நாளை முதல்..!: எல்.ஐ.கே. காலத்தை முந்திய காதல் கொண்டாட்டம்!
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இளைஞர்களின் ஃபேவரைட் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா தனியார் கல்லூரி ஒன்றில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் அரங்கேறியது. எதிர்கால பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்த விழாவிற்குப் பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது.
படக்குழுவினரின் பகிர்வுகள்:
எடிட்டர் பிரதீப் E ராகவ்: முதலில் விக்னேஷ் சிவன் கதை சொன்னபோது, இவ்வளவு பெரிய கான்செப்ட்டை எப்படி எடுக்கப்போகிறோம் என்ற பயம் இருந்தது. இந்தப் படம் முழுவதும் எதிர்காலத்தை மையமாகக் கொண்டதால், ஒவ்வொரு காட்சியிலும் கிராபிக்ஸ் மற்றும் கலைப் பணிகளின் சவால்கள் அதிகம். குறிப்பாக, முதலில் காட்சிகளை எடுத்துவிட்டு அதற்கு ஏற்றபடி வரிகள் எழுதி, அதன் பின் இசை அமைக்கப்பட்ட விதம் ஒரு புதிய அனுபவம்.
கலை இயக்குநர் முத்துராஜ்: பிரதீப்பின் உழைப்பும், இன்றைய இளைஞர்களின் வெற்றி தாகமும் ஆச்சரியப்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளியிலேயே ஓவியம் வரைபவர். எதிர்கால பின்னணியில் ஒரு ரோபோ எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போதே, நிஜ உலகில் ரோபோக்கள் லுங்கி கட்டி ஆடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஏஐ போன்ற தொழில்நுட்பங்களுக்கு நாம் அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்பதையும் இந்தப் படம் உணர்த்தும்.
இயக்குநர் ராம்: விக்னேஷ் சிவனின் 2012 முதல் 2026 வரையிலான வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்தவன் நான். அவருக்கு எதுவும் எளிதாகக் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் ‘3 Idiots’ அல்லது ‘Munna Bhai M.B.B.S.’ போன்ற மனதைத் தொடும் படங்களை யாராவது எடுக்க முடியும் என்றால் அது விக்கிதான். தொழில்நுட்பம் மாறினாலும் மாறாத ஒன்றாக இருக்கும் காதலை இந்தப் படத்தில் அவர் அழகாகப் பேசியுள்ளார்.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி: நயன்தாரா அழைத்ததால் தான் இங்கு வந்தேன். விக்னேஷ் சிவன் ஒரு லக்கி பாய். நயன்தாராவுக்கும் விக்கிக்கும் இடையிலான காதல் எப்படித் தொடங்கியது என்பதை நேரில் பார்த்தவன் நான். அந்த அன்பு இன்றும் மாறாமல் இருப்பது அழகு. பிரதீப் ரங்கநாதனின் மிகப்பெரிய ரசிகன் நான், அவர் இன்னும் பல சாதனைகள் செய்வார்.
நடிகை கௌரி கிஷன்: இந்தப் பயணம் எனக்குப் பொறுமையைக் கற்றுக் கொடுத்தது. எப்போதும் என்னை ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் பார்த்த மக்களுக்கு மாற்றாக, ‘கல்கி’ என்ற ஒரு போல்டான ரோலில் என்னை நடிக்க வைத்த விக்கி சாருக்கு நன்றி. பிரதீப் ஒரு முதிர்ச்சியான நடிகர்.
இயக்குநர் மிஷ்கின்: இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல போராட்டங்களை விக்கி சந்தித்திருக்கிறார். அவர் ஒரு விசித்திரமான ரசனை கொண்ட கவிஞன். தன் படத்திற்காகத் தானே பாடல் எழுதும் இயக்குநர்கள் அப்படத்தை மிக ஆழமாக நேசிப்பவர்கள். அனிருத் இசை சர்வதேசத் தரத்தில் இருக்கும். பிரதீப் இந்தப் படத்தை தன் தோளில் சுமந்து சிறப்பாகச் செய்துள்ளார்.
நடிகை மாளவிகா: நான் இதுவரை 42 படங்களில் நடித்திருந்தாலும், முதல்முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசிய படம் இதுதான். அனிருத்தின் இசை மற்றும் லிரிக்ஸ் அற்புதம்.
நடிகர் எஸ்.ஜே. சூர்யா (வீடியோ கால் மூலம்): ஐதராபாத்தில் படப்பிடிப்பு இருப்பதால் வர முடியவில்லை. விக்னேஷ் சிவன் எதிர்காலக் காதலை மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். அனிருத்தின் இசை மேஜிக் செய்யும்.
நாயகன் பிரதீப் ரங்கநாதன்: கல்லூரி படிக்கும்போது விக்னேஷ் சிவனின் ரசிகனாக இருந்த நான், இன்று அவர் இயக்கத்தில் நடிப்பது ஒரு சர்ப்ரைஸ். அனிருத் ஒரு நல்ல மனிதர், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஒருகாலத்தில் எஸ்.ஜே. சூர்யா சாரிடம் உதவி இயக்குநராகச் சேர அவர் வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். இன்று அவரோடு நடித்திருப்பது கனவு போல் உள்ளது. எதிர்கால சென்னை எப்படி இருக்கும் என்ற ஆவல் எனக்கும் இருந்தது, அது இந்தப் படத்தில் நிறைவேறியுள்ளது.
நடிகை கிரித்தி ஷெட்டி: இது என் கரியரின் மிக முக்கியமான படம். ரவிவர்மன் சாரின் லைட்டிங்கில் நான் அழகாகத் தெரிகிறேன். ‘தீமா’ பாடலுக்காக அனிருத் சாருக்கு நன்றி. இந்தப் படத்திற்காகத் தமிழை இரண்டு வருடமாகப் படித்து டப்பிங் பேசியுள்ளேன்.
இயக்குநர் விக்னேஷ் சிவன்: கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஒரு பெரிய வாய்ப்பு கைநழுவிப் போனபோது, ஒரு கல்யாணம் நின்றது போன்ற வலியை உணர்ந்தேன். அந்த நேரத்தில் ‘சின்னதாகப் படம் பண்ணு’ என்று சொன்னவர்களிடம், ‘நான் நினைத்ததைத்தான் எடுப்பேன்’ என்று உறுதியாக நின்றேன். அதற்கான பலன் தான் LIK. பிரதீப் என்னுக்காகப் பல பெரிய வாய்ப்புகளை விட்டுவிட்டு இந்தப் படத்திற்காக நின்றார். அனிருத் என் கஷ்ட காலத்தில் எனக்குத் தெரியாமல் என் பையில் 50,000 ரூபாய் வைத்து உதவியதை என்னால் மறக்க முடியாது. தயாரிப்பாளராக நயன்தாரா கொடுத்த சப்போர்ட் அளப்பரியது.
ரிலீஸ் தேதி: சயின்ஸ் பிக்ஷன், காமெடி மற்றும் காதல் கலந்த இந்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

