கடல் கடந்து தமிழகத்தில் தடம் பதிக்கும் ‘நம்பிக்கை’: சென்னையில் கோலாகலத் தொடக்க விழா!
மலேசிய மண்ணில் 27 ஆண்டுகளாக அறம் பிறழாது கோலோச்சிய ‘நம்பிக்கை’ ஊடகம், தற்போது தமிழகத்தின் இதயமான சென்னையில் தனது புதிய கிளையை மிகச் சிறப்பான முறையில் தடம் பதித்துள்ளது. அரசியல் தலைவர்கள், கலைத்துறையின் நட்சத்திரங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பெரும் ஆளுமைகள் சூழ நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், அந்த மேடை கண்ட நம்பிக்கையூட்டும் உரைகளின் தொகுப்பு இதோ:
“யதார்த்தம் காக்க வந்த நேர்மையின் குரல்!”: அன்பில் மகேஷ் பொய்யாமொழி
“நம்பிக்கை விதைக்கப்படும் நன்னாள் இன்று! சமூக ஊடகங்களின் பெருக்கத்தில் யதார்த்தம் தொலைந்து வரும் வேளையில், களத்தில் நின்று உண்மையை நேர்மையுடன் உரக்கச் சொல்வதில்தான் ஓர் ஊடகத்தின் வெற்றி அடங்கியுள்ளது. சீமான் அண்ணன் குறிப்பிட்டது போல, செய்திகளை உள்ளது உள்ளபடி வழங்குங்கள்; மக்கள் எங்களைச் சரியான பாதையில் வழிநடத்துவார்கள். கவர்ச்சிகரமான பேச்சுகளால் அறிவீனர்களைக் கவர்ந்து, புத்திசாலிகளை மௌனமாக்கும் போக்கை உடைத்து, தவறு யார் செய்தாலும் அதனைத் தட்டிக்கேட்கும் துணிவு உங்களுக்கு வேண்டும். என் இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்!”
“உழைப்பால் உயர்ந்த 27 ஆண்டுகால உண்மைப் பயணம்!”: நடிகர் சரத்குமார்
“மலேசியாவில் தொடங்கி இன்று சென்னையின் நம்பிக்கையைப் பெற வந்துள்ள இக்குழுமத்திற்கு என் வணக்கங்கள். என் பெரியப்பா ஆதித்தனார் அவர்கள் பெரும் உழைப்பைக் கொட்டித் தொடங்கிய ‘தந்தி’ நாளிதழின் பயணத்தில் என் தந்தையும் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறோம். உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதே ஒரு பத்திரிகையின் உயிர்நாடி. 27 ஆண்டுக்கால நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ள ‘நம்பிக்கை’, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, துபாயைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்திலும் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.”
“ஒரு குரல்… ஒரு பார்வை… ஒரு வாக்குறுதி!”: ராதிகா சரத்குமார்
“ஒரு குரல், ஒரு பார்வை, ஓர் உன்னத வாக்குறுதியோடு இந்திய மண்ணில் கால்பதித்துள்ள இந்த டிஜிட்டல் ஊடகத்தை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஊடகம் என்பது வெறும் ‘பிரேக்கிங்’ செய்திகளைத் தருவது மட்டுமல்ல; பெரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய களம். நியாயம், துணிவு மற்றும் நேர்மையான பார்வையே பத்திரிகை தர்மம். அந்த தர்மத்தைக் காத்து பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!”
“அரசியல் சார்பற்ற ஊடக அறத்தின் ஆழமான வேர்!”: சீமான்
“கட்சி சார்புடைய அல்லது தனிப்பட்ட தலைவர்களின் பிடியில் ஊடகங்கள் சிக்கியுள்ள இன்றைய சூழலில், ஒரு பெரும் நம்பிக்கையாகவே இந்த ‘நம்பிக்கை’யை நான் பார்க்கிறேன். இது வெறும் வார்த்தை அல்ல; உலகத் தமிழர்களின் உணர்வு! மலேசியா, சிங்கப்பூர் எனப் படர்ந்துள்ள இதன் கிளைகள், வெறும் கிளைகளாக மட்டும் இருக்கக் கூடாது; அவை ஆழமான வேர்களாகப் பரவ வேண்டும். தேர்தல் காலங்களில் எவ்விதச் சார்புமின்றி, நேர்மையையும் உண்மையையும் இந்த ஊடகம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு. உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பை இது நிச்சயம் வெல்லும்!”
“திரிக்கப்படும் செய்திகளுக்கு மத்தியில் ஒரு தெளிந்த நீரோடை!”: நடிகர் நாசர்
“பரபரப்பிற்காகச் செய்திகள் திரிக்கப்படுவதைக் கண்டு மக்கள் ஊடகங்கள் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர். குறிப்பாக, திரைத்துறையில் நல்ல படைப்புகளைக் கூடத் தவறாகச் சித்தரிப்பதால் நான் செய்திச் சேனல்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். ஆனால், அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க இன்று இந்த ‘நம்பிக்கை’ வந்திருக்கிறது. துன்பங்கள் கடந்து இன்பம் வரும் என்ற நம்பிக்கையில்தான் மனிதகுலம் நகர்கிறது. தெளிவான மற்றும் உண்மையான செய்திகளால் நீங்கள் மக்கள் மனதில் ஆழமாக வேர் விட வேண்டும்!”

