கெவி: திரைப்பட விமர்சனம்: தகிக்கும் கொடைக்கானல்!

கெவி: திரைப்பட விமர்சனம்: தகிக்கும் கொடைக்கானல்!

பசுமை போர்த்திய பூமி, குளிர் காற்று, மேகம் தவழும் மலைகள்… மலையும் மலைசார்ந்த இடமும் என்ற உடனேயே  இப்படித்தான் நம் மனக் காட்சிகள் ஓடும். ஆனால்  துயரும் துயர் சார்ந்த வாழ்வுமாக அங்கு தவிக்கும் மக்களை எத்தனை பேருக்குத் தெரியும்?

அந்த பழங்குடி மக்களின் துயரை – ‘பிரசவ வேதனையை’ நாமும் அனுபவிக்கும் படி தந்திருக்கிறது கெவி.  அவர்களுக்கு ஏன் அந்த வலி..அது தீர வழி என்ன… அதற்கான முயற்சிகள் நடக்கிறதா என்பதை மனதில் தைக்கும்படி சொல்லி இருக்கிறார்கள்.கொடைக்கானல் பகுதியில் பள்ளத்தாக்கில்  – வனத்துறைக் கட்டுப்பாட்டில் – இருக்கும் சிறிய ஊர்.  காலம் காலமாக அங்கு வாழும் மக்களுக்கு,  வனத்துறை சட்டதிட்டத்தின்(!)படி சாலை இல்லை. இதனால் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய ஏற்பாடுகளும் இல்லை.

தேர்தல் வரும் காலங்களில் அரசியல்வாதிகள் வந்து வாக்கு கேட்பார்கள்.. வாக்குறுதி கொடுப்பார்கள்.. பிறகு மறந்துவிடுவார்கள்.. மீண்டும் தேர்தல் காலத்தில் வாக்கு கேட்க வருவார்கள்.

அப்படியான ஒரு தேர்தல் காலத்தில், வாக்கு கேட்க மலையேறி வருகிறார்கள் அரசியல்வாதிகள்..  இங்கே மலையில் விபத்து ஏற்பட்டு  மரணத் தருவாயில் இருக்கும் இளைஞனை தூளி கட்டி ஓட்டம் ஓட்டமாய் ஒற்றையடிப் பாதையில் கொண்டு செல்கிறார்கள் ஊர் மக்கள்..  வழியிலேயே அந்த இளைஞன் மரணமடைந்து விடுகிறார்.

மக்கள் தரப்பும் அரசியல்வாதிகள் தரப்பும் ஓரிடத்தில் சந்திக்க.. தகிக்கிறார்கள் மக்கள். இதனால் வனத்துறை அதிகாரிக்கு மக்கள் மீது கடும் ஆத்திரம். குறிப்பாக நாயகன் மீது.

அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை… இல்லை இல்லை..  உறையவைக்கும் நிஜக்கதை.

நாயகன்  ஆதவன், ஆரம்ப காட்சிகளில் மனதில் ஒட்டவில்லை.  ஆனால் போகப்போக ஒரு பழங்குடி இளைஞானக மனதில் பதிந்து விடுகிறார்.  மனைவி மீது காட்டும் நேசம், சாலை வசதி செய்து தராத அதிகாரிகள் அரசியல்வாதிகள் மீதான கோபம்,  கொடூர அதிகாரிகளிடம் வதைபடும் அவலம் என சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.

நாயகி ஷீலா.  பிரசவ வேதனையை அவர் வெளிப்படுத்தும் காட்சி ஒன்றே போதும்.  நம்மையும் வலியாலும் வேதனையாலும் துடிதுடிக்க வைத்து விடுகிறார்.

தவிர கொடூர வனத்துறை அதிகாரியாக வரும் சார்லஸ் வினோத், அக்கறை அற்ற மருத்துவராக வரும் காயத்ரி, பயிற்சி மருத்துவராக  வரும் விஜய் டிவி ஜாக்குலின், அவர் உதவியாளராக வரும்  ஜீவா,   கெவி கிராம மக்களாக நடித்தவர்கள் என அனைவருமே இயல்பான நடிப்பை வழங்கி  இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா அசத்தி இருக்கிறார். கொடைக்கானல் மலையில் அழகோடு, அதன் ஆபத்தையும் காட்சியிலேயே உணர்த்தி இருக்கிறார்.  முக்கியமாக கர்ப்பிணிப்பெண்ணை இரவில் மலைப்பாதையில் தூளியில் தூக்கிச் செல்லும் காட்சி…அதே இரவில் நாயகனை தாக்கும் வனக்காவலர்கள் காட்சி இரண்டும் ஜெகன் ஜெயசூர்யாவின் திறமையை வெளிப்படுத்தும் உச்சபட்ச காட்சிகள்.

பாலசுப்ரமணியன்.ஜி-ன் இசை, படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே உடன் வருகிறது. பாராட்டுகள்.

ஹரி குமரனின் படத்தொகுப்பும் சிறப்பு.  ஆரம்பத்தில் சில காட்சிகள், நீளமோ என யோசிக்க வைத்தாலும் போகப்போக, அந்தக் காட்சிகளின் நீளம் அவசியம் என்பது புரிகிறது.

மலைவாழ் மக்களின் துயரத்தை. துன்பத்தை மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்  அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன்.பிரசவ வலியால் துடிக்கும் நாயகியை மலைப்பாதையில் இரவில் கிராமத்தினர் சுமந்து செல்லும் காட்சியில் அவர்களது பதட்டத்தை நமக்கும் கடத்தி இருக்கிறார்.

ஆனால், “கெவி” படத்தின் சில காட்சிகள் “ஹெவி” என சிலர் சொல்லக்கூடும்.  அந்த ஹெவி தேவைதான்.  மலை மக்களின் வலியை உணர்ந்தவர்களுக்கு இதுதெரியும்.

இனி கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்லும்போது, அங்கேயே வசிக்கும் பூர்வகுடி மக்களின் வேதனை மனதிற்குள் வந்துவிடும்.

அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

 

 

 

Related Posts