‘ரைட்’: திரைப்பட விமர்சனம்
ஆர்.டி.எஸ். பிலிம்ஸ் பேக்டரி சார்பாக, திருமால் லக்ஸ்மணன் மற்றும்டி. சியாமலா ஆகியோர் தயாரிக்க, சுப்ரமணியன் ரமேஷ்குமார் நட்டி, அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், ரைட்.
போலீஸ் இன்ஸ்பெக்டரான ரகுராம், பிரதமர் பாதுகாப்பு பணிக்காக சென்றிருக்கிறார்.
அப்போது சக்திவேல் பாண்டியன் என்பவர், தன் மகனைக் காணவில்லை என புகார் அளிக்க வருகிறார். அவரது புகாரை, அங்கிருக்கும் காவலர்கள் பொருட்படுத்தவே இல்லை.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் அதி பயங்கர திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்குக் காரணம் யார்.. ஏன் அப்படி செய்தார்கள் என்பதை சுவாரஸ்யத்துடனும் பதை பதைக்க வைக்கும் வகையிலும் சொல்லி இருக்கிறது ரைட்.
காவல்துறை ஆய்வாளர் ரகுராமாக வருகிறார் நட்டி. காவல்துறை அதிகாரிக்கான கம்பீரம், நெஞ்சு நிமிர்த்திய நடை என கவர்கிறார். அதே நேரம், மகளின் நிலை அறிந்து கதறி கண்ணீர் விடும் காட்சியில் ஒரு தந்தையாக நெகிழ வைக்கிறார். இறுதிக் காட்சியில் அவர் பேசப் பேச… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
காணாமல் போன மகனை தேடி அலையும் தந்தை சக்திவேல் பாண்டியனாக, அருண் பாண்டியன் நடித்து உள்ளார். மகனை காணாத தவிப்பு, வெடி குண்டு இருக்கிறது என்றதும் ஏற்படும் பதட்டம், தன் மீது குற்றம் சாட்டுகிறார்களே என்கிற வேதனை என சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால் அவரது குரல்தான் அதீத நடிப்பாக வெளிப்படுகிறது.
பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் அக்ஷரா ரெட்டி, பிரச்சனையை சமாளிக்க முயற்சிக்கும் காட்சிகளில் நிஜ காவல் அதிகாரியை நினைவூட்டுகிறார்.
ரைட்டராக வரும் மூணார் ரவி, எதார்த்தமான – சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். புகார் தந்த வருபவரிடம் காண்பிக்கும் திமிர், திருடனிடம் வெளிப்படுத்தும் நெருக்கம், மகனுக்காக வெளியில் செல்ல வேண்டும் என காட்டும்
பாசம், மனைவிக்கு பயந்து பேசுவது என அருமையான நடிப்பை அளித்து இருக்கிறார். அதுவும், வெடிகுண்டின் மேல் அமர்ந்திருக்கிறோம் என்கிற பதைபதைப்பை அப்படியே வெளிப்படுத்தி நம்மையும் பதைபதைக்க வைக்கிறார்.
நீதிபதியாக வரும் வினோதினி, இளம் ஜோடியாக வரும் ஆதித்யா சிவகுமார் – யுவினா, கைதியாக நடித்திருக்கும் தங்கதுரை என அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
குணா பாலசுப்பிரமணியனின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஆனால் பின்னணி இசை அபாரம். ஒரு க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற இசையை அளித்து உள்ளார்.
காவல் நிலையத்திலேயே பெரும்பாலான காட்சிகள் இருந்தாலும், வித்தியாசமான கோணங்களில் காட்சிகளை அளித்து ரசிக்கச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ்.
படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் மற்றும் கலை இயக்குநர் தாமு ஆகியோரது பணி படத்திற்கு பலம்.
வெறும் க்ரைம் த்ரில்லராக இல்லாமல், அதில் பெண்களின் பாதுகாப்பு, அரசியல்வாதிகளின் அராஜகம், அவர்களிடம் காவல்துறை கட்டுண்டு கிடப்பது என சமூகப் பிரச்சினையையும் சொல்லி பாராட்டு பெறுகிறார் இயக்குந்ர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.
அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.
ரேட்டிங் 3.1/5

