விமர்சனம்: தர்பார்  

மும்பை காவல் அதிகாரியான ரஜினி, போதை கடத்தல் கும்பலை ஒழிக்க முற்பட, அவர்கள் இவரது மகளை கொல்ல.. பழிக்குப் பழி வாங்குகிறார் ரஜினி..

– இப்படி பலமுறை பார்த்து சலித்த….  தியேட்டர் டிக்கெட் பின்பக்கத்திலேயே எழுதிவிடக்கூடிய கதை, திரைக்கதை.

கதை மற்றும் காட்சித் திருட்டு புகாரில் இருந்து தப்பிக்கவோ என்னவோ, பழைய ரஜினி படங்களில் இருந்தே காட்சி மற்றும் வசனங்களை  உருவியிருக்கிறார் ஏ.ஆர். முருகு.

இது எப்படி இருக்கு  கெட்ட பயசார்.. எந்திரன் படத்தில் வரும் மே.. என்ற சிரிப்பு இப்படி.

பாடல் காட்சிகள்கூட, முத்து, சந்திரமுகி என பழைய ரஜினி படங்களை நினைவுபடுத்துகின்றன.

கிராபிக்ஸ் உள்ளிட்ட சினிமா தொழில் நுட்பங்களால் ரஜினி சுறுசுறுவென அந்தரத்தில் பாய்ந்து சண்டை போடுகிறார் என்றாலும் பல காட்சிகளில் முகத்தில் களைப்பு அப்பட்டமாய் தெரிகிறது.

(யார் சார் அந்த மேக் அப் மேன்.. ரஜினிக்கு கொஞ்சம் கம்மியாய் லிப்ஸ்டிக் போட்டிருக்கக் கூடாதா?)

மொத்தமே ஐந்தாறு காட்சிகள் மற்றும் இரு பாடல் காட்சிகள்தான்.  கால்ஷீட் கணக்குப்படி பார்த்தால் ரஜினியைவிட நயன்தாராதான் அதிக சம்பளமாக இருக்கும். (அஞ்சு சி- யாமே!)

ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ், நிறைவான நடிப்பை அளித்திருக்கிறார். அப்பாவுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என துடிப்பது, தனது மரணம் நெருங்கிவிட்டதை அறிந்து கலங்குவது.. என  சிறப்பு.

ரஜினியுடனேயே வரும் யோகி பாபு ஓரளவு சிரிக்கவைக்கிறார். குறிப்பாக, ரஜினியை கலாய்க்கும் காட்சிகளில்!

“நீங்க சின்ன பையனா..” எனக் கேட்டு ஒரு லுக் விடுகிறாரே.. செம!

என்கவுண்டர்தான் தீர்வு என கூறுகிறது படம். அப்பட்டமாக அறியப்பட்ட குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதை பலரும் ஏற்கவே செய்கிறார்ர்கள். ஆனால், என்கவுண்டர் செய்யப்படுபவர் எல்லாம், குற்றவாளிகள் அல்லர்… இதற்கு நிஜ உதாரணங்களே நிறைய உண்டு.

ஒரு காட்சியில், “சமூகஆர்வலர்கள் என்பவர்கள் காசு வாங்கிக்கொண்டு எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்,” என்கிறார்கள். நிஜமான சமூக ஆர்வலர்களும் உண்டு என்பதை ரஜினி – முருகதாஸ் டீம் ஏற்கவில்லை போலும்.

தூத்துக்குடி என்கவுண்டரை ஆதரித்து, சமூக ஆர்வலர்களை ஆபத்தானவர்களாக சித்தரித்த ரஜினிக்கு உடன்பாடான காட்சிகள்தான் இவை. ஓருவேளை இதுதான் அவரது ஆன்மிக அரசியலோ, என்னவோ!

ஒரு காட்சியில், “தமிழ்நாட்டுல ஒரு குற்றவாளி சிறையிலிருந்து வெளியே வந்து வந்து போறாங்களாமே..” என ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை கலாய்க்கிறார்கள்… ரசிக்கவைக்கும் காட்சி.

களைப்படைந்த ரஜினி, அதே அதே காட்சிகளால் சோர்வடைய வைக்கும் காட்சிகள்…

ரஜினி அவர்களே..

இன்னும் எத்தனை வருடங்கள்தான் காமிக்ஸ் ஹீரோ போல, பறந்து பறந்து அடித்து ரசிகர்களை சிறுபிள்ளைகளாகவே வைத்திருக்கப்போகிறீர்கள்?

நிறைய சாதித்துவிட்டீர்கள்… இனியேனும் திரைத்துறையையும், ரசிகர்களையும் மேம்படுத்தக்கூடிய படங்களை செய்யுங்களேன்..

ஹிந்தியின் அமிதாப் , அமீர்கான் படங்களைப் பாருங்கள்!