“இவனுங்கள புரிஞ்சுக்கவே முடியலையே!”: ரயில் படம் குறித்து ஒளிப்பதிவாளர் விஜய் கே. சக்ரவர்த்தி

“இவனுங்கள புரிஞ்சுக்கவே முடியலையே!”: ரயில் படம் குறித்து ஒளிப்பதிவாளர் விஜய் கே. சக்ரவர்த்தி

தெலுங்கு திரையுலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர் விஜய் கே. சக்ரவர்த்தி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர்,  பொமரில்லு படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர்,  விருதுகளும் பெற்றுள்ளார்.

திராவிட, பொதுவுடமைச் சிந்தனை கொண்ட இவரது முகநூல் பதிவுகள் கவனிக்கத்தக்கவை. இந்நிலையில், இந்நிலையில்,  பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளியாக இருக்கும், ரயில் திரைப்படம் குறித்த தனது பார்வையை, தனது முகநூல் பக்கத்தில்  விஜய் கே. சக்ரவர்த்திபதிவிட்டு உள்ளார்.

அந்த பதிவு:

” ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு..’  என்று கற்பிக்கப்பட்ட நமக்கு நிலங்களை கடந்து வந்தவர்கள் ‘தூரமாவது’ எவ்விதம் நடக்கிறது? அதுவும் அந்த, ‘தூரமாவது’ யாரிடம் மட்டும் நடக்கிறது?

கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இங்கிருக்கும் பூர்வகுடி மக்களின் தொழிலையும், தொழிற்சாலைகளையும் களீபரம் செய்து, களவாடிய பனியாக்களிடமும்…  இந்த மண்ணின் இயற்கை வளங்களை திருட மண்ணையும், மலைகளையும் பாழாக்கி, நீர்வளம் அழித்து விவசாயத்தை கொலை செய்யும் வடக்கு, மேற்கத்திய கார்ப்பரேட்டுகளிடமும்…  ‘நதிகளைக் காக்கிறேன், கோவில்களை அரசிடமிருந்து பிடுங்குகிறேன்’ என்று நதிமூலங்களை நாசமாக்கி, யானைகளின் வழித்தடம் அழித்து, வனங்களின் அமைதியை நாடகபக்தி களியாட்டங்களால் களைத்து மனித, விலங்கு மோதலை உருவாக்கி கோடிகளை சுருட்டும், மூளைச்சலவை செய்யும் செத்(த)குருக்களிடமும் வராத அந்த ‘தூரம்’, பசிக்காக மாநிலங்கள் கடந்து வந்திறங்கும் கடைநிலை மனிதர்களிடம் மட்டும் வருவது எதனால்?

இவர்களால் பிரச்சனைகளே இல்லையா என்றால், இருக்கிறது.பத்தாண்டுக்கு முன்னால் நாம் பார்த்திராதபடி, ரயில் பயணங்களில் தொடங்கி, பூர்வகுடி தொழிலாளர்களின் வேலை, வருமான இழப்பு, இந்த மண்ணின் கலாச்சார, சித்தாந்த அரசியல் தடமாற்றம் வரை இருக்கிறது.அதை நெறிப்படுத்துவது இங்கிருக்கும் அரசின்,சித்தாந்தவாதிகளின் கடமையல்லவா? இந்த முதலாளிகள் ஏன் அங்கிருந்து வருபவர்களை ஆதரிக்கிறார்கள்? அன்பாலா, மனிதாபிமானத்தாலா?

இல்லவே இல்லை… அவர்களின் வறுமையை பயன்படுத்தி அரைக்கூலிக்கு அடிமைகளாக, கால வரைவின்றி உழைப்பை சுரண்ட முடியும் என்கிற வணிக காரணத்தால்.!

அமைப்புசாரா தொழிலாளர்களின், கூலிகளின் சம்பளத்தை, வேலை நேரத்தை முறைப்படுத்துவதும் இங்கிருக்கும் அரசின் கடமையல்லவா? இந்த முறைபடுத்துதல் நடந்தால், இந்த முரண்பாடுகள் குறையும் அல்லது களையப்படுமல்லவா? இனத்தூய்மைவாதம் கடந்து சமத்துவம் பேசும் திராவிட, இடதுசாரி தமிழ்தேசிய, உழைக்கும் மக்களின் துணையாக நிற்கும் மார்க்சிய சித்தாந்தங்களால் செறிவடைந்த மண்ணல்லவா தமிழ்நாடு!

இதையெல்லாம் பேசுகிறதா பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ரயில் என்றால், ஒரு மெயின்ஸ்ட்ரீம் படத்தின் எல்லைகளில் நின்று இதில் சிலவற்றை பேசுகிறது, பல விவாதங்களுக்கான விதைகளை தூவுகிறது.

இறப்பு, பேதங்கள் கடந்து, சாகக்குடுத்த உறவுகளுக்கு ஆறுதலாக நிற்கும், துயர் பகிரும் மாண்பை மனிதர்களுக்கு கொடுக்கும்.அதை இயல்பாக பதிவு செய்திருக்கிறது. வடக்கன் என்று தூற்றும், அனாதைப்பிணம் என்று கடந்து செல்லும் மனிதர்கள் இருக்கும் ஊரில் தான், “இவன் எனக்கும் மகன் தான்; நான் எடுத்து செய்கிறேன்” என்று செலவு செய்யும் மனிதனும், அடிமனதிலிருந்து ஒப்பாரி வைக்கும் கிழவியும், எவ்விதத்திலும் உறவில்லாதவன் சாவுக்கு கூட்டமாய் வந்தமரும் மக்களும் இருக்கிறார்கள். “இவனுங்கள புரிஞ்சுக்கவே முடியலையே” என்று படத்தில் வரும் வசனம் தான் நமக்கு இவர்களை புரிய வைக்கிறது. வன்மமும், வெறுப்பும் இவர்களின் இயல்பல்ல; இவர்களின் சகமனிதன் மீதான அன்பும், பரிவும் பேதங்கள் கடந்தது.ஒரு கதையின் ஆன்மாவில் அன்பும், மனிதமும் மிகுந்திருக்கும் போது, நடிக்க வந்தவர்கள் வாழ்ந்து விட்டுப் போவதும், இசை நம்மை வருடிவிட்டுப் போவதும் நடக்கும்.ரயிலில் நடந்திருக்கிறது.

வாழ்த்துக்கள் !” – இவ்வாறு ஒளிப்பதிவாளர் விஜய் கே சக்ரவர்த்தி, தனது மனப்பதிவை வெளியிட்டு உள்ளார்.

Related Posts