‘எக்ஸாம்’: தமிழ்நாட்டை குலைநடுங்க வைத்த நிஜ சம்பவத்தை கண்முன் நிறுத்தும் வெப் சீரிஸ்!
இந்தியாவையே அதிரச் செய்துள்ளது, நீட் தேர்வுத்தாள் அவுட் ஆன விசயம். இதனால் இத்தேர்வை எழுதிய 22 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் மீண்டும் ஜூன் 3ம் தேதி தேர்வு எழுத வேண்டும். இந்த முறைகேட்டி, தேசிய தேர்வு முகமை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு என குற்றச்சாட்டு எழுந்து அதிர்வலையை அதிகமாக்கி இருக்கிறது.
இத்தேர்வு அறிமுகமான காலகட்டத்திலேயே – 2013ம் ஆண்டிலேயே – பல்வேறு குளறுபடிகள் நடந்தாதக புகார்கள் எழுந்தன. இதனால் தேர்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
அதே நேரம், அரசுத் தேர்வு ஊழல் என்றாலே, அதிர்ச்சியோடு நம் நினைவுக்கு வருவது மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்ததுதான். ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி தகுதியற்ற ஆயிரக்கணக்கானோர் அம்மாநில அரசு பதவிகளில் அமர்ந்தனர். மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவற்றில் முறைகேடாக மாணவர்கள் சேர்ந்தனர். விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து அமைச்சர், உயர் அதிகாரிகள் உட்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இன்னொரு பக்கம் இந்தக் குற்றத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முயன்ற பத்திரிகையாளர், நேர்மையான அதிகாரிகள் என 40-க்கும் மேற்பட்டோர் மர்மமாக மரணமடைந்தனர்.
தமிழகத்திலும் இதே போன்ற, உறைய வைக்கும் ஊழல் கண்டறியப்பட்டது.
2019-ல் நடைபெற்ற தமிழக அரசின் குரூப்-4 தேர்வில் ஓர் அதிசயம் நடந்தது. முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 39 பேர் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள்!
விஷயம் வெளியாகவே.. விசாரணை துவங்கியது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களும் அந்த இரு சென்டர்களில் தேர்வு எழுதியது தெரியவந்தது. அதற்கு முந்தைய ஆண்டும் இதே போன்று முறைகேடு நடந்தது அம்பலமானது.
தமிழக அரசின் சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வந்தது. ஜெயக்குமார் என்கிற இடைத்தரகர்தான் மூளையாக செயல்பட்டார் என அவரும், உடந்தையாக இருந்தார் என்று போலீஸ்காரர் போலீஸ் சித்தாண்டியும் கைது செய்யப்பட்டனர். அவரோடு பள்ளி ஆசிரியர், வாகன ஓட்டுநர், என கீழ்மட்ட நிலையில் பணிபுரிந்தவர்களே கைது செய்யப்பட்டனர், சுமார் 118 பேர்.

ஒரு கட்டத்தில் நீதிமன்றம், “மாநில அரசின் அதிகாரத்துக்கு மீறிய அமைப்பு விசாரிக்க வேண்டும்” என சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
ஆனாலும் இந்த பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் மேல்மட்ட அதிகாரிகள், ஆளும்கட்சியினர் எவரும் கைது செய்யப்படவில்லை. தவிர ஆண்டுகள் பலவாகியும் வழக்கு நடந்துகொண்டே இருக்கிறது.
இதில் தேர்வுத்தாள் மோசடி நடந்தது சினிமா பரபரப்புக்கு ஒப்பானது..
லஞ்சம் கொடுத்த மாணவர்களுக்கு இடைத்தரகர்கள் ஓர் அறிவுரை வழங்கினார்கள். நன்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் டிக் அடித்தால் போதும். தெரியாத கேள்விகளுக்கு அழியும் மையால் குறியிட வேண்டும்.
தேர்வு முடிந்து விடைத்தாள்கள் எல்லாம் வாகனங்களில் ஏற்றப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்படும்.
வழியில் இடைத்தரகர்கள் வாகனத்தை நிறுத்தி, விடைத்தாள் பெட்டிகளை உடைப்பார்கள். லஞ்சம் கொடுத்த மாணவர்களின் விடைத்தாளை எடுத்து, சரியான கேள்விகளில் டிக் அடிப்பார்கள்.
அந்த மாணவர்களுக்கு வேலை கிடைத்துவிடும்.
இப்படி தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் டிக் அடிக்கும் மோசடி, 2024ம் ஆண்டு நீட் தேர்வில் குஜராத்தின் கோத்ரா நகர் மையங்களில் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த திக் திக் ஊழலை மையமாக வைத்துத்தான் “எக்ஸாம்” வெப் தொடரை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சற்குணம்.
தன் தாயுடன் நாடோடியாக வாழும் ஜான்சி, ஒரு கிராமத்தில் சிறிய வேலையில் இருந்துகொண்டே படித்து அரசுத் தேர்வில் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழும் எளிய பெண். ஆனால், அந்த தேர்வு முறையில் நடக்கும் ஊழல் அவரது கனவைச் சிதைக்கிறது.
இதன் பின்னணியைத் தேடிப் புறப்படும் ஜான்சி, தைக்காரா பகுதிக்கு புதிய காவல்துறை உயரதிகாரியாக (DSP) பொறுப்பேற்க வரும் மரமல்லியைக் கடத்துகிறார். பின்னர் மரமல்லி போலவே ஆள்மாறாட்டம் செய்து, அதே பதவியில் அமர்ந்து தேர்வு மைய முறைகேடுகளைப் புலனாய்வு செய்கிறார். இந்த ஆபத்தான ஆள்மாறாட்ட ஆட்டத்திற்குப் பின்னால் தூண்டுகோலாக இருக்கிறார் முன்னாள் சிறைத்துறை அதிகாரி ஜெயச்சந்திரன். இன்றைய சமூக ஊடகக் காலத்தில் இவ்வளவு எளிதாக ஆள்மாறாட்டம் செய்ய முடியுமா என்ற லாஜிக் கேள்விகளுக்கு மத்தியில், ஜான்சி தன் லட்சியத்தை அடைந்தாரா, குற்றவாளிகளை அம்பலப்படுத்தினாரா என்பதே மீதிக்கதை.
துஷாரா விஜயன் (ஜான்சி): கிராமத்து எளிய பெண்ணாக வரும் முன்கதை காட்சிகளில் ஏக்கம், மனவலி, ஏமாற்றம் என எதார்த்த நடிப்பால் நம் மனதைத் தொடுகிறார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே இது மிகச் சிறந்தது எனலாம். அதேநேரம், அவர் உயர் காவல்துறை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்யும் அதிரடிக் காட்சிகள் சில இடங்களில் ‘குருவி தலையில் பனங்காய்’ வைத்தது போன்ற தோற்றத்தைத் தந்தாலும், தன் கண்வீச்சிலும் உடல்மொழியிலும் கோபத்தையும் உறுதியையும் கச்சிதமாகக் கடத்தியுள்ளார்.
அப்பாஸ் (ஜெயச்சந்திரன்): நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகிற்கு மிகச்சிறந்த மறுபிரவேசம் கொடுத்துள்ளார். மர்மமும் கம்பீரமும் நிறைந்த இவருடைய பாசிட்டிவ் கதாபாத்திரம் கதைக்கு பெரும் பலம் சேர்க்கிறது.
அதிதி பாலன் (மரமல்லி): கதைக்கான வலுவான உணர்ச்சி அடித்தளம் இவர்தான். சவாலான இந்த அமைதிப் புயல் கதாபாத்திரத்தை நேர்த்தியாகச் செய்துள்ளார். ஆனால், பெரும்பாலான காட்சிகள் ஒரு சிறிய அறைக்குள்ளேயே கடத்தப்பட்ட நிலையில் முடிவடைவதால், இவரை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
துரை சுதாகர்: காவல்துறை இன்ஸ்பெக்டராக வரும் இவர், அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே கவனத்தை ஈர்த்துவிடுகிறார். புதிதாக பொறுப்பேற்க வரும் டி.எஸ்.பி. உண்மையில் அவர்தானா.. ஆள்மாறாட்டமா என சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அந்த காட்சியிலேயே மனதில் பதிந்துவிடுகிறார் துரை சுதாகர். அதே போல கிளைமாக்ஸ் சீனிலும் எதிர்பாராத ட்ஸ்விட்டை தருகிறது இவரது கதாபாத்திரம். காட்சிகள் குறைவு என்றாலும், வழக்கம்போல் இயல்பான நடிப்பை அளித்து கவர்கிறார். இவருக்கான நடிப்புத்தீனியை திரையுலகம் வழங்க வேண்டும்.
இதர நடிகர்கள்: வசுந்தரா.சி மற்றும் நரேன் மணி (மலைவாழ் மக்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் குமரேசன்) ஆகியோர் கதையின் நம்பகத்தன்மையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். தேவையற்ற கதாபாத்திரங்கள் என்று எதுவுமே இல்லாதது தொடரின் சிறப்பாகும்.
ஒளிப்பதிவு (அருண் அமரேந்திரன்): இத்தொடரின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமாகவே ஒளிப்பதிவு பயணித்துள்ளது. மலைச்சரிவுகளின் அழகையும், க்ரைம் த்ரில்லருக்குத் தேவையான இருண்ட, பதற்றமான சூழ்நிலையையும் காட்சிப்படுத்திய விதம் ஆகச்சிறப்பு.
இசை (சாம் சி.எஸ்): சாம் சி.எஸ் வழக்கமாகத் தரும் அதிகப்படியான இரைச்சலைக் குறைத்து, அநேகமாக முதல்முறையாக மிகக் குறைவான சத்தத்துடன், காட்சிக்கு ஏற்றவாறு ரசிக்கும்படியான, அதேசமயம் பதற்றத்தை உயர்த்தும் பின்னணி இசையைத் தந்துள்ளார்.
படத்தொகுப்பு (ரிச்சர்ட் கெவின்): தேவையற்ற நீளங்களைக் குறைத்து, ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு கிளைமாக்ஸ் உணர்வோடு கச்சிதமாக நகர்த்தியுள்ளார்.
இயக்கம் (சற்குணம்) : களவாணி என்கிற கிராமிய வாழ்வியலை சுவாரஸ்யமாக சொன்ன களவானிஸ, தேசிய விருது பெற்ற வாகைசூடவா போன்ற படங்களை இயக்கிய சற்குணத்திடமிருந்து இப்படி ஒரு க்ரைம் த்ரில்லர் வெளிவந்திருப்பது முதல் ஆச்சரியம். நிஜத்தில் நடந்த தேர்வு முறைகேடுகளைத் தழுவி, தமிழ் கலாச்சார மரபுகளுடன் கதையை நேர்த்தியாகக் கொண்டு சென்றுள்ளார். தொடக்கக் காட்சியையும் நிறைவுக் காட்சியையும் இணைத்த விதம் அவரின் திரைமொழித் திறமைக்குச் சான்று.
நிறைகள்:
-
முதல் இரண்டு அத்தியாயங்கள் கதையை மெல்ல நகர்த்தினாலும், அடுத்தடுத்த பகுதிகள் முக்கிய குற்றவாளி யார் என்ற விறுவிறுப்பான தேடலில் வேகம் எடுக்கின்றன.
-
உச்சக்கட்டக் காட்சியில் ஜான்சியும் குமரேசனும் வினா-விடை பாணியில் நிகழ்த்தும் உரையாடல்கள் மற்றும் சமூக அக்கறையுள்ள கருத்துக்கள் பாராட்டுக்குரியவை.
-
போட்டித் தேர்வு முறைகேடுகள் எளிய பிள்ளைகளின் கனவுகளை எப்படிக் குழிதோண்டிப் புதைக்கின்றன என்பதை இயக்குநர் அக்கறையோடு பதிவு செய்துள்ளார்.
குறைகள்:
-
நடுப்பகுதியில் (4, 5, 6 அத்தியாயங்கள்) சுவாரஸ்யம் சற்றே குறைகிறது. தேவையற்ற சென்டிமென்ட் காட்சிகள் தொடரின் வேகத்தை கொஞ்சம் குறைக்கின்றன.
-
இன்றைய டிஜிட்டல் ம காலத்தில், ஒரு காவல்துறை உயரதிகாரியையே கடத்திவிட்டு இவ்வளவு சுலபமாக ஆள்மாறாட்டம் செய்ய முடியுமா என்ற மிக முக்கியமான கேள்வி எழுகிறது.
- பணம் ஒன்றே, குற்ற மேஜிக்குகள் பலவற்றை செய்யும் தூண்டுகோல். ஆகவே, குற்றம் செய்பவனுக்குப் பின்னணியில் பரிதாபமான சம்பவம் இருக்கும் என்கிற “சினிமா லாஜிக்கை” தவிர்த்து இருக்கலாம்.
பைனல் கமெண்ட்:
அரசுப் பணி என்பது இந்த நாட்டின் லட்சக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் ஆகப்பெரிய வாழ்வாதாரக் கனவு. “கடினமாகப் படித்துத் தேர்வு எழுதினால் நம் வாழ்க்கை உயர்ந்துவிடும்” என்ற அந்த ஒற்றை நம்பிக்கையை, அதிகார துஷ்பிரயோகத்தாலும் பண பலத்தாலும் சிதைக்கும் தேர்வு முறைகேடுகளையும் வினாத்தாள் கசிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு கதையை உருவாக்கியது சிறப்பு. அதையே சுவாரஸ்யமான சமூகத் த்ரில்லர் வடிவத்தில் அளித்தது இன்னும் சிறப்பு.
‘எக்ஸாம்’: நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளது!
– டி.வி.சோமு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எக்ஸாம் வெப் சீரிஸை வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பாக கௌதம் செல்வராஜ், எஸ் குஹப்ரியா, எஸ் நந்தகுமார் ஆகியோர் தயாரிக்க, புஷ்கர் & காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக உருவாக்கத்தில் துணை நிற்க, எக்ஸாம் வெப் சீரிஸ் உருவாகி உள்ளது.
தமிழ் வெப் சீரிஸான இது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் இன்று (மே 15, 2026) முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
(முகப்பு படங்கள்: எக்ஸ்ஸாம் படத்தில் துஷாரா, நிஜ ஸ்கேமில் கைதான ஜெயக்குமார்)

