ஏ.ஐ காதலின் புதுப் பயணம்: ‘லவ் 3.ஓ’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

 

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் ரசிகர்களைக் கட்டிப்போட்ட ‘ரீல்ஸ் அக்கா’ ஆர்னிகா, இப்போது வெள்ளித்திரையில் புது அவதாரம் எடுத்திருக்கிறார். முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்களைக் கொண்டு உருவாகியிருக்கும் ‘லவ் 3.ஓ’ (Love 3.O) திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாட்டின் முன்னணி திரை பிரபலங்களான இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு, நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மூன்று தலைமுறைகளின் காதல் கதை!

மூன்று தலைமுறைகளாகக் காதலை மனிதர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை சுவாரஸ்யமாகவும், காலமாற்றத்திற்கு ஏற்ப மாறியிருக்கும் காதலின் பரிமாணங்களைச் சித்தரிக்கும் வகையிலும் இந்தப் படம் உருவாகியுள்ளது.

90ஸ் கிட்ஸ் காதல், 2கே கிட்ஸ் காதல் எனப் பயணித்து, எதிர்காலத்தில் காதல் எப்படி இருக்கும் என்பதை ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு) பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள். சாட் ஜிபிடி வரை மனித உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததும் ஏ.ஐ மீது காதல் பிறக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஏ.ஐ பெண்ணை படத்தின் கதாநாயகன் காதலிக்க, அந்தக்காதல் என்னவாகிறது என்பதே கதை.

இதில் சிறப்பம்சமாக, பூலோகத்தில் நடக்கும் காதல் கூத்துகளைப் பார்த்துவிட்டு கயிலாயத்திலிருந்து இறங்கி வரும் பரமசிவன், இதற்கெல்லாம் என்ன தீர்வு சொல்கிறார் என்பது சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டுள்ளது.

மல்டி டாஸ்கிங் நாயகி ஆர்னிகா!

இந்தப் படத்தில் இன்ஸ்டா பிரபலம் ஆர்னிகா கதாநாயகியாக நடித்திருப்பதுடன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று படத்தையும் அவரே இயக்கியிருக்கிறார்.

இவருடன் தயாரிப்பாளர் சிவகுமார் முக்கிய வேடத்தில் நடிக்க, கோயம்புத்தூர் மாப்ள மற்றும் கே.என்.ஸ்மைலி கார்த்திகேயன் ஆகிய இன்ஸ்டா பிரபலங்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைக்க, வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரவிந்த் படத்தொகுப்பையும், பிரசன்ன குமார் நிர்வாகத் தயாரிப்பையும் கவனிக்க, ‘மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ சார்பில் சிவகுமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

“வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி!” – ஆர்னிகா உருக்கம்

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர்-நாயகி ஆர்னிகா, “வாய்ப்புக்காக ஏழாண்டுகளாக ஆயிரம் ஆடிசனுக்குப் போயிருப்பேன். ‘மூக்கை அறுவை சிகிச்சை செய்து வாருங்கள்’, ‘போட்டோஷூட் எடுத்து வாருங்கள்’ என்று விரட்டினார்கள். ஒரு குறும்படத்திற்காக இரண்டு ஆண்டுகள் பின் தொடர்ந்தேன்.

ஒரு சீரியலிலோ அல்லது படத்தில் சின்ன துணை நடிகையாகவோ எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், இன்று நான் கதாசிரியராக, பாடலாசிரியராக, உடை அலங்கார நிபுணராக, கலை இயக்குநராக, இணைத் தயாரிப்பாளராக, கதாநாயகியாக, இயக்குநராக உருவெடுத்திருக்க மாட்டேன். அன்று எனக்கு வாய்ப்பு மறுத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வாழ்க்கையில் ஒன்று தாமதமாகிறது என்றால், பெரிய நல்லது நடக்கப் போகிறது என்று அர்த்தம். நமக்கான தேவையை நாமதான் போராடி அடைய வேண்டும். ரீல்ஸ் பார்த்து எங்களை வாழ்த்திய மக்கள், கண்டிப்பாய் வெள்ளித்திரையிலும் ஆதரவு தருவார்கள். எனக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுத்தால், வெளியில் இருக்கும் என்னைப் போன்ற பல திறமைசாலிகளைத் திரைத்துறைக்குக் கொண்டு வருவேன்” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

ஏ.ஐ காதலை மையமாகக் கொண்டு இன்ஸ்டா பட்டாளம் உருவாக்கியிருக்கும் இந்த ‘லவ் 3.ஓ’ திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts