விமர்சனம்: காடுவெட்டி

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் சோலை ஆறுமுகம் இணை தயாரிப்பாளராக இருந்து இயக்கி, உள்ள திரைப்படம், காடுவெட்டி.
கல்வியும், பொருளாதார வளமும் உள்ள குடும்பம் காதலை எப்படி அணுகுகிறது.. பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த குடும்பம் எப்படி காதலை எதிர்கொள்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.
மெயின் கதை, கிராமத்து காதல் – சாதி விவகாரம்தான்!நடுநாடு பகுதியில், காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாயகன். தன் சாதிக்காரர்களுக்கு பிரச்சினை என்றால் முன்னின்று தீர்த்து வைப்பார். இது தொடர்பான ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்படுகிறார்.
அந்த நேரத்தில் இருவேறு சாதியைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு, பிரச்சினை ஏற்படுகிறது. பெண்ணை கொலை செய்துவிடும்படி ஊர் மக்கள் பெற்றோரிடமே சொல்கிறார்கள். பெண்ணின் தந்தை, காதலனுடன் வழி அனுப்பி வைக்கிறார்.
காதலனின் சாதியைச் சேர்ந்த தலைவர், காதலனுக்கு பணம் கொடுத்து, “வெளியூரில் மூன்று மாதம் குடும்பம் நடத்து. பிறகு நீ மட்டும் ஊருக்கு வந்துவிடு” என்கிறார்.
அவரது நோக்கத்தை அறிந்த காதலன், கடுமையாக எதிர்க்கிறான். காதலியோடு வெளியூர் சென்று விடுகிறான்.
சாதித் தலைவர் என்ன செய்தார்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
நாயகனாக ஆர்.கே.சுரேஷ். தன் சாதி மீதும், சாதித் தலைவர் மீதும் அவர் காட்டும் அதீத விசுவாசம், எதிரிகளை பந்தாடுவது என அதிரடியாக நடித்து உள்ளார். மனைவி மீதான காதலை வெளிப்படுத்தும் போது நெகிழவும் வைக்கிறார். சிறப்பு.
நாயகியின் தந்தையாக வரும் ( திரைப்பட இயக்குநர்) சுப்ரமணிய சிவா, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவர் தனது மகளுக்கு கறி சமைத்து அதில் பாலிடாயில் (விசம்) கலந்துகொடுக்கும் காட்சியின் போது அதிர வைக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் தோன்றுபவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
அறிமுக இசையமைப்பாளர் சாதிக்கின் பின்னணி இசையை படத்துடன் ஓர் கதாபாத்திரமாக கூடவே ஓடி வருகிறது. பாராட்டுகள்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஓகே ரகம்.
கிராமத்து அழகை அற்புதமாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் புகழேந்தி.
சாதி கடந்த காதல், அதனால் குடும்பத்தில் – உறவினர்கள் மத்தியில் – ஊர்மக்களிடையே ஏற்படும் எதிர்விளைவுகளை எதார்த்தமாக பதிவு செய்து உள்ளார் இயக்குநர்.
இளைஞர்கள் சில – பலரின் முட்டாள்த்தனமான காதல் வெறி – அப்படித்தான் சொல்ல வேண்டி இருக்கிறது- அதனால் ஈர்க்கப்படும் இளம் பெண்கள் என சொல்லி இருக்கிறார்கள்.
இதை நாடகக் காதல் என்கிற வரையறைக்குள் அடைக்காமல், “இது திட்டமிட்ட சதியா.. உண்மையான அன்பா.. அப்பாவித்தனமா.. புரியலயேப்பா” என நாயகியின் தந்தை புலம் காட்சியின் மூலம் சமூகத்தில் ஒரு கேள்வியை வைத்து உள்ளனர்.