திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 7

திருப்பாவை பாடல் 7

கீசு கீசென்று எங்கும் ஆணை சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே?

காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: பொழுது விடிந்து விட்டது. ஆணை சாத்தன் பறவைகள் கீச்சு கீச்சு என்று குரல் எழுப்பி தங்களுக்குள் பேசத் தொடங்கி விட்டன. அது உனக்கு கேட்கவில்லையா? நெய் மணம் வீசும் கூந்தலையுடைய இடையர் குலப் பெண்கள், தங்கள் கைகளை அசைத்து மத்தினால் தயிரைக் கடையும் சல சல என்னும் ஒலியும் கூடவா உன் காதுக்கு கேற்கவில்லை? தலைமைத்துவம் பெற்ற பெண்ணே! அந்த பரந்தாமனை, நாராயண மூர்த்தியை, கேடில் விழுப் புகழ் கேசவனை, அண்ணலை, அச்சுதனை, அனந்தனை நாங்கள் அனைவரும் பாடுகின்றோம்! உன் காதில் விழுந்தும்  நீ அதைக் கேட்காதது போல் தூக்க சுகத்தில் ஆழ்ந்து இருகிறாயே, ஒளி பொருந்திய உடலை கொண்ட பெண்ணே! ஓடி வந்து கதவைத் திறடி கண்ணே என முடிகிறது.

திருவெம்பாவை 7

 அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர்

 உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

 சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்

 தென்னானென் நம்முன்னம் தீ சேர் மெழுகொப்பாய்

 என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்

 சொன்னோங் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்

 என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

 பொருள்: தோழியே! நாங்கள் உனக்கு இதுவரை கூறியது என்ன கொஞ்சமால்ல? இறைவன் தேவர்கள் பலராலும் யோசித்து பார்க்கவும் அறியத, ஒப்பற்றவன்! பெரும் புகழ்கொண்டவன்.

அதிகாலையில் அந்த பெருமானுடைய இசை ஒலி கேட்டால் உடனே சிவ, சிவா என்று கூறுவாயே. தென்னா என்று அவர் பெயரை சொல்லும் போதே மெழுகாய் மனம் உருகிப் போவாயே! அப்படிப் பட்ட உனக்கு இன்று என்னாய்ற்று? இன்னும் சிறு பிள்ளையாய் விளையாடுகிறாயே?

நாங்கள் எல்லோரும் கூடி, தனித் தனியாகவும், “என் இறைவனே!, என் அரசனே! இனிய அமுதனே” என்று பலவாறாகவும் பாடும் பொழுதும் கொடுற மனமுடையவள் போல பேசாமல் இருகின்றாயே! உன் உறக்கத்தை என்ன வென்று கூறுவேன். தனது தோழியின் உறக்கத்தை இவ்வாறு விமர்சிக்கிறார்கள் மற்ற தோழிப் பெண்கள்.