அரண்மனை 4: திரைவிமர்சனம்

அரண்மனை 4: திரைவிமர்சனம்

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, வெற்றி வரிசையில் நான்காவதாக வெளியாகி இருக்கிறது அரண்மனை 4.

சுந்தர் சியின் தங்கையாக தமன்னா,  பத்து ஆண்டுகளுக்கு முன், வீட்டை வெளியேறி பெற்றோறை எதிர்த்து  காதல் திருமணம் செய்து கொள்கிறார் . அதன் பிறகு அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் தமன்னாவும் அவரது கணவரும் மரணமடைந்த தகவல் அண்ணன் சுந்தர்.சி.க்கு கிடைக்கிறது.

தங்கை வசித்த அரண்மனைக்கு, அத்தை கோவை சரளாவுடன்  செல்கிறார் சுந்தர் சி.இருவர் மரணத்துக்குக் காரணம் என்ன…  இருவரின் குழந்தைக்கும் உயிர் ஆபத்து இருப்பதற்குக் காரணம் என்ன என்று சுந்தர் சி ஆராய்வதும், அந்த குழந்தையை காப்பாற்றினாரா என்பதும்தான் கதை.

ஏற்கனவே வந்த அரண்மனை படங்களைப் போலவே இந்தக் கதையும் இருந்தாலும் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்து இருக்கிறார்கள். தவிர, காட்சிகள் சுவாரஸ்யமாக நகர்வதால், ரசிக்க முடிகிறது.குறிப்பாக  நிலத்திலும் நீரிலும் வாழும் ‘பாக்’ என்ற அமானுஷ்ய தீயசக்தி பற்றி அதிரவைக்கும்படிச் சொல்லி இருக்கிறார்கள்.

அதாவது வடநாட்டில் இருக்கும் பாக் எனும் பேய், அங்கிருந்து தமிழ்நாட்டு கிராமத்துக்கு வருகிறது.  ஒரே தேதியில் பிறந்தவர்களை கொல்கிறது. இதை சுந்தர் சி தடுத்து நிறுத்துவதை ரசிக்கும்படி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.பொதுவாக, அரண்மனை வரிசை படங்களில் கவர்ச்சி, குத்து டான்ஸ், காதல் போன்றவை இருக்கும். இதில் அவற்றைத் தவிர்த்திருப்பது ப்ளஸ்.

படத்தின் முடிவில் குஷ்பு மற்றும் சிம்ரன் ஆடும் அதிரடி ஆட்டம் சூப்பர்.

சுந்தர் சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. இதிலும் யோகி பாபு, வி.டி.வி. கணேஷ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், லொள்ளு சபா சேசு என்று பெரிய காமெடி டீம் இருக்கிறது. ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.

குறிப்பாக கோவை சரளாவை ஒன் சைடாக காதலிக்கும் சேசுவின் காமெடி, செம ரகளை.

திகிலூட்டும் அரண்மனை, அமானுஷ்ய காடு, அரக்கன் என கலை இயக்கத்தில் பிரமிக்க வைத்து உள்ளனர். அதே போல சிஜி காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.

சுந்தர் சி, ராசி கண்ணா, தமன்னா, (வில்லன்) ராமச்சந்திர ராஜூ என அனைவருமே அலட்டிக்கொள்ளாமல் நடித்து ரசிகர்களை ஈர்க்கின்றனர்.

குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே அவர்களைக் காப்பாற்ற தமன்னா எடுக்கும் முயற்சி, நெகிழ வைக்கிறது.

ஹிப்ஹாப் தமிழா இசை, படத்துக்கு பலம்.  பேய் வந்து போகும் காட்சிகளில் அதிரவைத்து உள்ளார். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியின் உழைப்பு பாராட்டத் தக்கது. காடுகள், இருளில் நடக்கும் காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்து உள்ளார். பென்னி ஆலிவர் எடிட்டிங்கும் சிறப்பாக அமைந்துள்ளது.

அரண்மனை 4 – குடும்பத்துடன்  பார்த்து ரசிக்கலாம்.

-யாழினி சோமு

Related Posts