“அப்துல்கலாம் மீது எனக்கு அதிருப்தி!”: வங்காள விரிகுடா பட நாயகன்  குகன் சக்கரவர்த்தியார்

“அப்துல்கலாம் மீது எனக்கு அதிருப்தி!”: வங்காள விரிகுடா பட நாயகன்  குகன் சக்கரவர்த்தியார்

தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’.

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி படத்தைத் தயாரிக்கிறது.

நம் மக்களின் வாழ்வியலை படம்பிடிக்கும் அருமையான காவியமாக, அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திங்கட்கிழமை அன்று சென்னை கலைஞர் அரங்கத்தில், படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்கள், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’ இசைத்தட்டினை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட குகன் சக்வர்த்தியாரின் தாய் மற்றும் தந்தை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது குகன் சக்வர்த்தியாரின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்வில் நாயகன்  குகன் சக்கரவர்த்தியார் பேசியதாவது…

“எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை உங்களிடம் கொண்டு வர நினைத்தேன், அது தான் இப்படம். பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், அப்துல்கலாம் என  அனைவரையும் ஒரே போஸ்டரில் கொண்டு வரும் ஐடியா தான் இந்தப்படம். அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.  என்னை மாதிரி வாழாதீர்கள், இவர்கள் மாதிரி வாழுங்கள் என சொல்வது தான் இந்தப்படம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, கலைஞர், அண்ணா எல்லோரும் வாழும் இடம் வங்காள விரிகுடா.   அது போல் இந்தப்படமும் வாழும்.

இந்தப்படத்தில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். அப்துல் கலாம் மீது எனக்கு ஒரு அதிருப்தி இருக்கிறது என படத்தில் காட்சி வைத்துள்ளேன், அதை எல்லோரும் கண்டித்தார்கள். ஆனால் அது எதற்கு என படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கலைஞர் பேசிய இந்த மேடையில் நானும் இன்று பேசுகிறேன் என்பதே எனக்கு பெருமை தான். காசு உள்ளவன் எல்லாம் படமெடுத்து விட முடியாது, அறிவு வேண்டும். நல்ல படம், அருமையான கதை, நல்ல பாடல்கள் என படம் நன்றாக வந்துள்ளது. படம் நன்றாக இருந்தால் நீங்கள் பாராட்டுவீர்கள். எந்த விஷயமும் எளிதாக நடந்து விடாது. நான் உழைக்கிறேன், பிழைக்கிறேன், வாழ்த்துங்கள்” என்று குகன் சக்ரவர்த்தியார் பேசினார்.