திரைப்பட விமர்சனம்: ரெபெல்

திரைப்பட விமர்சனம்: ரெபெல்

லயிக்க வைக்கும் இசையமைப்பாளராக வலம் வந்த ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது ரசிக்கவைக்கும் நாயகனாகவும் உலா வருகிறார்.  அவரது நடிப்பில் – இசையில் உருவாகி உள்ள திரைப்படம் ரெபல்.

நிகேஷ் இயக்க, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் தயாரித்து உள்ளார்.

கேரள பகுதியில் வசிக்கும் பூர்வீக தமிழர்களுக்கு அங்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண் முன் நிறுத்தும் திரைப்படம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கி உள்ளனர்.

மூணாறு பகுதியில் டீ எஸ்டேட்டில் கூலித் தொழிலாளர்களாக வாழும் தமிழர் குடும்பத்தில் இருந்து சிலர், பாலக்காடு பகுதியில் இருக்கும் கல்லூரியில் படிக்க வருகின்றனர். அவர்களில் நாயகனும் ஒருவர்.
அங்கு தமிழ் மாணவர்களை, (பெரும்பான்மையாக உள்ள) மலையாள மாணவர்கள் இழிவாக நடத்துகின்றனர்; ராகிங் என்கிற பெயரில் கொடூரமாக தாக்குகின்றனர்.அந்த மாணவர்கள் பெரும்பான்மையாக இருப்பது, கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பிலும், காங்கிரஸ் மாணவர் அமைப்பிலும்!

உலகமே ஒன்று என்று சொல்லும் கம்யூனிசத்தின் பின்னாலும், தேசியம் பேரும் காங்கிரஸ் பின்னாலும் அணிவகுக்கும் மாணவர்கள் எப்படி, மொழி – இன வெறியடன் செயல்பாடுகிறார்கள் என்பதை பதைபதைக்க வைகக்கும் காட்சிகளுடன் அளித்துள்ளனர்.

அந்த மாணவர்களுக்கு, அவர்கள் சார்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆதரவாக இருக்கின்றனர்.
மாணவர் தேர்தல் வருகிறது. நாயகன், “தமிழர்கள் என்றுதானே நம்மை தாக்குகிறார்கள்.. நமக்கென ஒரு அமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டி இடுவோம். நடுநிலை எண்ணம் கொண்ட மாணவர்கள் நம்மை ஆதரிப்பார்கள். வெற்றியோ தோல்வியோ… போராடுவோம்” என்கிறார்.

அதன்படி தமிழ் மாணவர்கள் சேர்ந்து அமைப்பை உருவாக்கி களத்தில் இறங்குகிறார்கள்.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெரிய பிரமுகர்கள், “இந்த மாணவர்கள் மூணாறு டீ எஸ்டே்டில் கூலி வேலை பார்க்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானே. இவர்களது தாய், தந்தையரின் வேலையை பறியுங்கள்” என்று உத்தரவு போட.. அதே போல நடக்கிறது.

மாணவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படுகின்றன.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை!

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம் என்பதை காட்சிக்குக் காட்சி உறுதிப்படுத்தி உள்ளனர்.பாதிக்கப்படும் தமிழ் மாணவர்களுக்கான தலைவனாக, அற்புதமாக நடித்து உள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார். தனது பாத்திரத்தை நன்கு உணர்ந்து ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

“ஓணம் பண்டிகைக்கு நீ ஏண்டா வேட்டி கட்டுறே” என மலையாள வெறி மாணவர்கள் ஆத்திரத்துடன் கேட்க.. கண்களில் பயத்துடன் தப்பித்து ஓடும் காட்சி…
ஒரு கட்டத்தில், “தமிழனா பிறந்தது தப்பா” என ஆக்ரோசத்துடன் கேட்பது…
மாணவர்களுக்கான தலைவனாக தலைமையேற்று நடத்துவது..
தன்னை காப்பாற்றிய மலையாள மாணவியை தேவதையாக நினைப்பது.. அதே மாணவி, இனவெறி ஆதரளவாளர்களுடன் நிற்க.. “தேவதை மாதிரி தெரிஞ்ச நீங்க.. இப்போ பேய் மாதிரி தோணறீங்க..” என்று மனம் நொந்து சொல்வது…

ஜி.வி.பிரகாஷ்குமார் அற்புத நடிப்பு!

பிரேமலு நாயகி மமிதா பைஜுவுக்கும் முக்கிய கதாபாத்திரம். அதே போல 96 படத்தில் கவனத்தை ஈர்த்த ஆதித்யா பாஸ்கர்…  தவிர வழக்கம்போலவே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் சுப்ரமணிய சிவா, கருணாஸ்.. மொத்தத்தில் அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.

வழக்கம்போலவே பின்னணி இசை ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுதும் பின் தொடர்கிறது. குறிப்பாக.. மலையாள மாணவர்களின் ஆவேசம், அவர்களது சதி திட்டம்.. போன்ற காட்சிகளில் உக்கிரமான பின்னணி இசை அபாரம். அதே போல நாயகியை நாயகன் நன்றியும் காதலுமாய் பார்க்கிற காட்சியில் பின்னணி இசை நெகிழ வைக்கிறது.

ஜி.வி.பிரகாஷ், சித்து குமார், ஆஃப்ரோ இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

‘அழகான சதிகாரி’ ,’சக்கர முத்தே’ உள்ளிட்ட அனைத்து பாடல்களும் லயிக்க வைக்கின்றன. அதே போல மலையாளத்தில் வரும் பாடல் ஒன்றும், மொழி புரியாவிட்டாலும் காதலைச் சொல்வது புரிகிறது. ரசிக்கவைக்கிறது.

வசனங்கள் பல, கூர்தீட்டிய ஈட்டிகளாய் பாய்கின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியராக வரும் கருணாஸ், “இங்க நீலக் கொடி, சிவப்புக் கொடின்னு நிறங்கள்ல பிரச்னை இல்லை. அது யார் கையில இருக்குதுங்கறதுதான் பிரச்னை” என்று சொல்வது ஒரு உதாரணம்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் சிறப்பாக தனது  பங்களிப்பை அளித்துள்ளார்.  அந்த மாணவர் விடுதியின் பின்புறம்.. இரவுக் காட்சி… ஓர் துளி உதாரணம்.

ஒதுங்கிக் கிடக்கும் மாணவர் விடுதி, அதிலுள்ள சித்திரம், தேர்தல் பிரசார ஓவியங்கள் எனக் கலை இயக்குநர் பாப்பாநாடு சி.உதயகுமார் அசத்தி இருக்கிறார்.

“தமிழனா பிறந்தத தப்பா” என்கிற நெஞ்சில் அறையும் ஒற்றை கேள்வியை, அற்புதமான திரைப்படமாக உருவாக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் நிகேஷ்.
அவசியம் பார்க்க வேண்டிய படம்.