திருப்பாவை, திருவெம்பாவை பாடல் – 11

திருப்பாவை -11

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறல் அழியச் சென்று செருகச் செய்யும்

 குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

 புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்

 முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட

 சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ

எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்.

பொருள்;  கன்றுகளை ஈன்று, அதிகமாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய, அவர்கள் இருக்கும் இடத்திற்கேச்  சென்று போர் புரிபவர்களும் ஆன, ஒரு குறையுமில்லாத, இடையர் குலத்தில் பிறந்த  தங்கக்கொடியை போன்ற அழகிய வடிவுடைய பெண்ணே! புற்றிலிருந்து வெளிப்படும் படமெடுத்த நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிய இடையும், வண்ண மயிலை ஒத்த சாயலை உடையவளே, துயில் எழுந்து வா!

நம் ஊரில் இருக்கும் அனைத்து தோழியரையும், உறவினர்களையும் கூட்டி வந்து, உன் வீட்டின் முற்றத்தில் கூடி, அந்த கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி நிற்கின்றோம்!  செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே!  இவை அனைத்தயும் கேட்டும் அசையாமலும், பேசாமலும் தூங்கிக்கொண்டிருக்கிறாயே!

 பயனற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம் நீ முதலில் எழுந்துவா… என்று உறங்கும் பெண்ணை எழுப்புகின்றனர் தோழியர்.

திருவெம்பாவை – 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

 கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

 செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்

 மையார் தடங்கண் மடந்தை மணவாளா

 ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்

 உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

 எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.

பொருள்; சூழ்ந்த நெருப்புப் போன்ற செந்நிறம் கொண்ட வனே! வெண்மையான திருநீற்றில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைதீட்டிய பெரிய கண்களையும் கொண்ட உமையம்மையின் மனவாளனே!

உனது அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் குதித்து, நீந்திய நீராடியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடிகின்றோம். தொன்று தொட்டு இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய். எங்கள் முதல்வனே… நீ எங்களை ஆளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்திலிருந்து நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் நாங்களும் அடைந்து விட்டோம். இனி, நாங்கள் பிறக்காதவாறு எங்களைக் காத்தருள்வாயாக என முடிகிறது.