” ரீ ரிலீஸிலும் மாஸ் காட்டும் எஸ்.டி.ஆர்.!”: ‘சிலம்பாட்டம்’ விழாவில் டி.ஆர் அதிரடி!

” ரீ ரிலீஸிலும் மாஸ் காட்டும் எஸ்.டி.ஆர்.!”: ‘சிலம்பாட்டம்’ விழாவில் டி.ஆர் அதிரடி!

STR-இன் பிறந்தநாள் பரிசாக ‘சிலம்பாட்டம்’ திரைப்படம் பிப்ரவரி 6-ஆம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த பிளாக்பஸ்டர் படத்தை எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் திரையுலகினர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

விநியோகஸ்தர் எத்தில் ராஜ் பேசுகையில், திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்தப் படத்தை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன், படத்தின் மறுவெளியீடு பெரும் உற்சாகத்தைத் தருவதாகக் குறிப்பிட்டார். “இப்படத்திற்கு எப்போதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு உண்டு. விஜய் சாரும் அஜித் சாரும் இப்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். இதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் ஒளிந்துள்ளன. யுவன் இசையில் ஐந்து பாடல்களுமே மெகா ஹிட். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸுக்கு பெரும் லாபம் தந்த இந்தப் படத்தை, எல்மா பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்குவது பெருமை. இது ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து” என்றார்.இயக்குநர் சரவணன் சிம்புவுக்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். “சிம்புவுக்குப் பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நாம் எழுதும் மாஸ் காட்சிகளுக்கு அவர் உயிர் கொடுப்பதைப் பார்ப்பதே ஒரு பிரமிப்பு. அவர் எனக்குக் குடும்பம் போன்றவர். அவருக்குக் கிடைத்த வெற்றியை எனக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். அன்று போலவே இன்றும் திரையரங்குகளில் கொண்டாட்டம் களைகட்டும். சினேகா, பிரபு உள்ளிட்ட படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன்” என நெகிழ்ந்தார்.

இறுதியாகப் பேசிய டி.ராஜேந்தர், தன் மகனின் பிறந்தநாளைச் சிலம்பாட்டம் படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி கூறினார். “இயக்குநர் சரவணன் காலம் கடந்த ஒரு ஆக்‌ஷன் படத்தை வழங்கியுள்ளார். நான் இயக்கிய காதல் படங்களையே மிஞ்சும் அளவுக்கு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என்னை வியக்க வைத்தது. ஆக்‌ஷன் என்று பார்த்தால் ‘மங்காத்தா’ மட்டுமே மறுவெளியீட்டில் பெரும் வெற்றி பெற்றது. இப்போது இந்த ‘சிலம்பாட்டம்’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் வந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் வண்ணமயமாக மின்னுகிறது. இதில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என அனைவரும் அசத்தியுள்ளனர்.

எனது ‘உயிருள்ள உஷா’ படமும் மறுவெளியீட்டுக்குத் தயார். ஆனால் சிலம்பாட்டத்திற்காக அதைத் தள்ளி வைத்துவிட்டேன். தம்பி விஜய்யின் படம் வந்தாலும் அவருக்கு மரியாதை கொடுத்துத் தள்ளி வைப்பேன். மறுவெளியீட்டில் இந்தப் படம் புதிய சரித்திரம் படைக்க இறைவனை வேண்டுகிறேன்” எனத் தனது பாணியில் அதிரடியாகப் பேசினார்.

2008-இல் வெளியாகி சிம்புவின் ‘கல்ட்’ படங்களில் ஒன்றாக மாறிய சிலம்பாட்டம், தற்போது மேம்படுத்தப்பட்ட ஒலி-ஒளி தரத்தில் வருகிறது. ‘தமிழரசன்’, ‘விச்சு’ என இரு வேடங்களில் சிம்புவின் நடிப்பு இன்றும் தனி ரகம். யுவனின் இசை, கிராமத்து அரசியல், அம்மா சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த இந்தத் திருவிழா பிப்ரவரி 6 முதல் மீண்டும் தொடங்குகிறது.

Related Posts