“ஆண்கள் அழுவது அழகோ அழகு!”:   ‘டபுள் டக்கர்’ பத்திரிகையாளர் சந்திப்பில் மிஷ்கின்

“ஆண்கள் அழுவது அழகோ அழகு!”:   ‘டபுள் டக்கர்’ பத்திரிகையாளர் சந்திப்பில் மிஷ்கின்

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் நடிகர்களும் தோன்றும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’.

தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்து உள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.

நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் பேசும் போது…

“காலதாமதமாக வந்ததற்கு முதலில் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் செல்போனை அணைத்து வைத்துவிட்டு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்தேன். எதேச்சையாக போனை ஆன் செய்த போது தீரஜ் இடம் இருந்து போன் வந்தது. தொடர்ச்சியாக ஷூட்டிங்கும் இருந்தது. இன்று 2 மணியிலிருந்து 10 மணி வரை கால்ஷீட்.  என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டேன். ஏனென்றால் தீரஜ்ஜை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். சற்றும் தலைக்கணம் இல்லாதவன், மிகுந்த அன்பு கொண்டவன், எளிமையாகப் பழகக்கூடியவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.

ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொருத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர்  இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார். அது போல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் இரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான்.

என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம் பெறும் போது, அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான். மிக எளிமையாக எனக்கு அது குறித்து விளக்கம் கொடுப்பான். இயல்பாகவே கலகலப்பான பையன் அவன். படங்களும் ஜனரஞ்சகமாக, கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். அவனுடன் இருந்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

 

சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய விசிறி, உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார்.  நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன்.

அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.

இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. வெட்கமில்லாமல் ஆண்கள் அழுவது  என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன்.. ஒரு 50 எம் எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம் எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம், ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்து கொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை.

தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன். சினிமாவில் மட்டும் தான் less is more. பத்திரிகைக்காரர்கள் எப்போதும் என்னை தூக்கிவிட்டிருக்கிறீர்கள். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை நன்றாக இல்லை என்று சிலர் சொன்ன போது, அதை தூக்கிப் பிடித்தவர்கள் நீங்கள் தான். நீங்கள் நடிகர் நடிகைகள் பற்றி எழுதும் போதும் கவனமாக எழுதுங்கள், இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இப்படத்திற்கு ஆதரவு கொடுங்கள். நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுவீர்கள் என்று தெரியும். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்றார்.