இடி மின்னல் காதல்: விமர்சனம்

இடி மின்னல் காதல்: விமர்சனம்

வெளிநாடு செல்ல இருக்கும் நாயகன் சிபி, அதற்கு முன்பாக தனது காதலி பவ்யா ட்ரிகாவுடன் காரில் ஜாலியாக வலம் வர, திடீரென்று குறுக்கே வருபவர் மீது மோதி விடுகிறார். இந்த விபத்தில் அந்த நபர் உயிரிழந்துவிடுகிறார். தெரியாமல் நடந்த விபத்து என்றாலும், தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து சிபி வருத்தப்பட்டாலும், அவர் அமெரிக்கா செல்வதற்கான அனைத்து உதவிகளையும் காதலி பவ்யா ட்ரிகா செய்து வருகிறார்.

இதற்கிடையே, உயிரிழந்த நபரின் மகன் ஆதித்யா தனது அப்பா இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். அவருக்கு பாலியல் தொழிலாளி யாஷ்மின் பொன்னப்பா ஆதரவளிக்க, இறந்து போனவர் வாங்கிய கடனுக்காக அவருடைய மகன் ஆதித்யாவை தாதா வின்செண்ட் நகுல் இழுத்துச் செல்ல முயற்சிக்கிறார்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் இரு தரப்பினரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க, தன்னால் உயிரிழந்தவரின் மகன் தான் ஆதித்யா என்பது தெரியாமலேயே அவரை காப்பாற்றும் முயற்சியில் நாயகன் சிபி ஈடுபடுகிறார். ஆனால், தனது தந்தை இறந்ததற்கு காரணம் சிபி தான் என்பதை தெரிந்துக்கொள்ளும் சிறுவன் ஆதித்யா, சிபி மீது கொலை வெறிக்கொள்ள, அதனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை சொல்வது தான் ’இடி மின்னல் காதல்’.
நாயகனாக நடித்திருக்கும் சிபி, ஆக்‌ஷன் நாயகனுக்கான அனைத்து தகுதிகளும் கொண்டவராக இருக்கிறார். ஆனால், கிளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சியில் அவரை அடிவாங்க வைத்திருப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா, அளவான நடிப்பு மற்றும் அழகோடு ரசிகர்களை கவர்கிறார். கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வேடத்தில் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வின்செண்ட் நகுல், ஆரம்பத்தில் ஓவர் பில்டப்புடன் அறிமுகமானாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கொடுத்த பில்டப்புக்கு குந்தகம் விளைவிப்பது போல் நடித்திருக்கிறார்.

சிறுவன் ஆதித்யா அப்பா இறந்த துக்கத்தை தாங்காமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தடுமாறும் காட்சிகள் அனைத்தும் தரம் மிக்கவையாக உள்ளது. அதிலும், தனது அப்பாவின் மரணத்திற்கு சிபி தான் காரணம் என்றதுமே அவர் மீது கொலை வெறிக்கொண்டு அவர் வெளிப்படுத்தும் எக்ஸ்பிரசன்கள் அனைத்தும் எக்சலண்ட்.

பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின் பொன்னப்பா கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

கிறிஸ்தவ பாதிரியராக நடித்திருக்கும் ராதாரவி மற்றும் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் இருவரும் அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஜெகன், காமெடி நடிகராக அல்லாமல் குணச்சித்திர நடிகராக மிளிர முயற்சித்திருக்கிறார். சிறுவன் ஆதித்யாவின் தந்தையாக நடித்திருக்கும் மனோஜ் முல்லத், ஊதாரித்தனத்தால் சொத்து, குடும்பம் என அனைத்தையும் இழந்து தவிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

ஜெயசந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை வழக்கத்தை விட குறைவான சத்தத்தில் அளவாக பயணித்திருக்கிறது.

அறியாமல் செய்த தவறுக்கு நாயகன் பரிகாரம் செய்வதாக நினைத்து, இறந்தவரின் மகன் தான் அந்த சிறுவன் என்று தெரியாமலேயே அவனை காப்பாற்ற நினைப்பது மற்றும் இரண்டு கதைகளை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்திருப்பது படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தை வைத்துக்கொண்டு, பலவிதமான கதாபாத்திரங்களின் வடிவமைப்போடு இயக்குநர் பாலாஜி மாதவன் அமைத்திருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், சில இடங்களில் சற்று குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. அதேபோல், பலம் வாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தை, பலவீனமான முறையில் வடிவமைத்த விதம், அதில் நடித்த நடிகர் ஆகியவை படத்திற்கு குறையாக அமைந்தாலும் சிறுவன் ஆதித்யாவின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு அந்த குறையை மறைத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

Related Posts