ஹவுஸ் மேட்ஸ்: திரை விமர்சனம் : திகிலூட்டுதா.. திகட்ட வைக்குதா?

ஹவுஸ் மேட்ஸ்: திரை விமர்சனம் : திகிலூட்டுதா.. திகட்ட வைக்குதா?

ஒரு வீட்டில் இரு குடும்பங்கள் வாழ்கின்றன. ஆனால் ஒரு குடும்பத்தாரால் மற்ற குடும்பத்தினரை பார்த்துக்கொள்ள முடியாது. பேசத்தான் முடியும்.

ஆச்சரியப்பட வைக்கும் இந்த கருவை வைத்து சுவாரஸ்யமாக அளிக்கப்பட்டுள்ள படம்தான் ஹவுஸ்மேட்ஸ்.

நாயகன் தர்சன் சிறப்பாக நடிக்க முயற்சித்து இருக்கிறார்.

காதலிக்காகவே சிரமப்பட்டு வீடு வாங்குவது, வீட்டில் பேய் இருக்கிறது என்பதை அறிந்து அதிர்ச்சியை வெளிப்படுத்துவது, ஆக்ரோசமாக சண்டை போடுவது என சிறப்பாக நடிக்க முயற்சித்து இருக்கிறார் தர்ஷன்.அவரது காதல் மனைவியாக ஆர்ஷா சாந்தினி பைஜூ. “நான் உன்கூட வரலை.. அப்பா சொல்றதைத்தான் கேட்பேன்” என அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே ஈர்த்துவிடுகிறார். அடுத்த காட்சியிலேயே காதலனைத்தேடி வந்து அதற்கு ஒரு காரணம் சொல்லும்போது, “அடடே..” போட வைக்கிறார்.

மர்ம சம்பவங்களைக் கண்டு பயப்படுவது, வீட்டை மாற்றியே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிப்பது.. என இயல்பாக நடித்து உள்ளார்.

இணை நாயகனாக வரும் காளி வெங்கட், வழக்கம் போல சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். “பேய் மனிதர்களுடன்” அவர் உறவு பாராட்டும் விதம் அற்புதம். இன்னொரு வேடத்தில், வயோதிகராக வரும் கதாபாத்திரத்திலும் அசத்துகிறார். இறுதிக் காட்சியில் நெகிழ வைக்கிறார்.

அவரது மனைவியாக வரும் வினோதினி எப்போதும்போல படபட.

இதர கதாபாத்திரத்தில் தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் உள்ளிட்டோர் வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.எஸ். சதீஷ், ஏரியல் காட்சிகளில் அசத்துகிறார். அதே போல அந்த அபார்ட்மெண்ட, வீட்டின் உட்புறங்களை திகிலாக காண்பித்து பயமுறுத்துகிறார்.

ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை அதிரவைக்கிறது. ஒவ்வொரு விநாடியும் வரும் இசை, பயத்தை அதிகப்படுத்துகிறது.ஏ.நிஷார் ஷரேஃபின் எடிட்டிங் சிறப்பு. பொதுவாக பேய்ப்படம் என்றாலே எடிட்டருக்கு வேலை அதிகம் இருக்கும். இந்தப் படத்தில் இரு வேறு “பேய்கள்” ஒரே இடத்தில் நடமாடுவதாக கதை. ஆகவே கூடுதல் வேலைதான் எடிட்டருக்கு. அதை சரியாகச் செய்திருக்கிறார்.

இது போன்ற திகில் படங்களில் ஒலி வடிவமைப்பின் பங்கு மிக முக்கியம். அதை உணர்ந்து கூடுதலாக உழைத்திருக்கிறார்கள் ஒலி வடிவமைப்பாளர்கள் ஹரிஷ் மற்றும் கே.டி.கே. சங்கர்.

வழக்கமான பேய்க்கதையாக இல்லாமல், வித்தியாசமான கதை களத்தில் ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் டி.ராஜவேல். தவிர, இரண்டாக பிரியும் கதையை குறிப்பிட்ட காட்சியில் ஒன்றாக்கி அசர வைக்கிறார்.

த்ரில்லர் பட ப்ரியர்கள் மட்டுமின்றி, குடும்பப் படங்களை ரசிப்பவர்களும் பார்க்கலாம்.

ரேட்டிங்: 3.1/5

Related Posts