காணிக்கை இல்லை.. சாக்லேட்தான் பிரசாதம்.. நினைத்தவுடன் தரிசித்துவிட முடியாது!: நெமிலி பாலாவின் அற்புதங்கள்!

ற்பல ஆண்டுகளுக்கு முன்…

வேலூர் மாவட்டம் தாங்கி என்னும் சிற்றூரில் வசித்தவர் ராமசுவாமி அய்யர். வேதவிற்பன்னரான அவர், இறைவனுக்கு தொண்டு செய்வதையே கடமையாக வாழ்ந்தவர்.

அவருக்கும் சிரமதசையைக் கொடுக்கொடுத்து திருவிளையாடினான் இறைவன்.

குடும்பத்தினரைக் காப்பாற்ற, அவர்களோடு, ஊரை விட்டே கால்நடையாக  கிளம்பினார் ராமசாமி அய்யர்.

அரக்கோணம் அருகிலுள்ள நெமிலி கிராமத்தை வந்தடைந்தனர்.

அங்கு சத்திரம் ஒன்றைக் கண்டவர்கள், ‘வசிக்க வீடு கிடைக்கும்வரை, இங்கேயே தங்கலாம்!’ என முடிவெடுத்தார்கள்.

அந்த சத்திரத்தின் திண்ணையில் ஏறி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.

அப்போது அந்தப் பக்கம் வந்த ஊரார் சிலர், “அய்யோ.. இது மோகினி பிசாசு வசிக்கும் இடமாயிற்றே… இங்கே தங்காதீர்கள்!” என பதறிப்போய் எச்சரித்தனர்.

ஆனால், அய்யர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

தூசிபடிந்து கிடந்த சத்திரத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தீபம் ஏற்றினார் அய்யரின் மனைவி சாவித்திரி. அன்று இரவு உணவை உண்டு குடும்பத்தினர் உறங்கினர்.

ஆனால் ராமசாமி அய்யர், முழுதும் உறங்கவே இல்லை;  மந்திரங்களைப் பாராயணம் செய்து கொண்டே இருந்தார்.

விடிந்ததும் விடியாததுமாக, சத்திரத்துக்கு ஓடிவந்த ஊர் மக்கள், அங்கே அய்யரும் அவரது மனைவி மக்களும் நலமுடன் இருந்ததைக் கண்டு அதிசயித்தனர்.

‘இவர்களிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது!’ என்பதை உணர்ந்த அவர்கள், ‘குடும்பத்துடன் எங்கள் ஊரிலேயே தங்கிவிடுங்கள்!’ என்று கேட்டுக்கொண்டனர்.

காலம் ஓடியது…

ஒருநாள் இரவு, ராமசுவாமி அய்யரின் இரண்டாவது மகன் சுப்பிரமணியனின் கனவில் ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி காட்சி அளித்தாள். அவள்,  “அன்னை ராஜராஜேஸ்வரியின் அருளாசிப்படி பாலாவாகிய நான் கொசஸ்தலை ஆற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கிறேன். என்னை நீ எடுத்து உனது இல்லத்தில் வைத்து வழிபடு! தொட்டதெல்லாம் துலங்கும்” என்று  கூறி மறைந்தாள்!

அன்னை பராசக்தியே தனது இல்லத்தில், எழுந்தருளப்  போவதாகப் ஆனந்தக் கூத்தாடினார், சுப்பிரமணியன்.

மறுநாள் அதிகாலையிலேயே,  ஊரார் சிலரோடு கொசஸ்தலை ஆற்றுக்கு ஓடினார். ஆற்றில் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனாலும், அதில்  இறங்கி, பாலாவைத் தேடினார் சுப்பிரமணியன்.

வெகுநேரமாகியும் பாலா வரவில்லை. சோர்ந்து நின்ற அவரை ஊர் மக்கள்,  சமாதானம் செய்து அழைத்து வந்தனர்.

மறுநாள், விடிகாலையிலும் தான் மட்டும் ஆற்றுக்கு ஓடினார் சுப்பிரமணியன். இம்முறையும் பாலா பிரசன்னமாகவில்லை.

முயற்சியைக் கைவிடாத அவர் மூன்றாம் நாளும் ஆற்றில் இறங்கித் தேடினார்.

அப்போதும் கிடைக்கவில்லை.

இறுதியாக, பாலாவை நினைத்தபடி ஆற்றில் ஒருமுறை மூழ்கி எழுந்தார். வலைவீசித் தேடியும் கிடைக்காத பாலா, சுப்பிரமணியனின் கையில் வந்தமர்ந்தாள்!

 விரல் அளவிலான பாலாவைப் பார்த்துப் பரவசம் கொண்ட அவர், அந்த விக்கிரகத்தை வீட்டுக்கு எடுத்து வந்து, முறைப்படி வழிபட ஆரம்பித்தார்.

நவராத்திரிக்கு சில தினங்களே இருந்த நிலையில் குழந்தை பாலா, சுப்பிரமணிய அய்யரின் இல்லத்தில் குடியேறிய செய்தி கேட்டு நெமிலி மக்கள் அனைவரும் திரண்டுவந்தனர்.

அந்த வருட நவராத்திரிக் கொண்டாட்டங்களின் நாயகி ஆனாள் பாலா. ஒன்பது நாட்களும் ஹோமம், அபிஷேகம், பூஜைகள், அன்னதானம், வஸ்திரதானம் என தடபுடலாய் நடந்தன.

பாலா. தான் குடிகொண்ட கிராமத்தையும் தன்னை வணங்கிச் சென்ற மக்களையும் செல்வச் செழிப்பாக்கினாள் பாலா.

சுப்பிரமணிய அய்யரின் இல்லம் பாலா பீடமானது.

இந்த அற்புதத் தலம், காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் 23-ம் கிலோமீட்டரில் இருக்கும் நெமிலியில் இருக்கிறது.

பாலாவுக்கு என  பல தனிப்பட்ட விசேசங்கள் உண்டு. இது குறித்து, ஸ்ரீபாலா பீடாதிபதி நெமிலி எழில்மணி கூறுகையில், “‘காஞ்சி காமாட்சியாக, மதுரை மீனாட்சியாக காட்சியளிப்பது எல்லாமே பாலா தான்!

இது கோயில் அல்ல.. பாலாவின் இல்லம்!

எவரும் இங்கே நினைத்த மாத்திரத்தில் வந்து பாலாவை தரிசித்துவிட முடியாது. யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அவர்களை அவளே நேரம் கொடுத்து அழைப்பாள். அப்படி அவளால் அழைக்கப்படுகிறவர்கள் இங்குவந்து வைக்கும் வேண்டுதல்களை அவள் நிறைவேற்றிக் கொடுப்பாள்.

பக்தர்கள் எந்தக் காரணம் கொண்டும், ‘ வேண்டுதலை நிறைவேற்றித் தந்தால், இதைச் செய்கிறேன்’ என்று வேண்டிக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் பாலா யாரிடமும்  கேட்க மாட்டாள். அதனால்தான் இங்கே உண்டியல்கூட வைப்பதில்லை” என்றார்.  

காஞ்சி மகாபெரியவர், திருமுருக கிருபானந்த வாரியார், பரமஹம்ச புவனேஸ்வரி சுவாமிகள் உள்ளிட்ட மகான்கள் பலரும் பாலா பீடம்  வந்து பாலாவை தரிசித்துள்ளனர்.  

மிக வித்தியாசமான பிரசாதம் இங்கே அளிக்கப்படுகிறது.. அது சாக்லேட்.  விரும்பினால் பக்தர்களும் சாக்லேட் வாங்கி பாலாவு படைக்கலாம்.

வருடம் முழுதுமே பாலாவை தரிசிக்க உகந்த நாட்கள்தான் என்றாலும், நவராத்திரி சமயத்தில் நலம்பயக்க நாடிவந்தவள் என்பதால் ஆண்டுதோறும் பாலா சன்னிதியில் நவராத்திரி உற்சவம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த பதினோரு நாள் வைபவத்தில் மலைமகள், அலைமகள், கலைமகள் என நித்தம் ஒரு அவதாரத்தில் அன்னை பாலா காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

நவமி அந்தியத்தில் நடைபெறும் மகிஷாசுர வதம் வைபவத்தைக் காண  ஏராளமான பக்தர்கள்  இங்கே வருவார்கள்.

தவிர, புத்தாண்டு தினங்கள், மாதத்தின் முதல் ஞாயிறு, தை மற்றும் ஆடி வெள்ளி தினங்களில் பாலாவுக்குச் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் பெற,  கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்க வேண்டிக்கொண்டு, அருள் பெற்ற பக்தர்கள் ஏராளமானவர்கள் உண்டு.

தினமும் காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும் பாலா பீடம்,  பக்தர்களுக்காகத் திறந்திருக்கும்.

ஆனாலும்,  பாலா பீட நிர்வாகிகள் ஆன்மிக யாத்திரை செல்பவர்கள் என்பதால் அன்பர்கள் 04177 247216 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை தெரிவித்துவிட்டு பாலாவை தரிசிக்கச் செல்லுங்கள்.

உங்கள் துயர்கள் அனைத்தையும் துடைத்து, வாழ்க்கையை மங்கலகரமாக்குவாள் பாலா!

-யாழினி சோமு