“தியேட்டர்கள், சிலரின் கைப்பிடியில் இருக்கின்றன!”: சி.பி.எம். கேபி அதிரடி பேச்சு!

“தியேட்டர்கள், சிலரின் கைப்பிடியில் இருக்கின்றன!”: சி.பி.எம்.  கேபி அதிரடி பேச்சு!

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கற்பு பூமி’. இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்வு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

( செய்தி:   https://tamilankural.com/karpu-bhoomi-audio-launch/  )

நிகழ்வில், இந்திய மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “’கற்புபூமி’ படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான நேசமுரளி சினிமாவிற்கும் அரசியலுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் கருத்தியல் ரீதியாகப் போராடுவது ஒரே விசயமாக இருந்தாலும், திரைப்படம் மற்றும் திரைத்துறை என்பது பெரும் பொருள் கோரும் துறை. ஒரு கருத்தினை மக்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் குறைந்தபட்சம் 3 கோடியில் இருந்து உங்களுக்குச் செலவாகும். எங்களுக்கு ஒரு தெருமுனையும் மைக்கும் தான். அதுவும் இல்லை என்றால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ரோட்டில் இறங்கிவிடுவோம். மிரட்டல்கள் உங்களை விட எங்களுக்கு அதிகமாக வரும். ஆனால் பொருளாதார இழப்புகள் என்பது பெரிதாக இருக்காது.

நீங்கள் ஒரு படத்தை எடுப்பதோடு உங்கள் நோக்கம் முழுமையடைந்து விடாது. அதை மக்கள் பார்க்கும் போது தான் உங்கள் நோக்கம் முழுமையடையும். எனவே இது போன்ற தடைகளைத் தாண்டி எப்படி படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பது குறித்து புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும். படத்தை வெளியிடுவது என்பது கடினமான வேலை. மேலும் இன்று தியேட்டர்களும் குறிப்பிட்ட சிலரின் கைகளில் தான் இருக்கின்றது. அவர்கள் எந்தப் படம் ஓடவேண்டும் என்று தீர்மானிக்கிறார்களோ அந்தப் படம் தான் ஓடுகிறது. மற்ற படங்களை ஓடவிடமாட்டார்கள்.

கருத்துள்ள நல்ல படம் ஓட மாட்டேன் என்கிறது. நன்றாக ஓடும் படங்களில் கருத்தே இல்லை. நமக்குத் தேவை எல்லாம் நன்றாக ஓடக் கூடிய கருத்துள்ள படங்கள். அப்படங்களை எப்படி மக்களிடம் சென்று சேர்ப்பது என்பதை யோசியுங்கள்.

இருப்பினும் இப்படி ஒரு கருத்தைப் பேச வேண்டும் என்று எண்ணிய உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துகள். மேலும் நாட்டில் நடக்கும் இது போன்ற குற்ற நிகழ்வுகள் குறித்து இளைஞர்கள் பேச முன்வர வேண்டும். இயக்குநர் நேசமுரளி இது போன்ற சமூக அக்கறை கொண்ட பல படங்களை உருவாக்கி வெற்றி பெற்றிட வாழ்த்துகள்” என்றார்.

Related Posts