விமர்சனம்: பிரேமலு: ரசித்துச் சிரிக்கலாம்!
மலையாளப் படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு படம்.
படத்தின் பெயரே, ‘காதல் + நகைச்சுவைக்கு கியாரண்டி’ என்பதைச் சொல்லி விடுகிறது. பிரேமம் என்றால் மலையாளத்தில் காதல் என்று அர்த்தம்.. கதை ஹைதராபாத்தில் நடக்கிறது என்பதால் பிரேமலு.
கேரளாவைச் சேர்ந்த சச்சின், தமிழ்நாட்டின் சேலத்தில் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். உடன் படிக்கும் மாணவி மீது அதீத காதல். கல்லூரி காலம் முடியும் நேரத்தில் காதலை வெளிப்படுத்துகிறார். அந்தப் பெண்ணே, தான் வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்லி விலகுகிறார்.
மனம் நொந்த சச்சின், படிப்பு முடிந்ததும், பிரிட்டன் செல்ல தீர்மானிக்கிறார். அதற்கான பொருளாதார சூழல் இல்லை.
இந்த நிலையில் பள்ளித் தோழனை சந்திக்கிறார். அவர், ஹைதராபாதில் எம்.டெக் படிப்புக்கான கேட் நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வருவதை அறிகிறார். ஆகவே அவருடன் சச்சினும் சேருகிறார். ஆனால் அது ஒத்துவரவில்லை. ஆகவே ஏதாவது வேலைக்குச் சேர முயற்சிக்கிறார்.
இந்த நிலையில் பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆசிரியரின் திருமணத்தில் கலந்துகொள்ள தெலங்கானாவிலுள்ள ஒரு குக்கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு, ரீனு என்கிற இளம்பெண்ணை காண்கிறார். கண்டவுடன் காதல்.
அந்தப் பெண்ணை கவர, ஏதேதோ செய்கிறார். அப்போது ரீனுவின் டீம் லீடர் குறுக்கிடுகிறார்
திருமணம் முடிந்ததும், காரில் ஹைதராபாத் திரும்பும் சச்சின் உடன் ரீனுவும் அவரது தோழியும் வருகின்றனர்.
ரீனு மீதான சச்சினின் காதலை, அவரது தோழியிடம் இவரது நண்பர் சொல்கிறார்.தோழியோ, ‘ரீனு தனக்கு வரும் எதிர்காலக் கணவரிடம் எதிர்பார்க்கும் எந்தவொரு விஷயமும் சச்சினிடம் இல்லை’ என்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
பெரிதாகத் திருப்பங்கள் இல்லாத, ரொம்பவே சாதாரணமான காதல் கதை என்றபோதும், சில நொடிகள் இடைவெளியில் தொடர்ந்து சிரிக்க வைத்து நம்மை மகிழ்விக்கிறார் இயக்குனர் கிரிஷ் ஏ.டி. அதுவே, இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாகி விடுகிறது.
நாயகன் சச்சினாக வரும் நஸ்லென், நாயகி ரீனுவாக வரும் மமிதா பைஜு ஆகியோர் நிஜ காதலர்களை கண்முன் நிறுத்துகிறார்கள். இருவரிடையே ‘கெமிஸ்ட்ரி’ செமையாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. நகைச்சுவை காட்சிகளிலும் இருவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
நாயகன் தோழனாக வரும்அமல் டேவிஸ், வில்லனாக வரும் ஷ்யாம் மோகன், நாயகியின் தோழிகளாக வரும் அகிலா பார்கவன், மீனாக்ஷி மற்றும் ஷமீர் கான் என அனைவருமே இயல்பாக நடித்து கவர்கின்றனர்.
அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு, விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை, ஆகாஷ் ஜோசப் வர்கீஸின் படத்தொகுப்பு ஆகியவை படத்துக்கு பலம்.
கிரண் ஜோசே உடன் இணைந்து இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் கிரிஷ் ஏ.டி. சிறப்பு.
இயல்பான காதல், இயல்பான நகைச்சுவை என அனைவரையும் கவர்கிறது பிரேமலு.
தமிழ் டப்பிங்கும் இயல்பாக உள்ளது.
அனைரும் ரசித்துப் பார்க்கலாம்.