மைதான் திரைப்பட விமர்சனம்

மைதான் திரைப்பட விமர்சனம்

1951 மற்றும் 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கால்பந்து அணி தங்கப் பதக்கங்களை வென்றது. அப்போது அந்த அணியின் கால்பந்து பயிற்சியாளரும் மேலாளருமாக இருந்தவர்,  சையத் அப்துல் ரஹீம்.

நுரையீரல் புற்றுநோயுடன் கடுமையான போராடியபடியே, இந்திய கால்பந்து அணியை சிறப்பாக கட்டமைத்தார், ரஹீம்.

ரஹீம் சாப் என்று கால்பந்து ஆர்வலர்களால்  அன்போடு அழைக்கப்பட்ட அவரை, ஒரு கட்டத்தில் அவமானங்களை சந்திக்கும் சூழலுக்கு ஆளானார். திட்டமிட்டு  ஒதுக்கப்பட்டார்.

ஒரு நல்ல கால்பந்து அணியை உருவாக்குவதற்காக அவரது போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீரானது. மறக்கப்பட்ட  அந்த மனிதரிடன் வாழ்க்கையை நமக்கு அளித்து அவரை கவுரவித்து இருக்கிறது இந்தி திரைப்பட உலகம்.


கால்பந்து ஆட்டத்துக்கு வெளியே ஆடப்படும் அரசியல் ஆட்டத்தை அப்பட்டமாக படம் எடுத்துக்காண்பிக்கிறது. அணியில் யார், இருக்க வேண்டும், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு யார் செல்ல வேண்டும் போன்றவற்றை தீர்மானிப்பதில் நடந்த அரசியலை வெளிப்படுத்துகிறது படம்.

அஜய் தேவ்கன்தான் நாயகன். அணியின் கோச் மற்றும் மேனேஜர்.

ஒவ்வொரு வீரரையும் கண்பிடிக்க அவர் எடுக்கும் முயற்சி, வெளிநாட்டில் அவமானகரமாக ஒருவர் பேச பதிலடி கொடுப்பது… என அசத்தலாக நடித்து உள்ளார்.

அவரது மனைவியாக ப்ரியாமணி. அரைகுறை ஆங்கிலம் பேசும் குடும்பத்தலைவி. அதே நேரம் ஆங்கிலம் கற்க அவர் எடுக்கும் முயற்சி… ரசிக்க வைக்கிறார்.

இதர நடிகர்களான கஜராஜ் ராவ், சுனி கோஸ்வாமி, பி.கே. பானர்ஜி, பீட்டர் தங்கராஜ்  என அனைவருமே இயல்பாக நடித்து உள்ளனர்.

ஒளிப்பதிவு நம்மை கடந்த காலத்துக்கே அழைத்துச் செல்கிறது. அதோடு பின்னணி இசையும், ஒரு கதாபாத்திரமாகவே களமாடி இருக்கிறது.

மறக்கப்பட்ட ஒரு வீரரை நினைவுபடுத்திய விதத்தில் ஈர்த்திருக்கிறார் இயக்குநர் அமித் சர்மா.