சென்னை ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் ஆதியோகி! ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்!

சென்னை; கோவையில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்னை வந்த ஆதியோகி ரதம் ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் 2 நாட்கள் நிறுத்தப்பட்டது. இதன்மூலம், ஆயிரக்கணக்கான மக்கள் ஆதியோகியை நேரில் தரிசித்து அவரின் அருள் பெற்றனர்.

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டும் கோவையில் உள்ள 112 அடி ஆதியோகியில் இருந்து 4 ஆதியோகி ரதங்கள் கடந்த ஜனவரி 1-ம் தேதி புறப்பட்டன. இதில் ஒரு ரதம் பிப்ரவரி 1-ம் தேதி சென்னை வந்தது.

7 அடி உயர ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய இந்த ரதம் ஹிந்து ஆன்மீக கண்காட்சி நடைபெற்ற குருநானக் கல்லூரியில் 2 நாட்கள் நிறுத்தப்பட்டன. அங்கு ஆதியோகிக்கு ஆரத்தியும் சிவ பஜனையும் நடத்தப்பட்டது. இதையடுத்து, இன்று (பிப்ரவரி 3) காலை வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரன் கோயில், வேளச்சேரி பை பாஸ் சாலையில் 3 இடங்கள், வேளச்சேரி ரயில்நிலையம் அருகே உள்ள கிராண்ட் மால் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டது. 3 நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதியோகியை தரிசித்தனர்.

பின்னர், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயில், ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ், ரூபி பில்டர்ஸ், மாடம்பாக்கம் தேன்புரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட இடங்களில் பிற்பகலில் செல்ல உள்ளது.

கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாத மக்கள் தங்கள் ஊர்களிலேயே தரிசிப்பதற்கு இந்த ரத யாத்திரை ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. மேலும், இதன்மூலம் மஹாசிவராத்திரி விழாவுக்கும் பொதுமக்களுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டது.

சென்னையில் இருந்து இன்று இரவு புறப்படும் இந்த ரதம் குடியாத்தம், திருப்பத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், பென்னாகரம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்றுவிட்டு பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் மீண்டும் சென்னைக்கு வர இருக்கிறது.