விமர்சனம்: வித்தைக்காரன்  

விமர்சனம்: வித்தைக்காரன்  

ஒரு மேஜிக் நிபுணர், தன் குடும்பத்தை சிதைத்தவர்களை பழிக்குப் பழி வாங்க திட்டமிடுகிறார்.  வில்லன் கும்பல் கடத்தும் வைரத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு, வில்லன்களை  வரவழைக்கிறார்.

வரைத்தை  எப்படி கொள்ளையடிக்கிறார்,  வில்லன்களை எப்படி பழி தீர்க்கிறார் என்பதே கதை.

கேட்பதற்கு கதை சீரியஸாக இருந்தாலும், முழுக்க முழுக்க நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு மிகவும் பொருத்தமான ஹீரோவாக வலம் வருகிறார் சதீஷ். அதே நேரம், சிதைந்த குடும்பத்தை நினைத்து வருந்துவது, தான் காதலிக்கும் பெண்ணுக்காக கொள்ளை முயற்சியில் இறங்குவது என பல்வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்தி உள்ளார்.

நாயகி சிம்ரன் குப்தா. நடிப்பதற்கு அவ்ளவாக வாய்ப்பு இல்லை.அழகு பதுமையாக வந்து போகிறார்.காமெடி வில்லன் ஆனந்த் ராஜ் வரும் காட்சிகள் அனைத்தும் செம ரகளை. குறிப்பாக விமான நிலைய காமெடியைச் சொல்லலாம். டாலர் அழகு என்கிற இவரது கதாபாத்திரம் மறக்க முடியாதது.

இவரைப்போலவே ஜான் விஜய், மதுசூதனன், சாம்ஸ்  ஆகியோரும் சிரிக்கவைக்கிறார்கள்.

பல திரைப்படங்களில் பாடல்களில் தனது வித்தியாசமான உடல் மொழியில் ரசிகர்களை ரசிக்கவைத்த டான்சர் ஜப்பான் குமார் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று இருக்கிறார். ரசிக்கவும் வைக்கிறார்.

இசை வெங்கட் பரத், ஒரு காமெடி படத்துக்குத் தேவையான இசையை சிறப்பாகவே அளித்து இருக்கிறார்.முதல் பாதியில் காமெடி மட்டுமே.. கதை பெரிதாக நகரவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில், திரைக்கதை வேகம் எடுக்கிறது.

25 கோடி மதிப்புள்ள வைரத்தை கைப்பற்றுவதற்காக மூன்று வில்லன்களும் விமான நிலையத்திற்குள் சுற்றி வருகிறார்கள். அவர்களை அங்கே சாதுர்யமாக வரவழைக்கிறார் நாயகன்.

அதன் பிறகு அதகளம்தான். விறுவிறுப்புக்கும், சிரிப்புக்கும் பஞ்சமில்லை.முக்கியமாக, ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத ஜாலியான காமெடி படம். குடும்பத்துடன் பார்க்கலாம்.

 

Related Posts