திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 8

திருப்பாவை பாடல் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்; பிரியமான தோழியே!…பொழுது விடிந்து விட்டது… நீராட எழுந்திரு. கறுத்து இருந்த வானம் கிழக்குத் திசையில் வெளுத்து சூரியன் வரும் நேரம் ஆகிவிட்டது. மிகவும் மந்தமான எருமைகளே எழுந்து மேய்ச்சலுக்கு சென்றுவிட்டன.

அழகே நீ இன்னும் தூங்குவது சரியில்லை? நீ வருவதற்காக பலர் கோயிலுக்குப் போகாமல் காத்திருக்கின்றனர். அவர்களின் கால் வலிக்கும் மனமும் சேர்ந்து போகும் சீக்கிரம் எழுந்து வா..

குதிரை வடிவான அசுரனின் வாயைப்பிளந்து கொன்று, “சிறுவனுக்கு இவ்வளவு பலசாலியா?’ என நம்மை வாய்பிளக்க வைத்தவன் கண்ணபிரான். தாய்மாமன் கம்சன் அனுப்பிய  பல அசுரர்களை கொன்று குவித்தவன்.

அவனது சிறப்புகளைப் பாடியபடி, கோயிலுக்குச் போகலாம் வா தோழி. இறைவன் அருள் கிடைத்தால், நம்மை குற்றம், பாவமும் செய்ய தூண்டும் ஆசை அசுரனை, நம் கர்வத்தை கொன்றுவிடலாம் என இந்த பாடலில் குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.

காலை நேரத்தில் கீழ்வானம் சட்டென்று வெளுப்பது கிடையாது. இருண்டிருந்த வானம், மெதுவாக சிவந்து, வண்ணக் கலவையாகிய நிலையிலிருந்து மெல்ல பூரண வெண்மையை அடையும். அது போல, நம் மனமும் தீய என்னங்களை கலைந்து ஞானத்தெளிவு பிறக்கும்.

திருவெம்பாவை 

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.
பொருள்: தோழியை எழுப்பிவிடு பெண்கள், பாசமான தோழியே! கோழி கூவி வெகு நேரம் ஆகிவிட்டது. பறவைகள் சத்தம் எழுப்புகின்றன. அவைகளின் ஒலிகூட சிவ சிவா என்று கேட்கிறது. கோவில்களில் வெண்சங்கின் ஒலி எல்லாயிடத்திலும் கேற்கிறது உன் காதில் கேற்வில்லையா? நாங்கள் கேட்டு பரவசம் அடைந்தோம் நீ மட்டும் ஏன் இப்படி உறக்கத்தில் இருக்கிறாய்.

நீ கடவுளை வணங்குவது இப்படித்தனா? இவ்வுலகத்தில் அனைத்து ஜீவராசிகளும் பரபொருளை அவனடி சேர்ந்து மனமுகர்ந்து கிடக்கின்றன. எல்லாமக விளங்கும் பரஞ்சோதியை, முதல்வனை, ஏழைகளின் தலைவனை வணங்க வேண்டாமா? இன்னும் ஏன் உறங்குகிறாய் என தோழியை எழுப்புகின்றனர்.