“சிறைக்குச் செல்லத் தயார்.. ஆனால்..!”: ‘உயிர் தமிழுக்கு’ விழாவில் அமீர் ஆவேசம்!

“சிறைக்குச் செல்லத் தயார்.. ஆனால்..!”: ‘உயிர் தமிழுக்கு’ விழாவில் அமீர் ஆவேசம்!

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்க, அமீர் நாயகனாக நடிக்கும் படம், உயிர் தமிழுக்கு. நாயகியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார். மேலும், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

படத்துக்கு வித்யாசாகர் இசையமைப்பாளர். இப்படம் வரும் மே 10ம் தேதி உலககெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், பேசிய இயக்குநர் அமீர், “எனது திரை வாழ்க்கையில், நான் சந்திக்காத புதிய மேடை இது, எனக்கே புது அனுபவமாக உள்ளது இந்த மேடை. படம் பற்றி பேசுவதா, இன்றைய சூழ்நிலையில் கடந்து கொண்டு இருப்பதை பற்றி பேசுவதா, இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் என்னுடன் இருக்கும் என் நட்புகளைப் பற்றி பேசுவதா என்பதில் எனக்கே பெரிய குழப்பம் உள்ளது.

ராமாயணத்தில் சீதை அக்னியில் இறங்கி தான் கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார். ஆனால், நான் வாராவாரம் நிரூபித்து கொண்டே வருகிறேன்” என்று ஜாபர் சாதிக் வழக்கு குறித்து பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், “எனக்கு பத்திரிக்கையாளர்கள் மீது மிகுந்த அன்பு உண்டு, யார் என்னை தொடர்பு கொள்ள வேண்டுமோ அவர்கள் என்னிடம் நேரடியாக பேசுவார்கள். ஆனால், இன்று ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால், வயிற்று பிழைப்புக்காக பலர் கண்டதை எழுதி வருகிறார்கள்.

இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் என்னோடு அன்பாக இருந்தவர், அவரை நான் தம்பி என்று அழைத்தேன். அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதில் எதையாவது நான் மறுக்க முடியுமா? அவர் யார் என்று தெரியாது… பார்த்ததே இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது.

அவரை தெரியுமா என்று கேட்டால், தெரியும்…! அவருக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கா என்று கேட்டால், ‘ஆமாம் இருக்கு’ என்று தான் சொல்வேன்.

ஆனால், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திற்கும் எனக்கும் தொடர்பு இருக்கா என்று கேட்டால், ‘இல்லை வெண்ணைகளா’ என்று தைரியமாக சொல்வேன். அந்த தைரியமும், திமிரும் எப்போதும் என்னிடம் இருக்கும்.

என்னை சந்தேகப்படுவதில் எந்தத் தப்பும் இல்லை ஆனால் தீவிரமாக விசாரிக்காமல் நீங்களாக தீர்ப்பு எழுதுவது ரொம்ப ஆபத்தானது. அந்த தீர்ப்பை எழுதுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.

நான் ஹீரோக்களோடு பயணம் செய்யாமல் எனக்கான ஒரு பாதையை தேர்வு செய்து அதில் பயணம் செய்து வருகிறேன். பணம் சம்பாதிப்பது என் நோக்கம் இல்லை. சிறைக்குச் செல்ல நான் தயார், ஆனால் நான் வெறுக்கும் போதைப் பழக்கத்தில் தொடர்புடைய வழக்குக்காக சிறைக்குச் செல்ல மாட்டேன் என்றும், போதை சமூகத்தை சீரழிக்கிறது” என்று  இயக்குநர் அமீர் சீற்றத்துடன் பேசி முடித்தார்.

Related Posts