“பிரபு – யுவன் கூட்டணியில் டார்க் ஹியூமர் த்ரில்லர்!” – ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் புதிய படப் பூஜை கோலாகலம்!
‘ரைட்டர்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப், அடுத்து இயக்கப் போகும் புதிய த்ரில்லர் – டார்க் ஹியூமர் திரைப்படத்தின் பூஜை சென்னையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது! Romeo Pictures ராகுல் மற்றும் Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் பிக்பாஸ் புகழ் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பூஜை விழாவில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உட்பட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
விழாவில் ஒலித்த சுவாரஸ்யமான மேடைப் பேச்சுகள்:
-
இளைய திலகம் பிரபு: “தம்பி ஃபிராங்க்ளின் ‘ரைட்டர்’ பட இயக்குநர். அவர் சொன்ன கதை ரொம்பவே வித்தியாசமாவும் அருமையாயும் இருந்தது! புதுத்தலைமுறையை ஊக்குவிக்க ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் வந்திருக்கிறது ரொம்ப சந்தோஷம். தயாரிப்பாளர் ராகுல் இந்த கதைக்கு ஏத்த மாதிரி என்னையும் இணைச்சதுல பெருமை. படம் செம அனுபவமா இருக்கும்!”
-
இயக்குநர் பா. ரஞ்சித்: “ஃபிராங்க்ளின் என்னோட உதவி இயக்குநர். ‘ரைட்டர்’, ‘டிசி’, ‘வேட்டுவம்’னு தமிழ் சினிமாவுல அவருக்கு ஒரு தவிர்க்க முடியாத இடம் இருக்கு. ஒரு நல்ல இயக்குநருக்குப் படம் அமையுறது முக்கியமான விஷயம். இளைய திலகம் பிரபு சார், யுவன் சங்கர் ராஜா இணைஞ்சிருக்கிறது படத்துக்குப் மிகப்பெரிய பலம்!”
-
இயக்குநர் அருண் மாதேஸ்வரன்: “ஒரு நல்ல இயக்குநருக்குப் படம் அமையாமல் இருக்கிறது மிகப்பெரிய வன்முறை! ஃபிராங்க்ளினுக்கு இந்தப் படம் அமைஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ‘ராக்கி’ படத்துல பிரபு சார் நடிக்க வேண்டியது, ஆனா நடக்கல. இப்போ ஃபிராங்க்ளின் படத்துல அவர் நடிக்கிறது சர்ப்ரைஸான கூட்டணி! யுவனின் இசை படத்துக்கு மாஸ் எனர்ஜி தரும்.”
-
நடிகர் விஜய் வர்மா: “கடந்த சில வருஷங்களா இந்த ப்ராஜெக்ட் உருவாவதை நான் பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன். அந்தப் பயணத்துல நானும் ஒரு பகுதியா இருந்ததுல ரொம்ப சந்தோஷம். என்னை இணைச்சுக்கிட்ட ஃபிராங்க்ளின் அண்ணனுக்கும் படக்குழுவுக்கும் நன்றி!”
-
இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப்: “கதையை பிரபு சார்கிட்ட சொன்னப்போ ரொம்பவே ரசிச்சு ‘பண்ணலாம்’னு சொன்னாரு! தமிழ் சினிமாவுல இதுவரைக்கும் பார்க்காத ஒரு வித்தியாசமான கோணத்துல பிரபு சாரை இந்த படத்துல பார்க்க போறீங்க. ரஞ்சித் அண்ணன், அருண் மாதேஸ்வரன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.”
-
நடிகர் ரமேஷ் திலக்: “படத்துல இருக்குற எல்லாரும் என் நெருங்கிய நண்பர்கள். ஃபிராங்க்ளின் கூட ஒர்க் பண்றதை விட, பிரபு சார் கூட நடிக்கணும்ங்கிற என் நீண்ட நாள் கனவு இந்த படத்துல நிறைவேறியிருக்கு!”
முத்து குமார், ரமேஷ் திலக், தீனா, திலீப் சுப்பராயன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது!

