“நான் ஜெ.,வை எதிர்க்க ஆர்.எம்.வீ.தான் காரணம்!”: ஆவணப்படம் குறித்து ரஜினி!

“நான் ஜெ.,வை எதிர்க்க ஆர்.எம்.வீ.தான் காரணம்!”: ஆவணப்படம் குறித்து ரஜினி!

மறைந்த அமைச்சர்  இராம வீரப்பனின் வாழ்க்கை வரலாறு குறித்த ” கிங் மேக்கர் ” ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. இது குறித்து படக்குழுவினர் தெரிவித்ததாவது:

“உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும் , அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘ king maker ‘ என்னும் ஆவணப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான இராம.வீரப்பன் குறித்த  ஆவணப்படம் மிக  பிரம்மாண்டமாகவும் வரலாற்றில்  கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது.

இப்படத்தில்  ரஜினி, கமல், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இராம.வீரப்பன் குறித்து பேசி உள்ளனர்.

மேலும் ஒன்றிய அரசுக்கு செங்கோல் வழங்கிய தர்மபுரம் ஆதினம், மற்றும் காஞ்சிபுரம் மடத்தை சார்ந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஆகியோரும், தங்கள் கருத்துக்களை பதிந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது பல துறைகளை சார்ந்த வல்லுநர்களாகிய மூத்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்,  பத்மபூசன் விருது பெற்ற தொழிலதிபர் நல்லி குப்புசாமி   உள்ளிட்டோரும் இந்த ஆவண படத்தில் பங்கேற்று சிறப்பு செய்துள்ளனர் .

திராவிட இயக்கங்களின் மகத்தான தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஐயா இராம. வீரப்பன் அவர்கள் .

எம் ஜி ஆர் என்னும் காலத்தில் அழியாத சிற்பத்தை செதுக்கியவர் அவர்.

திராவிடம் மேலோங்க மாபெரும் பங்காற்றிய மட்டற்ற தலைவராகிய இவர் 5 முறை தமிழக அமைச்சராகவும் மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்

தமிழகத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம்பிடித்த ஆளுமையான அருளாளர் இராம வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும், உலகத்தரத்தில் ஒரு ஆவணப்படத்தை அவருக்காக சிறப்பாக  தயாரித்து விரைவில் வெளியிட உள்ளது சத்யா மூவிஸ் நிறுவனம்.

இந்த ஆவணப்படத்தின் 8 நிமிட முன்னோட்டத்தை  இராம வீரப்பன்  முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று ( ஏப்ரல் 9 ) சத்யா மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இந்த முன்னோட்டத்தில் தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின்  “ இந்த ஆவணப் படம் காலத்தின் கட்டாயம் “என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

ரஜினிகாந்த்  “ he is a real king maker “ என மனம் உருகி ஐயா அவர்களை நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். மேலும் அவர், “பாட்சா படத்தின் வெற்றி விழாவில், நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதாக பேசினேன். அந்த மேடையில் ஆர்.எம்.வி. இருந்தார். இதனால் அவரை அமைச்சரவையில் இருந்து ஜெயலலதா நீக்கினார்.  பிறகு ஜெயலலிதாவை நான் எதிர்த்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்” என்று தெரிவித்து இருக்கிறார்.

முன்னோட்டம்:

ஆர்.எம்.வீ. ஆவணப்படம் முன்னோட்டம்

Related Posts