‘திவ்யா’: விமர்சனம்: ஒரு காதல் ரத்தச் சரித்திரம்!
நிஜத்தின் முகத்தில் அறைந்து, நெஞ்சைக் கனக்கச் செய்யும் ஒரு படைப்பாக வந்திருக்கிறது ‘திவ்யா’. வெறும் சினிமா என்று கடந்து போய்விட முடியாதபடி, நம் சமூகத்தின் புரையோடிப்போன சாதிப் பிரச்சினையின் கோர முகத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறார் இயக்குநர்-நாயகன் ஆர்.ஜே.பி.
கதைக்களம்: காதலும்.. கசக்கும் உண்மையும்!
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாயகன் ஆர்.ஜே.பி, தன் தாத்தாவுடன் வசித்து வருகிறார். பரம்பரைத் தொழிலான பறை இசையைத் தாண்டி, கல்வியால் உயரத் துடிக்கும் கல்லூரி மாணவர். அங்கு இரண்டாம் ஆண்டில் நுழையும் நாயகி கேத்தியுடன் ஆரம்பத்தில் மோதல், பின் அதுவே ஆழமான காதலாக மாறுகிறது. ஆனால், ஆதிக்க சாதி எனும் ‘வேலி’ மறிக்க, காதலர்கள் கைகோர்த்து ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். இந்த ஓட்டம் எங்கு போய் முடிந்தது? ரத்தக் கறையிலா அல்லது மாற்றத்திலா? அதுதான் மீதிக்கதை.
யதார்த்த நாயகன்: மேக்கப் இல்லாத மனிதன்!
நாயகன் ஆர்.ஜே.பி-க்கு ஒரு சல்யூட் வைக்கலாம்! “நான்தான் ஹீரோ” என்கிற பந்தாவோ, பளபளக்கும் உடைகளோ இல்லாமல், நம் தெருவில் நடமாடும் ஒரு சாதாரண இளைஞனாகவே வலம் வருகிறார். “இவரா ஹீரோ?” என்று கேட்க வைக்கும் அதே ஆர்.ஜே.பி, கிளைமாக்ஸ் காட்சியில் தடுமாறி விழுந்து கதறும் அந்த நொடியில், ஒரு தேர்ந்த கலைஞனாக விஸ்வரூபம் எடுக்கிறார். இயக்குநராகவும் அவரே என்பதால், யாரிடம் எவ்வளவு வேலை வாங்க வேண்டும் என்பதில் கச்சிதம் காட்டியிருக்கிறார்.
நடிப்பில் மிரட்டிய முகங்கள்:
-
நாயகி கேத்தி: பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம். காதலில் உருகும் போதும், ஊரை விட்டு ஓடும் பதற்றத்திலும் ஸ்கோர் செய்கிறார்.
-
தாத்தா பவுன்ராஜ்: பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படத்தின் இறுதியில் அவர் பாடும் அந்தப் பாடல்.. மனதை பிசையும் ரணம்!
-
பெற்றோர்கள்: அனந்த் ராம் – கலாவதி ஜோடி, சாதிக்கும் பாசத்திற்கும் இடையே தவிக்கும் அந்த ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ நிலையை தத்ரூபமாகப் பிரதிபலிக்கிறார்கள்.
-
வில்லன் செந்தில்: அசப்பில் அமீர் போலத் தெரிந்தாலும், சாதி வெறி பிடித்த கொடூரனாகப் பயமுறுத்துகிறார்.

தொழில்நுட்பக் கூட்டணி:
ஒளிப்பதிவாளர் செல்வகுமார், கேமராவை ஒரு கருவியாகப் பயன்படுத்தாமல் நம் கண்களாகவே மாற்றியிருக்கிறார். சங்கர் ராமனின் இசை, தேவையற்ற சத்தங்கள் இல்லாமல் கதையோடு பயணிக்கிறது. கவி கண்ணனின் வரிகள், வாத்தியங்களின் இரைச்சல் இல்லாததால் தெளிவாகச் செவிகளில் விழுகின்றன. வளர் பாண்டியனின் படத்தொகுப்பு கதையோட்டத்தைச் சிதைக்காமல் நகர்த்துகிறது.
நமது பார்வை:
முதல் பாதி பட்ஜெட் சினிமா போலத் தெரிந்தாலும், இரண்டாம் பாதியில் இயக்குநர் நம்மை இருக்கை நுனியில் உட்கார வைத்துவிடுகிறார். வழக்கமான காதல் படங்களில் காதலர்களின் வலியை மட்டுமே பேசுவார்கள், ஆனால் இதில் மகளைப் பெற்றவர்களின் தவிப்பை இயக்குநர் கையாண்ட விதம் சிறப்பு. காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருந்தால், கிளைமாக்ஸ் ஏற்படுத்தும் பாதிப்பு இன்னும் தீயாக இருந்திருக்கும்!
மொத்தத்தில், ‘திவ்யா’ – சாதிப் பேய்க்கு எதிரான ஒரு துணிச்சலான சாட்டை அடி!

