லப்பர் பந்து :விமர்சனம்
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹ்ரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் , காளி வெங்கட், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம், லப்பர் பந்து. ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார்.
இரண்டு கிரிக்கெட் டீம். ஒன்றை ஒன்று வென்று கெத்து காட்டுவதுதான் லட்சியம் என்று துடிக்கிறார்கள். இதற்கிடையே ஒரே டீமில் விளையாடுகிறார்கள் ஹரீஸ் கல்யாணும் அவரது ( வருங்கால) மாமனார் அட்டகத்தி தினேசும். இடையில், சாதி பிரச்சினை.
எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, மிகை இல்லாத திரைக்கதையால் நம்மை கட்டிப்போட்டுவிடுகிறது படம்.
கதையின் இரு நாயகர்களாக ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ். இருவருக்குமே சம அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. தினேஸ் சிறப்பாக நடிப்பார் என்பது அறிந்த விசயம்தான். இதிலும் தனது முத்திரையைப் பதித்து உள்ளார்.
ஆனால் ஹரீஸ் மீது அந்த எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் நடிப்பி் அசத்தி இருக்கிறார் மனிதர். காதலியிடம் காட்டும் நேசம், அவளது தகப்பனாரிடம் காட்டும் முறைப்பு என கவர்கிறார்.
பாராட்டுகள்.
அதே போல் தினேஷின் மனைவியாக நடித்துள்ள ஸ்வாசிகா விஜய் மற்றும் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ள சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.
நண்பர்களாக வரும் பால சரவணன் , ஜென்சன் திவாகர் , காலி வெங்கட் ஆகியவர்களின் கதாபாத்திரங்களும் ரசிக்க வைக்கின்றன.
தினேஷின் மனைவியான ஸ்வசிகா மற்றும் அவரது மாமியார் கீதா கைலாசம் இடையிலான பாசப்பிணைப்பைச் சொல்லும் காட்சிகள் அபாரம்.
வசனங்கள் பல மனதிலேயே நிற்கின்றன. காளி வெங்கட் சொல்லும் “கிரிக்கெட்னா பிடிக்கும் பிடிக்கிறதுக்கு எதுக்கு ரீஸன்” என்கிற வசனம் உதாரணம்.
ஒளிப்பதிவு, இசை படத்துக்கு பலம்.
இயல்பாகச் செல்லும் திரைப்படம், கிளைமாக்ஸில்தான் நாடகத்தனமாகி விடுகிறது.
விளையாட்டை மையப்படுத்திய படம் என்றாலும், வாழ்க்கையைச் சொல்லி இருக்கும் படம்.
அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.
