திருமணங்களில் தம்பதியர் அருந்ததியைப் பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணங்களில் தம்பதியர் அருந்ததியைப் பார்ப்பது ஏன் தெரியுமா?

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. என்கிற வார்த்தையை அறியாதவர்களே இருக்க முடியாது. இந்து மத திருமணத்தின் போது, கடைபிடிக்கப்படும் சடங்குகளில் ஒன்றான இதை, பிற மதத்தவரும் அறிவர். அத்தனை பிரபலம்!

சரி, இந்த அருந்ததி பார்ப்பதின் காரணம் என்ன… தெரிந்துகொள்வோம்.

புராண காலத்தில் சந்திரபாகா என்கிற நதிக்கரை ஓரத்தில், மேதாதிதி என்ற முனிவர் வசித்து வந்தார். இவர் வசித்த பகுதி தாபஸாரண்யம் என்ற ஆசிரமமாகும்.
மேதாதிதி முனிவர் ஒரு வேள்வி நடத்தினார். இறுதியில் வேள்வித் தீயிலிருந்து ஒரு பெண் குழந்தை தோன்றியது. மேதாதிதி அக்குழந்தைக்கு அருந்ததி என பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்.

அருந்ததிக்கு ஐந்து வயதானபோது பிரம்ம தேவர் ஆலோசனைப்படி, சாவித்ரி தேவியிடம் கல்வி கற்க அனுப்பப்பட்டார்.

சாவித்ரி தேவியும் அருந்ததியை அழைத்துக்கொண்டு மேருமலைக்குச் சென்றார். அங்கே சரஸ்வதி, காயத்ரி முதலிய தேவிகளிடம் கல்வி கற்றாள் அருந்ததி.

சில வருடங்கள் சென்றன. அருந்ததி திருமணப் பருவத்தை அடைய, வசிஷ்ட முனிவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள்.

மும்மூர்த்திகளும், மணப்பந்தலில் தம்பதியினரை உட்காரவைத்து நீராட்டினார்கள். அந்நீரே கோமதி, சரயூ முதலிய ஆறுகளாக பெருகின.

வசிஷ்டர், தம் மனைவியான அருந்ததியுடன் தமக்கென அளிக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்தில் இருந்து இன்றும் அருள்கிறார் என்பது ஐதீகம்.
அவர் அருகில் மிகச் சிறு நட்சத்திரமாக அருந்ததி தேவி விளங்குகின்றாள்.

அவளது பெருமையை அறிய ஒரு புராண சம்பவம் உண்டு. ஒரு சமயம் அக்னி தேவனுடைய மனைவி ஸ்வாஹாதேவி, அருந்ததியைப்போல உருவம் எடுக்க விரும்பினாள். எவ்வளவு முயன்றும் அருந்ததியைப் போல உருவம் எடுக்க முடியவே இல்லை.

இறுதியாக அவர் அருந்ததியிடம், “தேவி நீங்கள் மட்டும்தான் பதிவிரதா தர்மத்தைச் முறைப்படி கடைபிடித்து வருகிறீர்கள். எந்தப்பெண் திருமண காலத்தில் கணவனின் கையைபிடிக்கும் சமயம் உங்களை நினைக்கிறாளோ, அவள் நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்வாள்” என்றாள்.

இதனால்தான் திருமணக்காலத்தில் அருந்ததியைப் பார்க்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.