ஹரா: விமர்சனம்   

ஹரா: விமர்சனம்   

தமிழ்த் திரையுலகின் வெள்ளி விழா நாயகன் என்று கொண்டாடப்பட்ட, மோகன், 14 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் நாயகனாகவே வந்திருக்கும் படம், ஹரா. அதுவும் தனது மென்மையான பாணியை தாண்டி, அதிரடி நாயகனாக களம் இறங்கி இருக்கிறார்.

கோவை நகரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ராம் (மோகன்). திடீரென ஒருநாள் மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்.

அதிர்ந்து போகிறார் ராம். அவர் தனது பெயரை இப்ராஹீம் என்று மாற்றிக் கொண்டு தனது மகளின் தற்கொலைக்கு காரணம் யார் என்று துப்பறிய ஆரம்பிக்கிறார்.

இன்னொருபுறம் நாயகன் ராமினால், ஒருகாலத்தில் பாதிக்கப்பட்டு வேலை, குடும்பத்தை இழந்த முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் தலைமையிலான ஆட்கள் இவரை தீவிரமாக தேடுகின்றனர்.

இரு தரப்பும் ஒரு கட்டத்தில் சந்திக்கிறது.

அதன் பிறகு ராம் நிலை என்ன ஆனது, தனது மகளின் தற்கொலைக்குக் காரணமானவர்களை கண்டுபிடித்தாரா என்பதே கதை.

நடிப்பில் அசத்தி இருக்கிறார் மோகன். மகள் மீது காட்டும் பாசம், காவலர்களிடம் தனது மகளுக்கு பரிந்து பேசுவது, மகளின் தற்கொலைக்குக் காரணமானவர்களை தேடி ஆவேசமாய் பயணப்படுவது, வில்லன்களை பந்தாடுவது என்று அசத்தி இருக்கிறார். மைக் மோகன், மைக் டைசன் மோகன் ஆகியிருக்கிறார்.

இந்த படத்தின் கதாபாத்திரத்தைப் பொறுத்தவரை, அவரது கரகர குரல் ப்ளஸ்!

அதே போல் அனுமோல். சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். மற்றவர்களும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் ஆகியவை ஓகே ரகம்.

ட்ரெய்லரிலேயே இது ஒரு பழிவாங்கும் கதை என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தார் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி.

அதே நேரம் திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டு இருந்தால், ரசிக்க வைத்து இருக்கலாம். நகைச்சுவை என்று கோர்ட்டில் நடத்தும் காட்சிகள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. வசனங்கள், ஸ்பாட்டில் யோசித்து எழுதிய மாதிரி இருக்கின்றன. கூடுதல் கவனம் எடுத்து இருக்கலாம்.அதே நேரம், அனைவரும் சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருப்பதாலும், மருந்து மாபியாக்களின் கொடுமையைச் சொல்லி இருப்பதாலும் பாராட்டலாம்.

 

 

Related Posts