காழ்: திரை விமர்சனம்

காழ்: திரை விமர்சனம்

வெளிநாட்டில் செட்டில் ஆனவர்கள் எல்லோருமே, சொர்க்கத்தில் வாழ்கிறார்கள் என்கிற கற்பிதம் இங்கே உள்ளது. ஆனால் உண்மையில் அவர்களுடைய வாழ்க்கையும் ஒரு போராட்டமாகவே இருக்கிறது என்பதை இப்படம் அழகியலோடு – சிறப்பான திரைக்கதையில் – கூறுகிறது.

இயக்கியிருக்கிறார் மோகன்ராஜ் விஜே.

ஆஸ்திரேலியாவில், தன் மனைவி மிமி லியோனார்டுடன் வசிக்கிறார்  யுகேந்திரன் வாசுதேவன். சொந்தமாக வீடு கட்டிவிட வேண்டும் என்கிற பெங்கனவுடன் கடுமையாக உழைத்து பணத்தை சேமிக்கிறார்கள்.

ஆனாலும் பணம் போதாத நிலையில்,  கடன் பெற முயற்சிக்கிறார்கள். அது மிகக் கடினமாக இருக்கிறது.

இந்த நிலையில் கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி ஒருவன் ஏமாற்றிவிடுகிறான்.

அவர்களது வீட்டுக்கனவு நிறைவேறியதா என்பதுதான் கதை.

இன்னொரு கிளைக்கதையாக, நித்யா பாலசுப்பிரமணியன் – சித்தார்த் அன்பரசு காதலும் வருகிறது.

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படம் என்றால், க்ரைம் சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு பாடாய்படுத்துவார்கள்.

ஆனால் இந்தப் படத்தை, அங்கே வாழும் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் விதமாக – சிரமங்களை நமக்குப் புரியவைக்கும் விதமாக எடுத்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார், இயக்குநர்.

இன்னொரு விசயமும் கவனத்தை ஈர்க்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சித்தார்த் அன்பரசவுக்கு அவருடன் பணிபுரியும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த அஸ்வின் விஸ்வநாதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் பொட்டில் அடித்த மாதிரி காண்பித்து இருக்கிறார்கள்.

“உனக்கெல்லாம் இங்கே (ஆஸ்திரேலியா) வரவேண்டும் என்கிற எண்ணமா?”

“இங்கே வந்தாலும், நீங்க நீங்கதான். நாங்க நாங்கதான்” – என்கிற வசனங்கள், நாடு கடந்து வாழ்ந்தாலும் தமிழர் பெரும்பாலோர் சாதி பிடிமானத்தை விட வில்லை என்பதை உணர்த்துகிறது.

யுகேந்திரன் வாசுதேவன், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வீடு கட்ட எடுக்கும் முயற்சி தோல்வி அடைய, அவர் கலங்கி நிற்கும் காட்சி ஒரு உதாரணம். அதே போல அவரது மனைவியாக வரும் மிமியும் சிறப்பாக நடித்து உள்ளார். மனம் சோர்ந்து கிடக்கும் கணவனுக்கு அவர் தன்னம்பிக்கை ஊட்டும் காட்சி அற்புதம்.

சித்தார்த் அன்பரசு – வித்யா பாலசுப்பிரமணியம் ஜோடியும் சிறப்பாக நடித்து உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு தமிழனே யுகேந்திரனை ஏமாற்ற.. ஆஸ்திரேலியர்கள் இருவர் சேர்ந்து உதவும் காட்சி சிறப்பு. ஏமாற்றுவதும், உதவி செய்வதும் இனம் சார்ந்தது அல்ல.. மனம் சார்ந்தது என்பதை உணர்த்தும் காட்சி.

ஹெல்வின் கே எஸ் மற்றும் சஞ்சய் அரக்கலின் இசையும்,  வசந்த் கங்காதரனின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

மோகன்ராஜ் விஜே தேர்ந்தடுத்த கதையும், சொன்ன விதமும் சிறப்பு. பாராட்டுகள்.

Related Posts