இந்தியா, கனடா: அமெரிக்க ஆதரவு யாருக்கு?:  யுஎஸ் ராணுவ முன்னாள் அதிகாரி கருத்து

இந்தியா, கனடா: அமெரிக்க ஆதரவு யாருக்கு?:  யுஎஸ் ராணுவ முன்னாள் அதிகாரி கருத்து

வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விவகாரத்தில் அமெரிக்கா யாருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது பற்றி அந்நாட்டு ராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி சொன்ன கருத்து கவனம் பெற்றுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு காரணமாக இந்தியா – கனடா இடையே மோதல் வலுத்துள்ளது.  இது தொடர்பாக, அமெரக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் கருத்து தெரிவித்து உள்ளார்.

அவர், “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவைக் காட்டிலும் கனடாவுக்குத் தான் பெரிய ஆபத்துக்கு வழிவகுத்து உள்ளது. இந்த விவகாரத்தில் யாருக்கு ஆதரவு என்ற சூழலை அமெரிக்கா எதிர்கொண்டால், நிச்சயமாக இந்தியாவைத்தான் தேர்வு செய்யும். கனடாவைவிட இந்தியாவுடனான உறவையே அமெரிக்கா முக்கியமானதாகக் கருதுகிறது. இந்தியாவுடன் கனடா மோதுவது ஓர் எறும்பு யானையை எதிர்கொள்வதைப் போன்றதாகும்” என்றார்.

மேலும், அண்மையில் வெளியான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீதான மக்கள் அதிருப்தி கருத்துக் கணிப்பு ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், “பிரதமர் பதவிக்கு ட்ரூடோ தகுதியானவர் அல்ல. இந்தியா மீது குற்றம்சாட்டி ஜஸ்டின் ட்ரூடோ மிகப் பெரிய தவறிழைத்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். இந்திய அரசுக்கு எதிரான அவருடைய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவரிடம் ஆதாரங்கள் இல்லை. தவிர ஒரு பயங்கரவாதிக்கு ஏன் ஆதரவு கொடுத்தது என்பதை விளக்க வேண்டிய கட்டாயத்தில் ட்ரூடோ அரசு இருக்கிறார்” என்றார்.

மேலும், “இந்தச் சூழலில் கனடாவா, இந்தியாவா என்ற சூழலை அமெரிக்கா எதிர்கொள்ளாது என்று நம்புகிறேன். ஒருவேளை அப்படி நேர்ந்தால், நிச்சயமாக நாங்கள் இந்தியாவையே ஆதரிப்போம். காரணம், இந்தியாவுடனான நட்புறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம்” என்றும் ரூபின் கூறியுள்ளார்.