சினிமா விமர்சனம்: ‘கிளாஸ்மேட்ஸ்’

சினிமா விமர்சனம்: ‘கிளாஸ்மேட்ஸ்’

‘குடி, குடியைக் கெடுக்கும்’ என்கிற குறள் காலத்து கான்செப்டை ‘ஃபுல்’ சினிமாவாக எடுத்து வைத்து இருக்கிறார்கள்.

நாயகனும் அவன் மாமனும் முழு நேர, மதுப் ப்ரியர்கள். நாயகன் போதையில் கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்துகிறான்; வழக்கை சந்திக்கிறான். புது மனைவியை சந்தேகப்படுகிறான், அவள் பிரிந்துவிடுகிறாள்.  ஆனாலும் குவார்ட்டர் குவார்ட்டராக குடி தொடர்கிறது; இறுதியில் அவர்கள் மனம் திருந்திய மாந்தர்கள் ஆகும்படியாக ஒரு சம்பவம் நடக்கிறது. இதுதான் கதை.

ஹீரோ அங்கையற்கண்ணன், மாமாவாக ( படத்தின் இயக்குநர்) குட்டிப்புலி.  ஓவர் குடிகாரர்கள் செய்கிற கூத்தையெல்லாம் செய்கிறேன் என்று நம்மை மட்டையாக்குகிறார்கள். முடியல.

பாத்ரூம் என நினைத்து பீரோவில் சிறுநீர் கழிப்பது, காரில் சிறுநீர் கழிப்பது என்று  எரிச்சலூட்டும் காட்சிகள்.

அதே நேரம், “முப்பொழுதும் போதையில் இருக்கோமே.. மனைவியின் ‘அந்த’  விருப்பத்தை நிறைவேத்த முடியலையே’ என்கிற காட்சி கவனிக்க வைக்கிறார் குட்டிப்புலி.

நாயகன் மற்றும் குட்டிப்புலியின் மனைவியாக வருபவர்கள், ஓவர் லோடு போடும் தங்கள் கணவன்மார்களை கண்டிக்காமல், அவர்கள் மீது ‘லார்ஜ் லார்ஜாக’ பாசத்தைப் பொழிவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்த குடிகாரர்களுக்கு, எங்காவது கறிச்சோறு கிடைத்துவிடுவதும் ஆச்சரியம்.
‘அயலி’ அபி நட்சத்திரா கிளைமாக்ஸில் அதிரவைக்கிறார். குடிகார கதாபாத்திரத்துக்கு பெயர் பெற்ற மயில்சாமியும் படத்தில் இருக்கிறார்.
வசனங்களில் சில ஈர்க்கின்றன. ‘நல்லவன் குடிச்சா குழந்தை, கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என்பது ஒரு உதாரணம்.

வெளிநாட்டில் சம்பாதித்து, கிராமத்தில் கெத் ஆக வலம் வந்து  குடிக்கு அடிமையாகும் சாம்ஸ், மதுப் பிரியர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களுடன் பழகி, அவர்களைவிட தானும் குடிகாரனாக மாறிப்போகும் டி எம் கார்த்திக் ஆகியோர் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.

அருள்தாஸ் கொஞ்ச நேரமே வந்தாலும் வழக்கம்போல இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார்.

‘வாடா மச்சி கட தொறந்தாச்சு’, ‘அடிக்கிற பொண்டாட்டி தெருவுல நிப்பாட்டி’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன..  நேர்த்தியான ஒளிப்பதிவுவும் கவனம் பெறுகிறது.

படம் முழுக்க குடியை கொண்டாடிவிட்டு, கிளைமாக்சில் பாடம் நடத்துவதை ஏற்க முடியவில்லை. தவிர,  ரசிக்க வைக்கும் காட்சிகள் இல்லை.

மொத்தத்தில் – தலைவலி!

Related Posts