‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ : ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடி திரைப்படம்!
தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு கலகலப்பான சிரிப்பலைக்கும் மிரட்டலான திகிலுக்கும் பஞ்சம் இல்லாத புதிய திரைப்படம் படுஜோராகத் தொடங்கப்பட்டிருக்கிறது!
பிரபல நடிகர் ஜெய் கதையின் நாயகனாகக் களமிறங்கும் இப்படத்தை, தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாகப் பெருமையுடன் வழங்குகிறது. ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹாரர் காமெடி திரைப்படம், அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா அவர்களின் இயக்கத்தில் மிகச் சிறப்பாக உருவாகிறது.
தென்காசியின் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்ற பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தொடக்க விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கேமராவை இயக்கி படக்குழுவினருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், முன்னணி தொழிலதிபர்களின் முன்னிலையில் தயாரிப்பாளர் கிளாப் அடித்து படப்பிங்கைத் தொடங்கி வைத்துள்ளார்.
இப்படத்தில் ஜெய் ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்க, ஒளிப்பதிவுப் பணியை விஜய் உலகநாத் மேற்கொள்கிறார். படத்தொகுப்பின் பொறுப்பை வி. ஜே. சபு ஜோசப் கவனிக்க, கலை இயக்கத்தை ஜெயச்சந்திரன் அழகுபடுத்துகிறார். சண்டைப் பயிற்சி, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை மற்றும் தயாரிப்பு நிர்வாகம் எனப் பல திறமையான கலைஞர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு இப்படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
தென்காசியில் தொடங்கியுள்ள இந்தப் படப்பிடிப்பு தொடர்ச்சியாக பல நாட்கள் உற்சாகமாக நடைபெறவிருக்கிறது. ஹாரர் கலந்த காமெடியும், ஜெய்யின் துள்ளலான நடிப்பும் இணைந்து ரசிகர்களைக் குலுங்கிக் குலுங்கச் சிரிக்க வைக்கவும், இருக்கையின் நுனிக்கு வரவழைக்கவும் காத்திருக்கிறது. இப்போதே திரையுலக வணிகர்களிடமும் சினிமா ரசிகர்களிடமும் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது!

