மணிப்பூர் தமிழர்களை மீட்க வேண்டாம்! பாதுகாப்பாக வாழ வழி செய்யுங்கள்!

மணிப்பூர் தமிழர்களை மீட்க வேண்டாம்! பாதுகாப்பாக வாழ வழி செய்யுங்கள்!

வடகிழக்கு இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் இரு தரப்பிரனர் இடையே கலவரம்.

‘இங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்க, தமிழ்நாடு அரசு உடனடியாக மீட்புக்குழு அனுப்ப வேண்டும்’ என்ற குரல்கள் எழுகின்றன.

அங்கு சிக்கியிருப்பது, சுற்றுலாவுக்கோ அல்லது பணி நிமித்தமோ சென்ற சில நூறு தமிழர்கள் அல்லர். மணிப்பூர் மண்ணின் மைந்தர்கள் ஆகிவிட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்!

1960களில் மியான்மர் நாட்டில் வசித்த லட்சக்கணக்கான தமிழர்கள் விரட்டப்பட்டணர். அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அருகில் உள்ள (இந்திய) மணிப்பூர் மாநிலத்தில் தங்கினர்.

தற்போது மியான்மர் நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள – மோரே நகரில் மட்டும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு இன்றும் மியான்மரில் உறவினர்கள் உள்ளனர். அவர்களுடன் வணிக தொடர்புகளும் வைத்திருக்கின்றனர். கணிசமான தமிழர்களுக்கு வீடு, கடை, நிலம் உண்டு. கோயில், பள்ளிவாசல், பேராலயம் நிறுவி இருக்கிறார்கள். பள்ளி, சேவை நிலையங்கள் நடத்துகிறார்கள்.

‘அறுபது ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூரில் வாழ்ந்து மண்ணின் மைந்தர்கள் ஆகிவிட்டனர். இந்த நிலையில்தான் அங்குள்ள (வேறு) இரு தரப்பினரிடையே கலவரம் மூண்டுள்ளது.

இந்நிலையில், ‘மணிப்பூர் மண்ணின் மைந்தர்கள் ஆகிவிட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை, உடமையை  காக்க வேண்டும்’ என்றே மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

எல்லைப் பகுதி என்பதால், ராணுவ –காவல் பாதுகாப்பை எளிதில் அதிகரித்து தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கலாம்.

குறிப்பிட்ட இடத்தில் சுமார் 150 தமிழர்கள் தவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் இங்கே அழைத்து வரலாம். இல்லாவிட்டால், தமிழர்கள் அதிகம் உள்ள ( மணிப்பூரின்) மோரே பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.இதை விடுத்து, அந்த தமிழர்களை மீட்டு கொண்டுவர குழு அமைக்க வேண்டும் என்பது சரியல்ல.

ஆயிரக்கணக்கான மணிப்பூர் தமிழர்கள் சொந்த ஊர், வீடு, நிலம், வியாபாரத்தை விட்டு இங்கே அகதியாக வந்து அவர்கள் சீரழிய வேண்டுமா என்ன?

– டி.வி.சோமு