“உழைப்புதான் காரணம்!”: ‘TTT’ வெற்றி விழாவில் தயாரிப்பாளர் கண்ணன் நெகிழ்ச்சி!

“உழைப்புதான் காரணம்!”: ‘TTT’ வெற்றி விழாவில் தயாரிப்பாளர் கண்ணன் நெகிழ்ச்சி!

பொங்கல் ரேஸில் கலந்துகொண்டு, ரசிகர்களின் ஏகோபித்த விசில் சத்தத்தோடு வசூலையும் விமர்சனத்தையும் அள்ளிக் குவித்திருக்கிறது ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம். இந்த மெகா ஹிட் வெற்றியைச் கொண்டாட, சென்னை நட்சத்திர ஹோட்டலில் ஒரு பிரம்மாண்ட ‘வெற்றி விழா’ அரங்கேறியது.

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள, கோலிவுட் நட்சத்திரங்களின் முன்னிலையில் விழா களைகட்டியது. அந்த விழாவின் ஹைலைட்ஸ் இதோ:

 “எல்லாத்துக்கும் காரணம் உழைப்புதான்!” – தயாரிப்பாளர் கண்ணன் ரவி  நெகிழ்ச்சி

தயாரிப்பாளர் கண்ணன் ரவி, தன் மனதிற்கு நெருக்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்:

  • வாழ்க்கைப் பாடம்: “7 வயதில் தந்தையை இழந்தேன். பலமுறை ஏழ்மையும் ஏற்ற இறக்கமும் பார்த்திருக்கிறேன். ‘உழைப்பு, உழைப்பு, குடும்பம்’ – இதுதான் என் வெற்றியின் தாரக மந்திரம்.”

  • விசுவாசம்: “நான் இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருக்க நினைப்பவன். அதனால்தான் துபாயில் தொழிலை வைத்திருந்தேன். ஆனால், ஜீவாவின் அன்புக்காகவும், என் ஊர் மக்களுக்காகவும் 3.5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கிறேன்.”

  • மாஸ்டர் பிளான்: “இனி என் படங்கள் உலகமெங்கும் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஒரே நாளில் 1000 தியேட்டர்களில் வெளியாகும். லாபத்தை விட, ‘நல்ல நிறுவனம்’ என்கிற நற்பெயரே எனக்கு முக்கியம்!”


“குமுளி மக்களின் அன்பும்… இயக்குநரின் மேஜிக்கும்!” – நாயகன் ஜீவா

உற்சாகத்தின் உச்சியில் இருந்த நடிகர் ஜீவா, தன் படக்குழுவினர் குறித்துப் புகழாரம் சூட்டினார்:

  • குடும்பமாக மாறிய படக்குழு: “குமுளியில் 5 மாதங்கள் குடும்பமாகத் தங்கிப் பணியாற்றினோம். அந்த ஊர் மக்கள் எங்களுக்காக வேண்டிக்கொண்டு கிடா வெட்டி விருந்து வைத்தார்கள். நாங்கள் கிளம்பும்போது அவர்கள் அழுதது எங்களை நெகிழ வைத்துவிட்டது.”

  • இயக்குநர்தான் ஹீரோ: “நிதிஷ் தான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. எங்களில் மறைந்திருந்த திறமைகளை அவர் வெளியே கொண்டு வந்தார். இது சின்ன படம் அல்ல, எங்களின் விஸ்வரூபம்!”

  • நட்பும் நன்றியும்: “வி.டி.வி கணேஷ் மூலம்தான் இயக்குநர் எனக்கு அறிமுகம். தயாரிப்பாளர் கண்ணன் ரவியுடனான நட்பு ஒரு கிரிக்கெட் மேட்ச்சில் தொடங்கியது. என் தந்தை சௌத்ரி சாருக்கு துபாயில் அவர் நடத்திய பாராட்டு விழாவை என் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன்.”


 “நண்பனுக்காக ஓடி வந்தேன்!” – சுரேஷ் கோபி பாராட்டு

சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் மற்றும் அமைச்சர் சுரேஷ் கோபி பேசுகையில்: “ஜீவாவிற்கு இது ஒரு அட்டகாசமான கம்பேக்! தயாரிப்பாளர் கண்ணன் ரவியை எனக்கு 8 மாதங்களாகத்தான் தெரியும், ஆனால் 8 வருட நட்பு போல நெருக்கமாகிவிட்டார். அவர் கேட்டுக் கொண்டதற்காகவே டெல்லியிலிருந்து கிளம்பி வந்தேன். தமிழ் சினிமாவின் வெற்றி விழாக்களில் நான் கலந்துகொள்வது இதுவே முதல்முறை!”


 கதைதான் ஹீரோ! – இணை தயாரிப்பாளர் & படக்குழு

இணை தயாரிப்பாளர் தீபக் ரவி பேசும்போது, “ஹீரோவை விட கதைக்குத்தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம். தமிழ் என் தாய்மொழி என்பதால், தமிழில் தரமான படங்களை வழங்கவே விரும்புகிறோம்” என்றார்.

இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தங்களுக்குக் கிடைத்த இந்த ‘விமர்சன ரீதியான வெற்றியை’ நெகிழ்ச்சியுடன் மேடையில் பகிர்ந்துகொண்டனர்.

Related Posts