிவசாமி மற்றும் இயக்குநர் சுரேஷ் பாபு இருவரும் இயக்குநரின் கடின உழைப்பையும், தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பையும் புகழ்ந்து தள்ளினர்.
விநியோகஸ்தர் தனசேகரன் பேசுகையில், படத்தின் தரத்தைப் பார்த்தவுடனேயே இது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பி களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார். மலையாளப் படங்களைப் போலவே நம்ம ஊரிலும் தரமான படங்கள் வர முடியும் என்பதற்கு இப்படம் சிறந்த உதாரணமாக இருக்கும் என்றார். அவருடன் இணைந்து பணியாற்றும் விநியோகஸ்தர் ராமகிருஷ்ணனும் சிறிய படங்களுக்கு எங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்வோம் என்று உறுதியளித்தார்.
அழகிய நாயகி எனாக்ஷி கங்குலி மேடையில் பேசுகையில், தனக்குத் தமிழ் முழுமையாகத் தெரியாவிட்டாலும், படக்குழுவினர் தந்து ஊக்கத்தினாலும் உதவியினாலும்தான் தன்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது என்று புன்னகையுடன் கூறி அனைவரையும் ஈர்த்தார்.
கதாநாயகன் அருண் கார்த்தி உணர்ச்சிப் பெருக்குடன் பேசுகையில், தன் தந்தையின் நினைவுகளுடன் தொடங்கிய தனது சினிமா பயணத்தையும், கொடைக்கானல் பனிமூட்டத்தில் ஸ்வெட்டர் கூட இல்லாமல் குளிரில் நடுங்கிக் நடித்த அனுபவத்தையும் கண்கலங்கப் பகிர்ந்து கொண்டார். இப்படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிகர்களை மிரள வைக்கும் என்றும் உறுதியளித்தார்.
இயக்குநர் செ.ரா. ராஜேஷ் பேசுகையில், தான் பட்ட கஷ்டங்களையும், தயாரிப்பாளர் தமக்கு அளித்த பலத்தையும் குறிப்பிட்டு, தமிழ் சினிமா நம்மை நிச்சயமாக ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இறுதியில் மேடையேறிய பிரபல இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தனது கம்பீரமான குரலில் பேசுகையில், தமிழ் சினிமாவில் எளிய மனிதர்களின் படைப்புகளும், புது முயற்சிகளும் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார். கிராமத்து மண்ணின் வாசனையோடும், நவீன த்ரில்லர் கலவையோடும் உருவாகியுள்ள பனிவிழும் இரவு போன்ற படங்கள் தமிழ்ச் சினிமாவின் தரத்தை உயர்த்தும் என்று முழங்கி, ஒட்டுமொத்தப் படக்குழுவினரையும் ஆரத்தழுவி வாழ்த்தி அரங்கை அதிரச் செய்தார். அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வலம் வர அனைவரும் கை கொடுக்க வேண்டும்.
இன்னொரு விசயமும் சொல்ல வேண்டும். வரவர ஹீரோவே வில்லனாக ஆகிட்டார்கள். எதற்கெடுத்தாலும் கொலை. சமீபத்தில் வெளியான ஒரு படமும் அப்படித்தான் இருக்கிறது. வெளி மாநில ஹீரோக்களை எல்லாம் கொண்டு வந்து கொலை செய்ய வைக்கிறார்கள்” என ஜெயிலர் 2 படத்தை மறைமுகமாகத் தாக்கினார்.
இவர் ரஜினியை வைத்து படம் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

