அருள்மிகு நெமிலி பாலா அவதரித்த திருநாள் உற்சவம்!

வேலூர் மாவட்டம் தாங்கி என்னும் சிற்றூரில் இருக்கிறது அருள்மிகு நெமிலி பாலாவின் திருக்கோவில். ஸ்ரீ பாலாவின் அற்புதங்களை நாம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவளை தேடி பக்தர்கள் வருகிறார்கள் என்பதை விட அவள் யாரை விரும்புகிறாரோ அவர்களே தரிசிக்க வருகிறார்கள் என்பதே உண்மை. அவள் எப்பொழுது தோன்றினாள் என்பதைப் பார்ப்போம்.

 மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து தோன்றியவன் ” பண்டன்” எனும் அரக்கன். ஒரு பெண்ணை தவிர தனக்கு யாராலும் மரணம் வரக்கூடாது என வரம் பெற்றான் அரக்கன். அந்த ஆணவத்தில் தேவர்களையும் , மனிதர்களையும்  துன்புறுத்தினான். இதிலிருந்து அவர்கள் விடுபட ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியைச் சரணடைந்தனர்.

தேவி தன் சேனைகளுடன் பண்டாசுரனோடு போர் புரியத் தொடங்கினாள். அன்னை லலிதா தேவியோடு போரிட்டு வெல்ல முடியாத பண்டாசுரன், வலிமை மிக்க தனது முப்பது மைந்தர்களை போருக்கு அனுப்பி வைத்தான். பண்டாசுரனுக்கு ஈடான அவர்களை அழிக்க ஸ்ரீ லலிதா தேவியின் உடலிலிருந்து அவள் உருவில் ஆற்றலில் வலியவளை அண்டத்தைக் காக்கும் அம்பிகையின் செல்ல மகளான ஸ்ரீ பாலாவை தோற்றுவித்தள்.

லலிதாவின் மகளான பாலா தன் அன்னை லலிதாவிடம் கவசங்களையும், ஆயுதங்களையும் பெற்று கர்ணீரதம் எனும் ரதத்தில்  ஏறிக்கொண்டு, பண்டாசுரன் மகன்களுடன் போரிட்டு அனைவரையும் அழித்தாள். அவள் போரிடும் அழகைக்காண விண்ணில் கூடிய தேவர்கள் பூமாரி பொழிந்தனர். போரில் வெற்றியுடன் திரும்பிய குழந்தை பாலாவை ஆனந்தம் பெருக தன்னுடன் அணைத்துக் கொண்டாள் அம்பிகை. அன்னை லலிதாவோடு அப்படியே ஐக்கியமாகிவிட்டாள் என்கிறது புராணம்.

  இன்று  ஸ்ரீ பாலா அவதரித்த திருநாள். ஆண்டுதோரும் இதே  ஐப்பசி பூரம்  அன்று அம்பிகையின்  பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.  இந்த   ஆண்டும் குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் அலங்காரத்துடனும், ஆரத்தியுடன் நெமிலியில் அவரது பீடத்தில் விமர்சியாக  கொண்டாடப்பட்டது.  ஊஞ்சல் ஆடிய வாறு குழந்தை வடிவில்  பக்தர்களுக்கு காட்சி கொடுத்தாள் அம்பிகை பாலா.  

-யாழினி சோமு