பக்தி பரவசத்துடன் தொடங்கிய “நாகபந்தம்” படத்தின் அதிரடி புரமோஷன்!
அபிஷேக் நாமாவின் பிரம்மாண்ட கனவுத் திரைப்படமான “நாகபந்தம்”, ஜூலை மூன்றாம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸாக ரெடியாகி வருகிறது. NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷனுக்காக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை செம்ம கெத்தாக தொடங்கி வைத்திருக்கிறது படக்குழு.
விழாவில் பேசிய நாயகன் விராட் கர்ணா, மழையையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்தார். “கடந்த இரண்டு வருடங்களாக எங்க டீம் முழுக்க இந்த படத்துக்காக வெறித்தனமாக உழைச்சிருக்கோம். ஜூலை மூன்றாம் தேதி தியேட்டருக்கு வந்து உங்க அன்பையும் ஆசீர்வாதத்தையும் கொடுக்கணும். இந்த ரதயாத்திரை மூலமா பல நகரங்களுக்குப் பயணம் செய்யப் போறோம். என்னை நம்பி இந்த பிரம்மாண்ட வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் அபிஷேக் நாமாவுக்கும், செம்ம தைரியத்தோடு படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், கூட நடித்த நபாவிற்கும் பெரிய நன்றிகள்” என்று எனர்ஜியாகப் பேசினார்.
அடுத்து மைக் பிடித்த இயக்குநர் அபிஷேக் நாமா, “இது வெறும் சினிமா புரமோஷன் மட்டும் கிடையாது பாஸ்; நம்ம கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வேர்களோடு அடுத்த தலைமுறையை இணைக்கும் ஒரு மேஜிக் முயற்சி! இந்த பிரம்மாண்டத்தை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ விராட்டை செம்மையாக வேலை வாங்கியிருக்கிறேன். உடம்பு சரியில்லாத நேரத்திலும் அசாத்திய அர்ப்பணிப்போடு நடித்தார். தியேட்டரில் இவருடைய ஆக்ரோஷமான நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிரளப்போவது உறுதி. ஜுனைத் மற்றும் அபியின் இசையும் வேற லெவலில் வந்திருக்கிறது” என்று அனல் பறக்கப் பேசினார்.
இந்த விழாவின் ஹைலைட்டாக, அனந்த பத்மநாப சுவாமியின் பிரம்மாண்ட சிலையையும் படக்குழுவினர் திறந்து வைத்தனர். ஆன்மிக அதிர்வுகளோடு ஒட்டுமொத்த ஹைதராபாத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த நாகபந்தம் ரதயாத்திரை ஆரம்பம்!

