விமர்சனம்: விஜய், ரஜினி, சீமான் வரை ‘வைச்சு’ செய்த ‘TN 2026’!
சுமார் 35 வருடங்களுக்கு முன்னால, வி.சேகர் இயக்கத்துல ‘நிழல்கள்’ ரவி நடிச்ச, ‘நீங்களும் ஹீரோதான்’ படத்துக்குப் பிறகு, ஹீரோக்களின் மேக்கப்பை உரித்துக்காட்டும் இன்னொரு திரைப்படமாக வந்திருக்கிறது, ‘தங்க நட்சத்திரம் 2026 (TN 2026)’!
தம்பி ராமையா கதை-வசனத்துல, அவரோட மகன் உமாபதி இயக்கியிருக்கிற படம் இப்போ தியேட்டர்ல. நட்டி நட்ராஜ் ஹீரோ. கூடவே எம்.எஸ்.பாஸ்கர், இளவரசுன்னு ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கு.
ஒன்லைன்:
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள், தங்களுக்கு இருக்கும் புகழை எப்படிப் பயன்படுத்துகிறார்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?
இதைத்தான் நக்கலும் நையாண்டியுமாக ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.
நடிப்பு:
நட்டி நட்ராஜ்: படத்தோட மிகப்பெரிய பலம் நட்டிதான். ஒரு வடமாநில இளைஞராக வந்து, பிறகு தமிழ்நாட்டில் வேர் ஊன்றி, மாஸ் காட்டும் சீன்களில் செம வேரியேஷன் காட்டுகிறார். குறிப்பாக கார்ல இருந்து இறங்கும் சீன் ரஜினியை நினைவுபடுத்தினாலும், நட்டி அதைத் தன் ஸ்டைலில் தூக்கி நிறுத்துகிறார்.
தம்பி ராமையா: படத்தில் ஹீரோ நட்டியுடன் நிழல் போல வரும் கேரக்டர். வழக்கமான தன் பாணி நக்கல், நையாண்டியுடன் மிரட்டியிருக்கிறார்.
நட்டிக்கு அரசியல் அட்வைஸ் கொடுக்கும் இடங்களிலும், விஜய்யின் தற்போதைய அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டும் “மனைவி-டைவர்ஸ்” அட்வைஸ் சீன்களிலும் தம்பி ராமையா ஸ்கோர் செய்கிறார். வசனகர்த்தாவும் அவரே என்பதால், தனக்கு ஏற்றபடி பட்டாசான வசனங்களை எழுதிப் பேசியிருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர்: இந்தப் படத்தின் மற்றொரு தூண். சீரியஸான முகத்தை வைத்துக்கொண்டே அவர் அடிக்கும் கமெண்ட்கள் தியேட்டரில் சிரிப்பலைகளை உருவாக்குகிறது.
அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தைப் போடும் காட்சிகளிலும், இளவரசுடன் இணைந்து அவர் செய்யும் லூட்டிகளும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, நட்டி செய்தியாளர்களைச் சந்திக்கும் சீனில் பின்னணியில் இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் கிரிஸ்ப்.
இளவரசு: எதார்த்தமான நடிப்பில் எப்போதுமே அசத்தும் இளவரசு, இதில் அரசியல் நையாண்டிக்கு நல்ல கம்பெனி கொடுத்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா மற்றும் இளவரசு ஆகிய மூவரும் இணைந்து வரும் காட்சிகளில் ஒருவிதமான ‘காமெடி-பொலிட்டிக்கல்’ கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. மூன்று பேரும் சேர்ந்து செய்யும் அந்தச் சண்டைக் காட்சியும், பின்னணிப் பாடலும் படத்தில் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.
ரெடின் கிங்ஸ்லி: தனது வழக்கமான பாடி லாங்குவேஜ் மற்றும் ‘சத்தம்’ கலந்த காமெடியை இதிலும் தொடர்கிறார்.
படத்தின் சில இடங்கள் தொய்வடையும்போது, ரெடின் கிங்ஸ்லியின் ஒன்-லைனர்கள் அந்த கேப்பை நிரப்புகின்றன. அரசியல் தொண்டர்களாக வரும் இளைஞர்களைக் கிண்டல் செய்யும் காட்சிகளில் இவர் கவனிக்க வைக்கிறார்.
யாஷிகா ஆனந்த் & ஷிரிதா ராவ்: யாஷிகா ஆனந்த் கிளாமர் மற்றும் ஒரு சில முக்கியக் காட்சிகளில் வந்து போகிறார். நட்டியின் மனைவியாக வரும் ஷிரிதா ராவ், ஒரு நடிகரின் மனைவியாக அவர் சந்திக்கும் மனப்போராட்டங்களைச் சொல்லும் காட்சிகளில் நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கிறார்.
வசனம்:
“200 கோடி சம்பளத்தை விட்டுட்டு அரசியலுக்கு வந்தா மக்களுக்கு சந்தோஷம், எனக்கு என்ன சந்தோஷம்?” – தம்பி ராமையாவின் பேனா ஒவ்வொரு வசனத்திலும் பட்டாசு கிளப்புகிறது. எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு பேசும்போது அது வேற லெவல் சிரிப்பு.
இசை:
தர்புகா சிவாவின் இசையில் “ஹே அலங்காரி” பாடல் மட்டும் தேறுகிறது. பின்னணி இசை, படத்துக்கு பலம்.
ஒளிப்பதிவு:
சந்தானம் கிருஷ்ணன் ஒளிப்பதிவுல படம் முழுக்க ஒரு கலர்ஃபுல்லான லுக் இருக்கு.நட்டி நட்ராஜ் கார்ல இருந்து இறங்குற சீன், பிரஸ் மீட் காட்சிகள்ல அந்த ‘லைட்டிங்’ ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர் ஃபீல கொடுக்குது. நட்டியோட பார்வைகளையும், மேனரிசத்தையும் க்ளோஸ்-அப் ஷாட்கள்ல ரொம்ப ஷார்ப்பா காட்டியிருக்காங்க. அந்த த்ரீ-மென் ஃபைட் சீன்ல கேமரா மூவ்மெண்ட்ஸ் நல்லா வந்திருக்கு.
ஆனா, இரண்டாம் பாதியில வர்ற சில அவுட்டோர் சீன்கள்ல ஒளிப்பதிவு ரொம்ப சாதாரணமா, ஒரு டிவி சீரியல் தரத்துல இருக்குறது கொஞ்சம் நெருடல். இன்னும் கொஞ்சம் ‘ரிச்’சா காட்டியிருக்கலாம்.
இயக்கம்:
நடிகர் உமாபதி ராமையா, இப்படத்தின் மூலம் இயக்குநராக தடம் பதித்து உள்ளார்.
வெறும் வசனங்களால் மட்டும் அரசியல் பேசாமல், காட்சிகளின் வழியாகவும் நையாண்டி செய்திருப்பது உமாபதியின் பலம். குறிப்பாக, நடிகர்களின் இமேஜ், பொதுவெளியில் எப்படி இருக்கிறது, நிஜத்தில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பிரித்துக் காட்டியதில் இயக்குநராக ஜெயித்திருக்கிறார்.
நட்டி நட்ராஜ் காவல் துறையினர் தடுக்கும்போது காரிலிருந்து ஸ்டைலாக இறங்கி வரும் காட்சி, நிஜ வாழ்க்கையில் ரஜினிக்கு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தி தியேட்டரில் செம ‘மாஸ்’ கிளப்புகிறது.
இடைவேளைக்கு முன்பு நட்டி செய்தியாளர்களைச் சந்திக்கும் காட்சி. நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் அந்தத் திரைக்கதையை இயக்குநர் செதுக்கிய விதம் அருமை.
தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் இளவரசு ஆகிய மூவரும் இணைந்து செய்யும் அந்த வித்யாசமான சண்டைக் காட்சியும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட பின்னணிப் பாடலும் படத்தில் ஒரு எதிர்பாராத ‘ஸ்வீட் சர்ப்ரைஸ்’.
முதல் படத்திலேயே ஒரு அரசியல் நையாண்டியை கையில் எடுத்து, அதில் கணிசமான வெற்றியும் பெற்றிருக்கிறார், இயக்குநர் உமாபதி ராமையா.

யாரையெல்லாம் ‘வைச்சு’ செய்திருக்கிறார்கள்?
ட்ரெய்லரில் விஜய்யை மட்டும் கிண்டல் செய்ததாக நினைத்தோம். அதோடு, படத்தில் ரஜினி, சீமான், தவெக ரசிக தொண்டர்கள் வரை எல்லோரையும் ‘ரோஸ்ட்’ செய்திருக்கிறார்கள்.
ரஜினியின் “சிஸ்டம் சரியில்லை” வாதம், உடல்நிலையைக் காட்டி பின்வாங்கியது என எதையுமே விடவில்லை. மோசமான சினிமா, இளைஞர்களை எப்படிச் சீரழிக்கிறது என்பதையும் பொட்டில் அடித்தார் போல் சொல்கிறார்கள்.
பிளஸ் & மைனஸ்:
பிளஸ்: தம்பி ராமையாவின் கதை மற்றும் வசனம். இடைவேளை வரை விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை. நடிகர்களின் அரசியல் பிரவேசத்தை ஒரு பக்கம் நக்கல் செய்தாலும், இன்னொரு பக்கம் அவர்களுக்கு ஆதரவாகவும் சில பாயிண்டுகளை வைத்திருப்பது சிறப்பு.
மைனஸ்: இரண்டாவது பாதியில் திரைக்கதை கொஞ்சம் தடம் புரள்கிறது. க்ளைமேக்ஸ் முழு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ‘அமைதிப்படை’ அமாவாசை கேரக்டரின் சாயல் பல இடங்களில் துருத்திக்கொண்டு தெரிகிறது. குறிப்பாக செருப்பு மாட்டிவிடும் சீன்.
படத்தை பார்க்கலாமா..
கண்மூடித்தனமாக நடிகர்கள் பின் செல்லும் இளைஞர்கள் இருக்கக்கூடிய சூழலில், அவசியம் பார்க்க வேண்டிய படம். இளைஞர்கள் மட்டுமல்ல.. பெற்றோர்களும் பார்க்க வேண்டும்.
இந்தப் படத்துக்கு ‘ரேட்டிங்’ தேவையில்லை. அவசியம் பாருங்கள்!
– டி.வி.சோமு

