திரை விமர்சனம்: சத்தமின்றி முத்தம் தா  

திரை விமர்சனம்: சத்தமின்றி முத்தம் தா  

நாயகி சந்தியாவை, முகம் மறைத்த உருவம் ஒன்று கொலை செய்ய துரத்துகிறது. அந்த மர்ம மனிதரிடம் இருந்து தப்பித்து ஓடி வருகிறார். அப்போது ஒரு ஒரு கார் அவர் மீது பாய்கிறது. மயக்க மடைகிறார்.

அப்போது  அந்த வழியாக வரும் ஒரு நபர், சந்தியாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். தனது பெயர் ரகு என்றும், அடிபட்டவர் தனது மனைவி சந்தியா  என்றும் மருத்துவமனையில் பதிவு செய்கிறார்.

சந்தியா குணமானபிறகு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். விபத்தில் தப்பித்தாலும் சந்தியாவுக்கு நினைவுகள் மறந்துவிடுகின்றன.

அவளிடம், தான்தான் கணவன் என்கிறார் ரகு. அவளும் நம்புகிறாள்.

ஆனால் ஒரு கட்டத்தில், ரகு என்கிற அந்த மனிதன் தனது கணவன் அல்ல என்பதை சந்தியா அறிகிறாள். இதற்கிடையே, இருவரை ரகு கொல்வதையும் நேரில் பார்த்துவிடுகிறாள் சந்தியா.

அங்கிருந்து தப்பித்து ஓடுகிறாள்.இன்னொரு புறம், காவல் நிலையத்தில் ஒருவர் புகார் தருகிறார். அவர், “என் பெயர் ரகு. என் மனைவி சந்தியாவை ஒரு மாதமாக காணவில்லை” என்கிறார்.

சந்தியாவை கொல்ல முயன்ற உருவம் யார், அவள் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியது யார், அவளை மருத்துவமனையில் சேர்த்த மனிதன் தன்னை சந்தியாவின் கணவன் என சொன்னது ஏன்… இப்படி அடுக்கடுக்கான முடிச்சுகளை அவிழ்க்கிறது திரைப்படம்.

விக்னேஷ் என்ற கதாபாத்திரத்தில், மூர்க்கமான இளைஞராக நடித்து இருக்கிறார் ஸ்ரீகாந்த். சண்டைக் காட்சியிலும், கொலைக் காட்சிகளிலும் அதகளப்படுத்துகிறார். அமைதியான முகத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் அதிரடிகள் பயத்தையே ஏற்படுத்துகின்றன.

பிரியங்கா திமேஷ் நாயகியாக நடித்துள்ளார். கன்னடத்தில் ஓரளவு பிரபலமான இவர்  தமிழுக்கு புது வரவு. தான் யார் என்பதே  புரியாத குழப்பம், கண்ணெதிரே கொலைகள் நடக்கும்போது வெளிப்படுத்தும் பதட்டம் என நிறைவாக நடித்து உள்ளார்.

காவல்துறை அதிகாரியாக வருகிறார் ஹரிஷ் பெராடி. எப்போதுமே இயல்பான நடிப்பை அளித்து ரசிக்க வைப்பவர். இந்தப் படத்தில் ஏனோ, எப்போதுமே கண்மூடி தியான நிலையில் டயலாக்கை உதிர்க்கிறார். வித்தியாசம் காண்பிக்க வேண்டும் என்று செய்தாரோ என்னவோ…!வில்லன் வியான் சிறப்பான நடிப்பு. மனைவி மீது காதலை வெளிப்படுத்துவதாய் நடிப்பது.. தன்னைப் பற்றி மனைவிக்குத் தெரிந்தவுடன் வில்ல முகத்தைக் வெளிப்படுத்துவது என்று பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார்.

வியானின் நெருங்கிய தோழியாக நடித்திருக்கும் நிஹாரிகா பாட்ரோ அதிரடி கவர்ச்சி காண்பித்து இருக்கிறார்.

க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற பின்னணி இசை படத்துக்கு பலம். இசையமைப்பாளர் ஜுபினுக்கு பாராட்டுகள்.

எம். யுவராஜ் ஒளிப்பதிவுவும் படத்துக்கு பலம்.

மொத்தத்தில் ரசிக்க வைக்கும் த்ரில்லரை கொடுத்து இருக்கிறார் இயக்குநர்  ராஜ் தேவ்.

சத்தமின்றி முத்தம் தா – சத்தமின்றி ரசிக்கவைக்கிறது.

 

Related Posts